
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் பேராசிரியராகப் பணிபுரிகிறார் கல்பனா. http://sekalpana.blogspot.in என்ற வலைப்பூவில் தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாடு சார்ந்த பதிவுகளை எழுதிவருகிறார். அவருடைய வலைப்பூவில் இருந்து...
அங்கே போகாதே!
உளவியலின் தந்தை என்று போற்றப்படுபவரான சிக்மண்ட் ஃப்ராய்டு ஒருமுறை தன் மனைவியுடனும் மகனுடனும் வெளியே சென்றார். குழந்தையைச் சற்று விளையாட விட்டுவிட்டு ஃபராய்டும் அவர் மனைவியும் தீவிரமாக எதைப் பற்றியோ பேசிக்கொண்டு இருந்தார்கள். பேசிக்கொண்டு இருந்த ஆர்வத்தில் விளையாடிக்கொண்டு இருந்த மகனைக் கவனிக்க மறந்தனர். அவர்களுடைய உரையாடல் முடிந்து விளையாடிய பையனைத் தேடினால் காணவில்லை. இருவரும் சேர்ந்து குழந்தை எங்கே போயிருப்பான் என்று சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தனர். கண்டுபிடிக்க முடியவே இல்லை.
அப்போது தன் மனைவியைப் பார்த்து ஃப்ராய்டு கேட்டார்,' நீ அவனை ஏதாவது ஒரு இடத்திற்குப் போக வேண்டாம் என்று கூறினாயா?' என்று கேட்டார். 'ஆமாம். அருகில் உள்ள நீருற்று பக்கத்தில் மட்டும் 'போகாதே’ என்று சொன்னேன்' என்றார். இருவரும் அந்த இடத்திற்குச் சென்று
பார்த்த போது, நீருற்றின் அருகே அவர்களது மகன் விளையாடிக் கொண்டிருந்தான். 'இங்கேதான் அவன் இருப்பான் என்று எப்படி யூகித்தீர்கள்?'' என்று தன் கணவனைப் பார்த்துக் கேட்டார். அதற்கு அவர் சொன்னார் ''நமது குழந்தைகள் நாம் எங்கு போகக் கூடாது என்று சொல்கிறோமோ அங்குதான் முதலில் போவார்கள். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் அப்படித்தான்'' என்றார்!
சோளக் கூழும் கடலைத் தொவையலும்!

சோளத்தை முதல் நாளே ஊறவைத்து மறுநாள் உரலில் இட்டு இடித்து மாவாகவும் பாதி குருணையாவும் எடுத்துக்கொள்ளும். அடுப்பில் பானையில் வெந்நீரை வைத்து அதில் குருணையாக வைத்திருக்கும் சோள அரிசியைப் போட்டு, சிறிது நேரம் கழித்து, இடித்த மாவைக் கரைத்து அதில் ஊற்றி, உப்புச் சேர்த்து நன்றாக வெந்தவுடன் இறக்கி வைத்து பெரிய குண்டானைத் தலைக்குப்புறப் போட்டு கவிழ்த்து வைத்துவிடுவார். அடுத்த நாள் காலையில் அதன்மேல் ஏடுபோல் படிந்து இருக்கும். அதை மேலாக எடுத்துவிட்டு, சோளக்கூழை எடுக்கும்போது கட்டிக் கட்டியாக கேக்போல இருக்கும். அதனு டன் கடலைத் துவையலைச் சேர்த்துச் சாப்பிட்டால் அப்பப்பா... அதன் சுவையைச் சொல்லிமாளாது. சிலர் இதனுடன் கேழ்வரகு மாவையும் சேர்த்துக் காய்ச்சிவைப்பார்கள்!
தமிழர் தாம்பூலம்!

தமிழர்களுடைய பழக்கவழக்கங்களில் ஒன்று தாம்பூலம் தரித்துக்கொள்ளுதல். தாம்பூலம் தரிப்பதால் வாய்க்கு நறுமணம் ஏற்படும். முகத்துக்கு அழகையும் ஒளியையும் உண்டாக்கும். தாடை, பல், நாக்கு இவற்றின் அசுத்தங்களைப் போக்கும். வாயில் மிகுதியாக உமிழ் நீர் சுரப்பதைத் தடுக்கும். துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு, உவர்ப்புச் சுவைகள் ஒருங்கே இருப்பதால் எளிதில் உண்ட உணவு செரிக்கின்றது. இதயத்துக்கு நலம் பயக்கின்றது. தொண்டை நோய்களைப் போக்குகின்றது.
தாம்பூலத்தை எப்போது போட்டுக்கொள்ளவேண்டும் என்றும் நம் முன்னோர் வரையறுத்து உள்ளனர். தூங்கி எழுந்தவுடன், உணவு உண்ட பின், குளித்த பிறகு தாம்பூலம் தரித்துக்கொள்ளலாம். அதேபோல காலை நேரத்தில் தாம்பூலம் போடும்போது பாக்கைச் சிறிது கூடுதலாகவும் மதிய நேரத்தில் போடும்போது கத்தைக் காம்பைச் சிறிது கூடுதலாகவும் இரவு நேரத்தில் சுண்ணாம்பைச் சிறிது கூடுதலாகவும் வெற்றிலையுடன் சேர்த்துப் போடவேண்டும்!
சேலையா சீலையா?

இன்று வழக்கத்தில் நாம் சொல்லும் சேலை என்ற சொல்லாட்சி சரியானதுதானா? என்பதைப் பார்த்தால் அது தவறு என்றே சொல்லத் தோன்றுகிறது. நம் கிராமப்புறங்களில் சீலைத் துணி, சீலைக்காரி, சீலையைக் கிழித்துக் கொண்டாத் திரிந்தேன்?, சீலைப் பேன் என்று வழங்கி வருவதைக் கேட்கலாம். சீரை என்பது பழஞ்சொல். 'ஆள்பாதி ஆடை பாதி’ என்னும் தமிழ்ச் சொல்லுக்கு மூலமாவது சீரை என்னும் சொல். ஒருவனுக்குச் சிறப்பாக அமைந்தது சீரை எனப்பட்டது. 'சீரை சுற்றித் திருமகள் பின் செல்ல’ எனபது கம்பர் வாக்கு. சீரை என்னும் சொல் திரிந்து சீலையாக நின்றது!








COMMENT(S):