கீழ்ப்பழநி ஸ்ரீதண்டாயுதபாணி!
திருச்சி சமயபுரத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது இருங்களூர். இங்கிருந்து அரியலூர் நோக்கிச் செல்லும் சாலையில், சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குமுளூர். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து குமுளூருக்கு டவுன் பஸ் வசதி (103 ஏ) உள்ளது. இந்தக் கிராமத்தில், அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீபாலதண்டாயுதபாணி சுவாமி! ஒரு காலத்தில், கண்டமங்கலம் எனும் கிராமத்தில்தான் ஸ்ரீபாலதண்டாயுதபாணியின் விக்கிரகம் இருந்ததாம்! அப்போது, திடீர் வெள்ளத்தில் அந்த ஊரே மூழ்கும் நிலையில்... ஊர்மக்கள் சிலர், ஸ்ரீபாலதண்டாயுதபாணியின் விக்கிரகத்தை எடுத்துக் கொண்டு, அந்த ஊரை விட்டுக் கிளம்பிச் சென்றனர். வழியில் சிறியதொரு மலையின் அடிவாரத்தில் அனைவரும் இளைப்பாற... அசரீரியாக வந்த உத்தரவையடுத்து, மலையில் சிறிதாகக் கோயில் அமைத்து, விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினார்கள், என்கிறது ஸ்தல வரலாறு!