Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கால்களடி நீ எனக்கு...காந்தமடி நான உனக்கு !

படங்கள்: வீ.சிவக்குமார், ஆர்.குமரேசன்

 

தேவைக்கும் அதிகமான பணம், வசதியான வீடு, ஆடம்பர கார் என எல்லாம் இருந்தாலும், அன்பு இல்லாததால் எதுவும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் சில தம்பதிகள். ஆனால், இவை எதுவுமே இல்லை என்றாலும், அன்பு என்கிற ஒற்றை மந்திரத்தை மட்டும் வைத்துக் கொண்டு, மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தும் கணவன் - மனைவிகள், காணக் கொடுத்து வைத்தவர்கள். அப்படி ஒரு தம்பதிதான், திண்டுக்கல்லைச் சேர்ந்த காமு - கிருஷ்ணன்.

தனது 18 வயதில், மாற்றுத்திறனாளியான தாய்மாமன் கிருஷ்ணனை கைப்பிடித்த காமு, உறவுகளின் கேலி, கிண்டல்களை புறம்தள்ளி, நடக்க முடியாத கணவருக்கு, கடந்த 35 ஆண்டுகளாக கால்களாக இருக்கிறார். இந்த 60 வயதிலும் குடும்பத்துக்காக உழைக்கிறார் கிருஷ்ணன். மூன்று பெண்கள், இரண்டு பையன்கள் என்று குழந்தைகள் பெற்று, அவர்களைக் கரையேற்றியிருக்கும் இவர்களின் வாழ்க்கை எங்கும் வழிந்தோடுகிறது... காதல். ஏழ்மை இல்லறத்தில் எழில் சேர்த்திருக்கிறது, ஒருவர் மேல் ஒருவர் கொட்டும் அன்பு.  

மதியவேளையன்றில்... பட்டறையில் கணவருக்கு காமு உணவு பரிமாறிக்கொண்டிருக்க, நேசமும் நன்றியுமாக தங்கள் கதை பேசினார் கிருஷ்ணன்...

''போலியோ பாதிப்பால, சின்ன வயசுல இருந்தே நடக்க முடியாது. காமு, எங்கக்கா பொண்ணு. இவளோட அக்காவை எங்க அண்ணன் கல்யாணம் செய்துகிட்டார். எனக்கு காமுவைப் பெண் கேட்கலாம்னு வீட்டுல பேசினப்போ, ஒரு பொண்ணோட வாழ்க்கையில நம்மளோட சுமையை இறக்கி வைக்க வேண்டாம்னு தயங்கினேன். 'நாம ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா இருப்போம்’னு முழு மனசோட என்னைக் கல்யாணம் பண்ணிக்க முன் வந்துச்சு காமு. தாலி கட்டுன அன்னிக்கு முடிவு பண்ணினேன்... என் பொண்டாட்டியை கடைசி வரைக்கும் சந்தோஷமா வெச்சுக்கணும்னு'' என்று கிருஷ்ணன் சொன்னபோது, வெட்கம் காமுவின் முகத்தில்.

''இன்னிவரைக்கும் என்னை ஒரு சுடுசொல் சொன்னதில்லை, அலட்சியப்படுத்தினதில்லை. ஆரம்பத்துல இருந்த அன்பும், அரவணைப்பும் இந்த 35 வருஷத்துல துளியும் குறையல. ஆணி தயாரிக்கறது, மாட்டுக்கு லாடம் அடிக்கறதுனு 'கொல்லு’ வேலை செய்வாரு. கல்யாணமான புதுசுல ஒரு கம்பெனியில வேலை செஞ்சுட்டு இருந்தாரு. பிறகு, சொந்தமா பட்டறை போட்டு ஆணி மாதிரி சின்ன, சின்ன பொருளுகளை தயாரிச்சு வித்துகிட்டு இருந்தாரு. ஒரு கட்டத்துல அவரால அலைய முடியாததால பட்டறையை மூடிட்டோம். ஏழைக் குடும்பத்துல அஞ்சு புள்ளைகளையும் பெத்து வளர்க்க எத்தனை பாடுகள் இருந்திருக்கும்? ஆனா, எந்தச் சூழ்நிலையிலும் என்னை வேலைக்குப் போகவிட்டதில்லை. 'உன்னக் கஷ்டப்படாம பார்த்துக்குவேன் காமு’னு சொல்லிச் சொல்லியே, தனியா உழைச்சு என் குடும்பத்தைக் கரையேத்தினார்.

மூணு பொண்ணுக, ரெண்டு பசங்கள பெருசா படிக்க வைக்க முடியலைனாலும், நல்லபடியா வளர்த்து எல்லாருக்கும் கல்யாணத்தை முடிச்சுட்டோம். புள்ளைகளோட புள்ளைகளா என்னையும் ஒரு புள்ளையாதான் பார்த்துக்குவாரு. கொஞ்சம் மொகம் மாறி இருந்தாலும், 'என்ன காமு..?’னு ஆயிரம் தடவை கேட்டு மறுகுவாரு. திருச்செந்தூர், வேளாங்கன்னி, கோவானு டூருக்கெல்லாம்கூட கூட்டிக்கிட்டுப் போயிருக்காரு!'' என்று காமு முகம் மலர,

''நீதான் என்னைக் கூட்டிட்டுப் போன... என் காலா இருந்து!'' என்று இன்னும் மலர்த்துகிறார் கிருஷ்ணன்.

''காலில்லாத எனக்கு, காமுதான் சக்கரம். ஆரம்பத்துல நான் மோட்டார் வண்டி வெச்சுருந்தேன். இடையில கொஞ்சம் கஷ்டம் வரவும் அதை வித்து சமாளிச்சோம். இப்போ ஒரு பட்டறையில வேலை பார்த்துக்கிட்டிருக்கேன். வீட்டுல இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரம். தினமும் காலையில காமு என்னை வண்டியில உட்காரவெச்சு தள்ளிட்டுப்போய்... அங்க விடும். வீட்டுக்குப் போய் சமைச்சு மதிய சாப்பாடு எடுத்துட்டு வரும். மறுபடியும் சாயங்காலம் வேலை முடியற நேரத்துக்கு வந்து வண்டியில வெச்சு தள்ளிக்கிட்டு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகும். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஒன்பது கிலோ மீட்டர் என் காலுக்காக அது நடக்குது. துளி சலிப்பில்லாத இந்த அரவணைப்பும், அன்பும்தான் வாழணுங்கிற ஆசையை இந்த அறுபது வயசுலயும் எனக்குக் கொடுக்குது...''

- கண்கள் கசிகிறது கிருஷ்ணனுக்கு.

''துணிமணியிலயோ, வசதி வாய்ப்புலயோ இல்லைங்க வாழ்க்கை. புருஷன், பொண்டாட்டி, புள்ளைங்கனு ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு, போட்டி போட்டு அன்பு வெச்சுக்கிட்டு வாழுற வீடுதான் சொர்க்கம். அப்படித்தான் அவருக்கு நான் துணை, எனக்கு அவரு துணைனு ஓடிக்கிட்டு இருக்கு எங்க வாழ்க்கை... சந்தோஷமா'' என்கிறார் காமு.

''நல்ல வேலையில இருக்குற, சொத்துபத்துள்ள மாப்பிள்ளைகளைத் தேடுற உலகத்துல... நடக்க முடியாம, பணம், காசு இல்லாம இருந்த என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா கஷ்டத்தை அனுபவிக்கணும்னு தெரிஞ்சும் என்னை மனசோட ஏத்துக்கிட்ட, மனசு கோணாம வாழ்ற என் பொண்டாட்டியோட அன்புக்கு முன்னால, இந்த உலகத்துல எல்லாமே எனக்குத் தூசுதான்!'' என்று தானும் சந்தோஷமானார் கிருஷ்ணன்.

விடைபெறும்போது பட்டறையில் உலோகங்கள் மோதிய ஒலி... நமக்கென்னவோ 'பொன்னை விரும்பும் பூமியிலே... என்னை விரும்பும் ஓர் உயிரே’ ராகத்தில் இசைந்ததுபோல் இருந்தது !

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
காதல் 'பொக்கே'!
காதலின் மறுபக்கம் !

எடிட்டர் சாய்ஸ்