இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் உள்ள சிறப்புகளில் முக்கியமானதுஎது தெரியுமா? பிள்ளைப் பாசம்! தனக்குத் தேவையானது கிடைக்காவிட்டால்கூடப் பரவாயில்லை. தனக்கு மிகப் பெரிய அவமானம் நேர்ந்துவிட்டால்கூட, அதை பல்லைக் கடித்துத் தாங்கிக் கொள்வார்கள். உடலில் ஏதும் பிரச்னை என்றால் கூட அலட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால், தன் பிள்ளைகளுக்கு ஒரு சிறு துரும்பளவு பிரச்னையோ, வலியோ, வேதனையோ வந்து விட்டால், அதைத் தாங்கிக் கொள்ளவே மாட்டார்கள், பெற்றோர்கள்! இங்கே, திருமணத்துக்குப் பிறகு கணவன்- மனைவி என்று வாழத் துவங்குபவர்கள், பிறகு குழந்தை பிறந்ததும் பெற்றோர்கள் ஆகிவிடுகிறார்கள். பெற்றவர்கள் ஆகிவிட்டவுடனேயே, தன் குழந்தை என்னென்ன சந்தோஷங்களையெல்லாம் பெற வேண்டும் என்று பட்டியல் போடத் துவங்கிவிடுகிறார்கள். குழந்தைகளின் பேச்சு, சிரிப்பு, ஓட்டம், ஆட்டம், கோபம், அழுகை எனச் சகலத்தையும் ரசித்து ரசித்து வாழ்கிறார்கள்.. . .