விடுதலைப் போராட்டம் தொடங்கி இந்தி எதிர்ப்பு வரை...

 

வைநாயகன்... கவிஞர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர் எனப் பல முகங்கள் இவருக்கு. தான் பிறந்து வளர்ந்த இருகூரைப் பற்றி இங்கே பகிர்ந்து கொள்கிறார் அவைநாயகன்.

 

''சிங்காநல்லூர், சின்னியம்பாளையம், சுங்கம்னு கோவையில பல இடங்கள்ல சிலையா நிக்குறாரே ஒருத்தர், அவர் பேருல இருகூர்ல ஒரு நகரே இருக்கு. அங்கதான் நான் பொறந்தேன். சிலையா நிக்கிறது யாருங்கிறதை இந்தக் கட்டுரையைப் படிச்சி முடிக்கிறதுக்குள்ளயோசிச்சு வைங்க, பார்க்கலாம்.

இருகூர்ங்கற பேருக்குத் தகுந்தாப்புல திராவிட, பொது உடைமை இயக்கங்களின் தலைமையில் ஊரே இரு கூறாத்தான் இருக்கும். காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., விஜயலட்சுமி பண்டிட்னு பல தலைவர்கள் இந்த ஊருக்கு வந்து பேசி இருக்காங்க. பெரியார் அப்படிங்கிற  ஒரு மாமனிதனைப் பக்கத்துல இருந்து பார்க்கிற வாய்ப்பை எனக்குத் தந்ததும் இந்த ஊர்தான். விடுதலைப் போராட்டம் தொடங்கி இந்தி எதிர்ப்புப் போராட்டம் வரை ஒவ்வொரு சமூக நகர்விலேயும் இருகூரோட பங்கு முக்கியமானது. இப்பவும் இந்த ஊர்ல 70 விடுதலைப் போராட்டத் தியாகிகள் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க.

பல நூறு வருஷம் பழமையான ஈஸ்வரன் கோயிலும், பல பேருக்குக் குலதெய்வமா இருக்கிற அங்காளம்மன் கோயிலும் ஊரின் முக்கியக் கோயில்கள். நொய்யல் ஆற்றைத் தவிர்த்துவிட்டு, இந்த ஊரைப் பற்றிப் பேச முடியாது. என்சோட்டுப் பசங்க எல்லாம் தூண்டிலைத் தூக்கிக்கிட்டு ஆத்துக்கு மீன் பிடிக்கப் போவோம். ஆரம்பத்துல உள்ளூர் மீன்தான்... நாளாவட்டத்துல இந்த ஆத்துல தென் ஆப்பிரிக்காவுல இருந்து கொண்டுவந்து விடப்பட்ட திலேபியா கெண்டையும் ஆப்பிரிக்கன் கெளுத்தியும் தலைகாட்ட ஆரம்பிச்சுது. உள்ளூர் மீன் மெள்ள மெள்ள அழிஞ்சுப் போச்சு.

மேற்குத் தொடர்ச்சி மலையில இருந்து கொடுமுடிவரைக்கும் 174 கி.மீ. ஓடுற நொய்யல் ஆற்றுக்குக் குறுக்கே 32 தடுப்பு அணைகளைக் கொங்கு சோழர்கள் கட்டி இருக்காங்க. அதுல ஒண்ணு இப்பவும் எங்க ஊர்ல இருக்கு. நாங்க நீச்சல் பழகின வாய்க்கால், இப்ப கழிவுகளைக் கொட்டுற சாக்கடையா மாறிப்போச்சு. நம்மகிட்ட சாதி அபிமானம் இருந்த அளவுக்கு நதி அபிமானம் இல்லாமப் போச்சு.

பெருங் கற்காலத்துலயே இந்த ஊர்ல மனுசங்க வாழ்ந்ததற்கான அடையாளமா  முதுமக்கள் தாழிகள் இங்கே கிடைச்சு இருக்கு. கொங்குச் சோழர்கள் காலத்துல இந்த ஊர்ல மக்கள் சிறப்பா வாழ்ந்து இருக்காங்க. கதிரி மில், கம்போர்டியா மில், கஸ்தூரி மில்னு வரிசையா மில்லுகள் வரவும், 19-ம் நூற்றாண்டில் இந்த ஊர் மறு உருவாக்கம் ஆச்சு. எங்களுக்கு முந்தின தலைமுறை வரைக்கும் குடும்பத்துக்கு ஒருத்தர் மில் வேலையில இருப்பாங்க.

ஆனா, 80-கள்ல இந்தத் தொழில்ல ஏற்பட்ட வீழ்ச்சி பல பேரோட வாழ்க்கையைக் கேள்விக்குறி ஆக்கிடுச்சு. ஒரு பக்கம் மில்களை மூட, மறுபக்கம் லேத் பட்டறைத் தொழில் சூடுபிடிச்சுது. படிக்கப் பிடிக்காத பலரும் லேத் வேலைக்குத்தான் போவாங்க. எங்க ஊர்ல வருத்தப்பட்டு பாரம் சுமக்குறவங்களுக்கு எல்லாம் இளைப்பாறுதல் கொடுத்த இடம் லட்சுமி தியேட்டர்தான். ஆபரேட்டர் ராகவன் அண்ணன் சைக்கிள் கேரியர்ல படப் பொட்டியைத் தூக்கிக்கிட்டு வந்தார்னா அவர் பின்னாடி ஹேய்ய்...னு ஒரு கூட்டம் ஓடும். அவருக்கு டீ வாங்கிட்டுப் போய்க் கொடுக்கிற சாக்குல ஆபரேட்டர் ரூம் ஓட்டை வழியாப் படம் பார்த்தது இன்னும் கண்ணுல நிக்குது. ஆனா, அதே கண்ணாலதான் சமீபத்துல அந்த தியேட்டரை இடிக்கிறதையும் பார்த்தேன்.

ஏனுங்க... சிலையா நிக்கிறவரை இன்னுமா நீங்க கண்டுபிடிக்கலை? 'தங்கம் சாதிக்காததைச் சங்கம் சாதிக்கும்’னு சொன்ன, புகழ்பெற்ற தொழிற்சங்கவாதி என்.ஜி.ஆர்தாங்க அவர்! ''

- செந்தில் ராஜாமணி
படங்கள்: வி.ராஜேஷ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
வலையோசை
ரெண்டு மின்மினிகளிடம் ரெண்டு மினி பேட்டி!
placeholder

எடிட்டர் சாய்ஸ்

ஏன் திரையில் நம் வரலாற்றினை பதிவு செய்ய மறுக்கிறோம்...?
placeholder

தமிழர்களுக்கு எப்போதும் தம் வரலாறு குறித்த ஒரு பெருமிதம் இருக்கும். 'தாங்கள்தான் உலக நாகரிகங்களுக்கு எல்லாம் முன்னோடியானவர்கள். ஆதிக்குடி தமிழ்குடிதான்' என்று பெருமைபட்டுக் கொள்வார்கள். மேலும், 'நாங்கள்தான் உலகிற்கு நாகரிகத்தை போதித்தோம். உலகில் பிற இனங்கள் நாகரிகம் அடைவதற்கு முன்பே, தமிழன் நாவாய் கட்டும் தொழில்நுட்பத்தை அறிந்து இருந்தான்' என்பார்கள். ஆனால், அந்த வரலாற்றைப் பதிவு செய்வதில் எப்போதும் பின் தங்கி விடுவார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில், லகான் இயக்குநர் அஷுதோஷ் கெளரிக்கர் இயக்கத்தில் வரவிருக்கும் மொகஞ்சதாரோ திரைப்படம்.

[X] Close