.jpg)
அர்ச்சனா - மருத்துவக் கல்லூரி மாணவி. புதுவையில் வசித்துவரும் இவர் உயரம் தாண்டுதல் போட்டியில் சாதனைப் படைத்த பெண். கடந்த 2009-ம் ஆண்டு தேசிய அளவில் தங்கம் வென்று புதுவைக்குப் பெருமை சேர்த்து உள்ளார். வியர்க்க விறுவிறுக்க பயிற்சியில் இருந்தவர், ரிலாக்ஸ் ஆனதும் பேசினேன்.
''சின்ன வயசில் இருந்தே ஓட்டப் பந்தயத்திலும் உயரம் தாண்டுதலிலும் ஆர்வம் அதிகம். ஸ்கூல் படிக்கும்போது நிறையப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் ஜெயிச்சிருக்கேன். என் அப்பா உயரம் தாண்டுதலில் சிறந்த வீரர். அவர்தான் நான் எட்டாவது படிக்கும்போது இந்த விளையாட்டைக் கற்றுத் தந்தார். இந்த விளையாட்டுக்கு அடிப்படையே வேகமும் உயரமும்தான். நான் ஓட்டப் பந்தயத்தில் சாம்பியன் கிறதால இந்த விளையாட்டைக் கத்துக்கிறது ரொம்ப ஈஸியா இருந்துச்சு.

சென்னை, திருவனந்தபுரம் மாதிரியான பெரிய நகரங்களில் உயரம் தாண்டுதல் விளையாட்டு பயிற்சி எடுக்க மைதானங்கள், கோச்னு நிறைய வசதிகள் இருக்கு. ஆனா, புதுவையில் அப்படி இல்லை. அதனால், என் அப்பா சுகுமாரே எனக்குப் பயிற்சியாளரா மாறிட்டார். என் பதினஞ்சாவது வயசில் தென் மண்டல அளவில் நடந்த போட்டியில் முதன்முதலில் கலந்துகிட்டப்ப எனக்கு ரொம்பப் பயமா இருந்தது. காரணம், எல்லோரும் என்னைவிட பெரியப் பொண்ணுங்க. 'இவங்க கிட்ட போட்டி போட்டு நம்மால் ஜெயிக்க முடியுமா?’னு மனசு தளர்ந்துட்டேன். அப்பாதான், 'இவ்வளவு சின்ன வயசில் இவங்ககூடப் போட்டி போடுறதே பெரிய அனுபவம்’னு சொல்லி என்னை ஊக்கப்படுத்தினார். அவர் தந்த நம்பிக்கையில்தான் அந்தப் போட்டியில் நான் வெள்ளிப் பதக்கம் வென்றேன். அப்ப நான் தாண்டின உயரத்தின் அளவு மூன்று மீட்டர்தான்.
அதன் பிறகு 2009-ல் நடந்த ஜூனியர் நேஷனல் போட்டியில் கலந்துகிட்டேன். என்னேட கடின உழைப்புக்கும் என் அப்பாவுடைய அர்ப்பணிப்புக்கும் கிடைச்ச பரிசாத் தங்கப் பதக்கம் வென்றேன். இருபது வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் அந்த வருடம் தேசிய அளவில் நான்தான் முதல் இடம். அப்ப நான் தாண்டின உயரம் 3.40 மீட்டர்.

எந்த அளவுக்கு உயரம் தாண்டுகிறோமோ அந்த அளவுக்கு ஆபத்தும் இருக்கு. மெத்தையில விழாம கொஞ்சம் தள்ளி விழுந்தோம்னா உடனே கை, கால் முறிவுதான். கல்லூரிச் சேர்ந்ததுக்கு அப்புறம் கல்லூரியே எனக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்தது. புதுவையில் உயரம் தாண்டுதல் போட்டிக்குத் தேவையான மெத்தைகள் இல்லாததால், நீளம் தாண்டுதலுக்குப் பயன்படுத்தும் மெத்தையையே இதுக்கும் பயன்படுத்தினேன். சென்னையைச் சேர்ந்த கோச் ஒருத்தர் 'இது ரிஸ்க்’னு என்னை எச்சரிச்சார். ஆனால், வேறு வழி இல்லையே?
அவர் சொன்னது மாதிரியே கடந்த வருடம் கீழே விழுந்து காலில் பலமான அடி. ஒரு வருஷமா விளையாட முடியலை. அந்த ஒரு வருஷத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. 'எப்ப கால் சரியாகும், எப்ப பயிற்சிக்குப் போகலாம்’னு ஆர்வமா இருக்கும். இப்போதான் கால் சரியாகி மீண்டும் பயிற்சி எடுக்க ஆரம்பிச்சிருக்கேன்'' என்று சொல்லும் அர்ச்சனா, ஒரு அழகான சின்னப் புன்னகைக்குப் பிறகு சொல்கிறார்.

''நிறையப் பரிசுகள் வென்றது, தேசிய அளவில் முதல் பரிசுன்னு பல சந்தோஷமான விஷயங்கள் இருந்தாலும் எனக்கு இருக்கும் ஒரே ஒரு சின்ன, இல்ல இல்ல... பெரிய வருத்தம் புதுச்சேரியில இந்த விளையாட்டை விளையாட வேறு எந்தப் பெண்ணும் இல்லைங்கிறதுதான்'' என்கிறார்.
அர்ச்சனாவின் ஆதங்கம் சீக்கிரம் தீரட்டும்!
- கட்டுரை, படங்கள்: ஆ.நந்தகுமார்








COMMENT(S): 3
கையில் ஒரு கோடி. ஆர் யு ரெடியில். நீங்கள் விளையாடுனீர்கள். அதில் வென்றால் இதில் நிறைய செய்யவேண்டும் என்றும் நினைத்தீர்கள். ஆதங்கம் நிறை வேறட்டும்.
சாதனைப் படைத்த, பெரியப் பொண்ணுங்க., கல்லூரிச் சேர்ந்ததுக்கு அப்புறம்
சந்திப் பிழைகளைக் கவனித்துச் சரி செய்ய வேண்டுகிறேன்.
It is pole vault-not high jump. They used oak bamboo-not iron- because of Injury.