Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இதோ...ஒரு காதல் சரணாலயம் !

என்.சுவாமிநாதன், படம்: ரா.ராம்குமார்

 

''நீ ஒண்ணும் பயப்படாதே... சதீஷ் அண்ணாவும், பிரியா அண்ணியும் இருக்காங்க!''

- நாகர்கோவில் வட்டாரக் காதலர்களுக்கு திருமணத்துக்கான நம்பிக்கை மந்திரம் இதுதான்.

ஆம்... உண்மைக் காதலர்களுக்கு நல்ல அரணாகி, 'டும் டும் டும்’ கொட்டவைக்கிறார்கள், நாகர்கோவில் அருகிலுள்ள தாழக்குடி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் - பிரியா தம்பதி. ஐந்து ஆண்டுகளுக்கு முன் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இவர்களது இல்லம்தான், இப்போது காதல் ஜோடிகளின் சரணாலயம்!

எங்கிருந்து விழுந்தது இதற்கு விதை?

''ப்ளஸ் டூ படிச்சப்போ, ரொம்ப அறிவாளியான ஒருத்தன் எனக்கு ஃப்ரெண்ட். ஒரு பொண்ணை உயிருக்கு உயிரா நேசிச்சான். இந்த விஷயம் எப்படியோ பொண்ணு வீட்டுக்குத் தெரிய, சின்ன வயசுலயே அவசர அவசரமா வேற ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க. அதில் இருந்து படிப்பு, ஃப்ரெண்ட்ஸுனு எல்லாத்தையும் விட்டு விலகி நடைபிணமா வாழ்ந்துட்டு இருக்கான் என் ஃப்ரெண்ட். அந்தப் பொண்ணுக்கும் சந்தோஷமான வாழ்க்கை அமையல. அப்போதான் முடிவு பண்ணினேன்... உண்மையான காதலர்களை உயிரைக் கொடுத்தாவது சேர்த்து வைக்கணும்னு. நாளாக ஆக, அதுவே எனக்கான அடையாளமா மாறிப்போச்சு!'' என்ற சதீஷிடம் அவரின் காதல் கதை கேட்டோம். பகிர்ந்தவர்... பிரியா.

''நான் ப்ளஸ் டூ படிச்சுட்டு இருந்தேன். இவர் வீட்டுக்குப் பக்கத்தில்தான் டியூஷன். இவரைப் பத்தி தெரிஞ்சப்போ, ஆச்சர்யமா இருந்தது. ஆனா, அவரே எங்கிட்ட வந்து 'ஐ லவ் யூ’ சொல்வார்னு எதிர்பார்க்கல. நண்பர்களோட காதலுக்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்கறவர், கண்டிப்பா காதல் மனைவியை நல்லா வெச்சுப்பார்னு தோணுச்சு. ரெண்டு வீட்டு சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இப்போ அவர் ஒரு தனியார் நிறுவனத்துல வேலை பார்க்கறார். எங்க பொண்ணு நிஷா, எல்.கே.ஜி படிக்கறா. இதுவரை கிட்டத்தட்ட 40-க்கும் மேல் காதல் திருமணங்களை நடத்தி வெச்சுருக்கார். உள்ளூர்ல மட்டும் 15 ஜோடிகள் இவரால் சேர்ந்திருக்காங்க. கல்யாணத்துக்கு அப்புறம் நானும் இவரோட சேவையில் இணைஞ்சுட்டேன்!'' என்கிறார் புன்னகையுடன்.

''ஏதோ ஆர்வக் கோளாறில், அவசரத்தில் எந்த திருமணத்தையும் நாங்க முடிக்கிறதில்லை. ஆணா இருந்தாலும், பெண்ணா இருந்தாலும்... லைஃப்ல நிச்சயமா யாரையாவது பார்த்து இம்ப்ரஸ் ஆகத்தான் செய்வாங்க. அதை 'இன்ஃபேச்சுவேஷன்'னு இங்கிலீஷ்ல சொல்வாங்க. அதை, காதல்னு சொல்லி எங்ககிட்ட வந்து நிக்கறவங்கள, கவுன்சலிங் கொடுத்து அனுப்பிடுவோம். உண்மையான காதலோட வந்தா... பையனோட வேலை, சம்பளம், பழக்க வழக்கங்கள், பொண்ணோட வயசு, மனசு, திருமண பந்தத்தில் இணைஞ்சு வாழ்க்கையைச் செலுத்துற பொருளாதார பலமும், மனப்பக்குவமும் அவங்களுக்கு இருக்கா - இப்படி, பல விஷயங்களையும் பரிசீலனை செய்துதான் முடிவெடுப்போம்... கிட்டத்தட்ட பெற்றோர்களின் பொறுப்போட.

இந்த அம்சங்களையும் தாண்டி சாதி, மதம், குடும்ப கௌரவம்னு வீண் பொருத்தங்களையும் எதிர்பார்த்து வீம்பு பண்ணுவாங்க பெற்றோர். அப்படி பிரச்னை பண்ணும்போது, சமரச முயற்சியைத்தான் முதல்ல எடுப்போம். அது முடியாம போனா, நாங்களே முன்ன நின்னு திருமணத்தை முடிச்சுடுவோம்!'' என்று பெருமையோடு சொன்னார் சதீஷ்.

இவர்கள் சேர்த்து வைத்த ஜோடிகளில் ஒன்று நாதன் - தீபா. அதைப் பற்றி பேசிய நாதன், ''நானும் தீபாவும் அடுத்தடுத்த வீடு. காதலிச்சோம். உள்ளாட்சித் தேர்தல்ல எங்க ரெண்டு குடும்பத்து ஆட்களும் ஒருத்தரை ஒருத்தர் எதிர்த்து எலெக்ஷன்ல நிக்க, எங்க ரெண்டு குடும்பத்துக்கு இடையே சுமுகம் செத்து பகைமை வளர்ந்துச்சு. காதல் பத்தியும் அவங்களுக்குத் தெரிஞ்சு, தீபாவை சொந்தக்காரங்க வீட்டுல விட்டுட்டாங்க. நான், சதீஷ் அண்ணன்கிட்ட வந்து நின்னேன். பிரியா அண்ணி காலேஜுக்கே போய் தீபாவை கூட்டிட்டு வர, கேரளா, பாறசாலையில ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வெச்சாங்க. இப்போ எங்களுக்கு நரேஷ்னு ஒரு குட்டிப் பையன் இருக்கான்'' என்றார்.

நாம் சென்றிருந்த நேரம் தங்கள் குழந்தையின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் இருந்த சங்கர் - சுபா தம்பதி, ''எங்களைச் சேர்த்து வெச்சதும் இவங்கதான்!'' என்றார்கள் இனிப்பு தந்து.  

''பிள்ளைகளோட உண்மையான சந்தோஷத்துக்காக வறட்டு கௌரவம், பிடிவாதம் எல்லாத்தையும் பெற்றோர்கள் விட்டுக்கொடுத்தா, நாங்க சந்தோஷமா வி.ஆர்.எஸ். வாங்கிக்கிடுவோம்!'' என்று சிரிக்கும் சதீஷ§ம், பிரியாவும் குமரி மாவட்டத்தில் காதல் ஜோடிகள் பலரின் உள்ளத்திலும் நன்றியோடு நினைவில் இருக்கிறார்கள்!

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
'சாதி வேணாம்... சனம் வேணாம்... சந்தோஷந்தேன் வேணும் !
பொன்னுத்தாய் ஒரு பொக்கிஷம் !

எடிட்டர் சாய்ஸ்