Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தூக்குக் கயிறில் மருதுபாண்டியன்!

ஐந்து பேர் கொலை... அதிரடித் தீர்ப்பு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் இருக்கும் மேலைச்சிவபுரி மக்களுக்கு கடந்த 19.06.2009 அன்று கறுப்பு நாளாகவே விடிந்தது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மருதுபாண்டியன் என்பவர் சுகுமாரி, சரோஜா, பழனியப்பன், அழகன், கோபால் என்று அடுத்தடுத்து ஐந்து பேரை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலைசெய்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்தார். அந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம், 'சாகும் வரையில் மருதுபாண்டியனை தூக்கில் இடவேண்டும்’ என்று, கடந்த 23-ம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருக்கிறது. 

மேலைச்சிவபுரி கிராமத்துக்குச் சென்றோம். பாதிக்கப்பட்ட  குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் யாரும் இப்போது அந்த ஊரில் இல்லை. மருதுவின் பெரியப்பா மகன் ராஜ்குமாரிடம் பேசினோம். ''எனக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து மருது இந்த ஊரிலேயே இல்லை. அவங்க அக்காவை கும்பகோணத்தில் கல்யாணம் செஞ்சு குடுத்துருக்காங்க. அதனால், அவனும் கும்பகோணத்துக்கே போய் தங்கிட்டான். அங்கே மெடிக்கல் ரெப் வேலை பார்த்தான். பிறகு, எங்க அத்தைப் பொண்ணு விஜயபாமாவைக் கல்யாணம் கட்டிக்கிட்டு குடும்பத்தோட திருப்பூர் பக்கம் போயிட்டான். வருஷத்துக்கு ஒரு தடவை இந்த ஊருக்கு வர்றதே அபூர்வம். அவனுக்கு தண்ணி, கஞ்சா அடிக்குற பழக்கமும் எப்படியோ வந்துடுச்சு. எந்த நேரம் பார்த்தாலும் பைத்தியம் பிடிச்சவன் மாதிரியே இருப்பான். இந்தக் கொலை சம்பவம் நடக்குறதுக்கு 10 நாள் முன்னாடிதான் இந்த ஊருக்கே வந்தான்.

அன்னிக்கு காலையில் 8.30 மணிக்குத் தொடங்கி அடுத்த கால் மணி நேரத்தில் அஞ்சு பேரை அநியாயமா அடிச்சுக்  கொன்னுப்புட்டான். அப்புறம் ஊரே ஒண்ணு சேர்ந்து அவனைப் பிடிச்சி பொன்னமராவதி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைச்சோம். சம்பந்தப்பட்டவங்க தப்பா நினைப்பாங்கன்னு நாங்க அந்த வழக்கு தொடர்பான எந்த வேலையும் பார்க்கலை. இனிமேத்தான் மேல் முறையீட்டுக்குப் போகணும். செத்தவங்கள்ல சரோஜாங்கிறவங்க எங்க ஆயா. ஆனா, அவன் சுயபுத்தியோட அந்தக் கொலைகளை செய்யலைங்க...'' என்றார்.

அந்த ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், ''கொலை நடக்குறதுக்கு முதல்நாள், திருப்பூருக்குப் போகணும்னு மருது சொன்னான். நான்தான் இங்கே இருந்து பஸ் ஏத்திவிட்டேன். 100 ரூபாயை கண்டக்டர்கிட்ட குடுத்து, 'டிக்கெட் காசு போக மிச்சத்தை அவன்கிட்ட குடுங்க’ன்னு சொன்னேன். அடுத்த ஸ்டாப்பிங்லேயே பஸ்ல இருந்து இறங்கி வந்த மருது, 'ஏன் என்கிட்ட காசைக் குடுக்காம கண்டக்டர்கிட்ட குடுத்தே...’ன்னு என்னை அடிக்க ஆரம்பிச்சிட்டான். ஊரில் இருந்தவங்கதான் அவன்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்தி ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போனாங்க. அடுத்த நாள் காலையில் என்னைத் தேடி வீட்டுக்கே வந்துருக்கான். அப்ப நான் தூங்கிகிட்டு இருந்தேன். எங்க வீட்டுல வாடகைக்கு குடி இருந்த சுகுமாரி வாசல் தெளிச்சிட்டு இருந்தாங்க. மருதுவைப் பார்த்ததும் என்ன வேணும்னு கேட்டிருக்காங்க. அவன் எதுவுமே பேசாம, கையில் வைச்சிருந்த உருட்டுக்கட்டையால அவங்க தலையில் ஓங்கிப் போட்டிருக்கான். மண்டை உடைஞ்சு அந்த இடத்துலேயே அவங்க இறந்துட்டாங்க. இதைப் பார்த்த பக்கத்து வீட்டில் இருந்த சரோஜா, 'ஏன்டா அவளை அடிக்கிறே’ன்னு கேட்டாங்க. அவங்களையும் ஒரே அடியில் கொன்னுட்டான். அப்புறம் அந்தக் கட்டையோட ரோட்டில் நடந்திருக்கான். அவனைப் பார்த்து, 'எதுக்கு கட்டையோட போறே...’னு கேட்ட இன்னும் மூணு பேரையும் அடிச்சுக் கொன்னுட்டான். நான் சாக வேண்டியதுக்குப் பதிலா அஞ்சு பேரு செத்துட்டாங்க'' -நடுக்கத்துடனே நடந்த சம்பவங்களை விவரித்தார்.

திருப்பூரில் இருந்த  மருது பாண்டிய னின் மனைவி விஜய பாமாவிடம் பேசினோம். ''நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பி கல்யாணம் செஞ்சிக்கிட்டோம். அன்பு காட்டுறதுல அவருக்கு ஈடா யாருமே இருக்க முடியாது. அந்தளவுக்கு என்கிட்ட பாசமா இருப்பார். எங்களுக்கு தேவவிக்னேஷ்னு ஒரு பையன் இருக்கான். அவன் மேலேயும் அவருக்கு அளவு கடந்த பாசம். கல்யாணம் ஆன புதுசுலேயே தண்ணி அடிக்கும் பழக்கம் இருந்துச்சு. கண்டிச்சு பாத்தேன் கேக்கல. அதனால அவரா திருந்தி வரட்டும்னு விட்டுட்டேன். திருப்பூரில் இருந்து திடீர் திடீர்னு ஊருக்கு கிளம்பிருவார். 10 நாள்ல திரும்பி வந்துருவார். கொலை நடந்தப்பவும் அப்படித்தான் யாருகிட்டயும் சொல்லாமத்தான் அந்த ஊருக்குப் போனார். எப்பவும் போல திரும்பிருவார்னு நானும் விட்டுட்டேன். அதுக்குள்ள என்னென்னமோ நடந்து போச்சு. இப்ப என்னன்னா அவருக்குத் தூக்குன்னு தீர்ப்பு சொல்லி இருக்காங்க. செத்தவங்க யாருமே எங்களுக்கு எதிரிங்க இல்லை. பாதிக்கப்பட்ட அத்தனை குடும்பத்தினர்கிட்டேயும் மன்னிப்பு கேட்டுக்குறேன்'' என்றவர் அதற்கு மேல் பேச முடியாமல் அழத்தொடங்கி விட்டார்.

இந்த வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் அங்கவியை சந்தித்தோம். ''மருதுவுக்கு மனநலப் பாதிப்பு இருந்தது என்று எதிர்தரப்பில் வாதத்தை முன்வைத்தார்கள். ஆனால்,  போதிய சாட்சியங்களோடு அதை நிரூபிக்கவில்லை. அதனால், மருது செய்த கொலைகளுக்குத் தண்டனை கிடைத்திருக்கிறது'' என்றார்.

மருதுவின் அப்பீல் மீது உயர்நீதிமன்றம் எடுக்கும் முடிவைப் பொறுத்து அமையும் இந்தக் குடும்பத்தின் எதிர்காலம்!

- வீ.மாணிக்கவாசகம், படங்கள்: சிவபாலன்

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
முதல் இடம் விழுப்புரம்... இரண்டாவது விருதுநகர்
''மின்சாரம் திருடச் சொன்னாரா காந்தி?''

எடிட்டர் சாய்ஸ்