'# கொலை முயற்சி வழக்கில் காடுவெட்டி குரு கைது: பழி வாங்கும் செயல்: டாக்டர் ராமதாஸ் கண்டனம் # என்.எல்.சி. ஊழியர்கள் போனஸ் விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி # அணுசக்தி ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்றுவோம்: மத்திய அரசு திட்டவட்ட அறிவிப்பு # இடையூறுகளை சந்தித்தாலும் சேதுசமுத்திர திட்டம் நிச்சயம் நிறைவேறும்: முதலமைச்சர் கருணாநிதி # அணுசக்தி ஒப்பந்த பிரச்னையில் மத்திய அரசுக்கு இடதுசாரிகட்சிகள் 7ம் தேதிவரை கெடு # ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து போராட்டம் #'


கும்பம்: பல வழிகளிலும் ஆதாயம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
உங்கள் ராசிக்கு 11-ல் குரு இருப்பது விசேடமாகும். ராசிநாதன் சனியைக் குரு பார்ப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் உங்கள் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். மனத்திற்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். பண வரவு கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். தெய்வப் பணிகள் நிறைவேறும். மக்களாலும், உடன் பிறந்தவர்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் அனுகூலம் உண்டாகும். எதிர்ப்புக்கள் குறையும். பல வழிகளிலும் ஆதாயம் வந்து சேரும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானம், ஆன்மிகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். மகப்பேறு பாக்கியம் கிட்டும். ஜன்ம ராசியில் ராகுவும், 7-ல் கேதுவும் இருப்பதால் சிறுசிறு இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்பட்டு விலகும். அலைச்சலைத் தவிர்க்க இயலாது. மே 3-ஆம் தேதி முதல் ராகு 12-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. கேது 6-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். வீண் செலவுகளும் இழப்புக்களும் உண்டாகும். பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு கூடும். எதிர்ப்புக்கள் விலகும். கடல் வாணிபம் லாபம் தரும். மே 10 முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை குரு வக்கிர நிலையில் உலவுவதால் அவரால் விளைந்துவந்த சுபபலன்கள் சற்று குறையும். டிசம்பர் 9 முதல் குரு 12-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. விரும்பத்தகாத இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புத் தேவை. மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.

ஜனவரி மாதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். முக்கியப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். 19-ஆம் தேதி முதல் கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும்.

பிப்ரவரி மாதத்தில் வாழ்க்கைத்துணைவரால் சங்கடம் ஏற்படும். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. பொருளாதார நிலை சீராகவே இருந்துவரும். சுப காரியங்கள் நிகழும். வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் உண்டாகும். மக்களால் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். தந்தையாலும் அரசாங்கத்தாராலும் அனுகூலமிராது.

மார்ச் மாதத்தில் சுபச் செலவுகள் கூடும். அலைச்சலால் உடல் அசைதி ஏற்படும். கலைஞர்களுக்கு மாமூலான வளர்ச்சி தடைப்படாது. வியாபாரத்தில் முழுக்கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

ஏப்ரல் மாதத்தில் குடும்பத்தில் குதூகலம் கூடும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பண வரவு கூடும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். பெற்றோராலும், வாழ்க்கைத்துணைவராலும் அனுகூலம் ஏற்படும். மாதப் பின்பகுதியில் புதிய பதவி, பட்டம் ஆகியவை தேடிவரும். வியாபாரத்தில் கவனம் தேவை.

மே மாதத்தில் தகவல் தொடர்பு ஆக்கம் தரும். அரசுப் பணிகளில் அனுகூலமான போக்கைக்காணலாம். சொத்துக்கள் சேரும். எதிரிகள் விலகிப் போவார்கள். வியாபாரம் பெருகும். பொருளாதார நிலை திருப்தி தரும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. மாதப் பின்பகுதியில் புதிய பொருட்கள் சேரும். அலைச்சல் கூடும்.

ஜூன் மாதத்தில் நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். சுப காரியங்கள் நிகழும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். கடல் வாணிபம் லாபம் தரும். 21-ஆம் தேதி முதல் வாழ்க்கைத்துணைவரால் பிரச்னைகள் சூழும். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை.

ஜூலை மாதத்தில் வியாபாரிகளுக்கு லாபம் கூடும். மாணவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். மாதர்களது எண்ணம் ஈடேறும். பொருளாதார நிலை உயரும். 7-ஆம் தேதி முதல் சுக்கிரன் 6-ஆமிடம் மாறுவதாலும், கேதுவுடன் சேருவதாலும் கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் பிரச்னைகள் கூடும். கேளிக்கை, உல்லாசங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆடவர்களுக்குப் பெண்களால் சோதனைகள் உண்டாகும். வாழ்க்கைத்துணைநலனில் கவனம் தேவை. பயணத்தால் சங்கடத்திற்கு ஆளாக நேரலாம். உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும்.

ஆகஸ்ட் மாதத்தில் பொருள் வரவைக் காட்டிலும் செலவுகள் கூடும். மனத்தில் ஏதேனும் சலனம் உண்டாகும். வீண் செலவுகளைத் தவிர்ப்பதுடன், கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழகலாகாது. செய்தொழிலில் முழுக்கவனம் தேவை. பயணத்தால் சங்கடம் உண்டாகும். 24-ஆம் தேதி முதல் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். சங்கடங்கள் குறையும்.

செப்டம்பர் மாதத்தில் குரு வக்கிர நிவர்த்தி பெறுவதால் நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். பொருளாதார நிலை உயரும். மன மகிழ்ச்சி கூடும். உடன் பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். மக்கள் நலம் சீராக இருந்துவரும். கலைஞர்களுக்கு மாதப்பின்பகுதியில் வெற்றி வாய்ப்புக்கள் கூடும். இயந்திரப் பணியாளர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. பயணத்தின்போது பாதுகாப்பு தேவை.

அக்டோபர் மாதத்தில் சுகம் கூடும். பிரச்னைகள் விலகும். எதிரிகள் குறைவார்கள். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு கூடும். நற்காரியங்களில் பங்கு கொள்வீர்கள். வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவை. மாதப் பின்பகுதியில் சுக்கிரனும் செவ்வாயும் பரிவர்த்தனை பெறுவதால் தான, தருமப் பணிகளில் ஈடுபாடு கூடும். செய்தொழிலில் வளர்ச்சி காணலாம். வியாபாரம் சிறக்கும். மக்களால் அனுகூலம் உண்டாகும்.

நவம்பர் மாதத்தில் வெற்றி வாய்ப்புக்கள் கூடும். எதிர்ப்புக்கள் விலகும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிட்டும். பல வழிகளிலும் ஆதாயம் வந்து சேரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும். மன மகிழ்ச்சி நிறைந்திருக்கும். முக்கிய எண்ணங்கள் நிறைவேறும்.

டிசம்பர் மாதத்தில் கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். வியாபாரம் செழிக்கும். மாணவர்களது நிலை உயரும். 9-ஆம் தேதி முதல் குரு 12-ஆமிடம் மாறுவதால் செலவுகள் கூடும். குடும்பநலனில் கவனம் தேவைப்படும். விரும்பத்தகாத இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை உண்டாகும். சூரியன், செவ்வாய் ஆகியோர் வலுத்திருப்பதால் அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 6.

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.

பரிகாரம்: சர்ப்ப சாந்தி செய்வது நல்லது. விநாயகரையும் துர்க்கையையும் வழிபடுங்கள்.

 


 

Contact Us