Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''மலையை விட்டு விரட்டப் பார்க்குறாங்க!''

அலறும் பழங்குடி மக்கள்

'திருப்பூர் மாவட்டம் உடுமலைதாலுக்​காவில் உள்ள 18 மலைக் கிராமங்​களுக்கும் எவ்விதமான அடிப்படை வசதிகளும் கிடைக்கவிடாமல் வனத்துறையினரும், அரசு அதிகாரிகளும் தடுக்கிறார்கள்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) தகவல் வரவே, அந்த மலைப் பகுதிக்குச் சென்றோம். 

அந்தக் கிராமங்கள் வனத் துறையின் கண்காணிப்பில் உள்ளதால், புதியவர் உள்ளே நுழைய எளிதில் அனுமதி கிடைக்காது. அதனால், மலைவாழ் மக்கள் சிலரது உதவியுடன் பள்ளி ஆசிரியர் என்ற தோரணையில் உள்ளே சென்றோம். மாவடப்பு என்ற கிராமத்துக்கு எட்டு கிலோ மீட்டர் தூரம் கரடுமுரடான பாதையைக் கடந்து சென்றோம். மலைவாழ் மக்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் செல்வம், ''இந்த தாலுக்காவில் உள்ள 18 மலைக் கிராமங்களில் கிட்டத்தட்ட 1,000 குடும்பங்கள் உள்ளன. சுமார் 5,000 பேர் வசிக்கிறோம். இங்கு இருக்கும் பழங்குடி மக்களை எப்படியும் விரட்டி அடித்துவிட வேண்டும் என்று வனத் துறையும் அரசு அதிகாரிகளும் இணைந்து வேலை செய்கிறார்கள்.

எங்கள் பிள்ளைகள் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதற்காக, மாவடப்பு, குழிபெட்டி, குறுகலை, வசம்ப குளம், கருமுட்டி, தளிஞ்சி, கோடந்தூர் கிராமங்களில் 2004-ல் அரசு தொடக்கப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆசிரியர்கள் யாரும் இந்தப் பள்ளிகளுக்கு முறையாக வருவதே இல்லை. பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதலே சத்துணவு வழங்கப்படவில்லை. எங்கள் பகுதி மக்கள் நல அலுவலரிடம் கேட்டதற்கு, 'எதற்குப் பிரச்னை செய்கிறீர்கள்? வளவாடி மற்றும் பொள்ளாசியில் உள்ள சங்கமபாளையத்தில் இரண்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளில் உங்கள் பிள்ளைகளைப் படிக்கவைத்துக்கொள்ளுங்கள்’ என்கிறார்கள். புலிகளே இல்லாத இந்தப் பகுதியை, 2008-ல் புலிகள் காப்பகம் என்று அறிவித்தார்கள். அதற்குப் பிறகு வனத் துறையினரின் அத்துமீறல் அதிகரித்துவிட்டது. இவை எல்லாமே பழங்குடி மக்களை மலைக் கிராமங்களில் இருந்து வெளியேற்றும் முயற்சிதான்'' என்றார் ஆவேசத்துடன்.

மாவடப்பு கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி, ''நடந்து முடிந்த தேர்தலில் ஓட்டு கேட்க வந்த சண்முகவேலு, 'நான் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் பேசி 'வன உரிமை சட்டத்தின்’ கீழ் உரிமையைப் பெற்றுத் தருகிறேன். சாலை அமைத்துத் தருகிறேன். பசுமை வீடு கட்டித் தருகிறேன்’ என்று உறுதி அளித்தார். இப்போது கேட்டால், 'பணம் ரெடியா இருக்கு. ஆனா வனத் துறை, இந்தப் பகுதியைப் புலிகள் காப்பகம் என்று சொல்வதால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது’ என்கிறார். குடிநீர் வசதிகூட எங்​களுக்கு இல்லை. அதனால் நாங்களே செலவு செய்து ஊருக்குப் பக்கத்தில் உள்ள ஆறுகளில் இருந்து தண்ணீர் வசதி ஏற்பாடு செய்திருக்கிறோம்.

ஒன்றரை கி.மீ. தொலைவில்தான் கடம்பாறை மின் உற்பத்தி நிலையம் இருக்கிறது. ஆனால் எந்த மலைக் கிராமத்துக்கும் மின்சாரம் கிடையாது.

புலிகள் நடமாட்டம் இருக்கிறது என்று அரசுக்குச் சொல்வதற்காக, வனத் துறையினரே போலியாக புலிகளின் கால் தடங்களை உருவாக்குகின்றனர். புலிகள் இந்தப் பகுதியில் அறவே இல்லை என்பதுதான் நிஜம். வால்பாறை போன்ற பகுதியில் சிறுத்தை இருக்கிறது. எங்களை இங்கு இருந்து விரட்டுவதற்காக, வால்பாறையில் இருந்து சிறுத்தைகளைப் பிடித்து, நாங்கள் வசிக்கும் பகுதிகளில் வனத் துறையினர் விடுகின்றனர். யாராவது வனத் துறையினரின் தவறுகளைத் தட்டிக்கேட்டால் அவர்கள் மீது கஞ்சா வழக்கு போடுகிறார்கள். ஆழியார் அப்பர் டேம் வழியாக நாங்கள் நடந்து வரவும் அனுமதி கிடையாது. கேட்டால், அணை சேதம் அடைந்துவிடும் என்கிறார்கள். ஆனால் லாரிகளை அனுமதிக்கின்றனர். சுகாதார நிலையமே இங்கு இல்லை. ஆனால் இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்குவதாக கணக்கு காட்டுகிறார்கள். மொத்தத்தில் பழங்குடி மக்களையும் விலங்குகளாகத்தான் பார்க்​கிறார்கள்'' என்று தழுதழுத்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை மாவட்ட வன அலுவலர் ராஜ்குமாரிடம் படித்தோம். ''நாங்கள் எந்தவிதத்திலும் மாணவர்களின் படிப்பைக் கெடுக்கவில்லை. ஆசிரியர்களையும் நாங்கள் தடுக்க முடியாது. எங்களுக்குப் பிரச்​னையே அந்த மக்கள் படிக்காமல் இருப்பது​தான். அணைப் பகுதி மின்சார வாரியக் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் சென்றுவர தனிச் சாலை உள்ளது. அவர்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். புலிகள் காப்பகப் பகுதியில் சாலை அமைக்க அனுமதி இல்லை. நாங்கள் அவர்களை வெளியேற்றவும் முயற்சிக்கவில்லை. ஆனால், அவர்களாகவே விருப்பப்பட்டு வந்தால், அரசு 10 லட்சம் ரூபாயை அவர்கள் மறுவாழ்வுக்குத் தருகிறது. சிறுத்தைகளை அவர்கள் வசிக்கும் பகுதியில் கொண்டுவந்துவிட்டால் எங்களுக்குத்தான் பிரச்னை. நாங்கள்தான் மீண்டும் பிடிக்க வேண்டும். மருத்துவ வசதி சிறப்பாகவே வழங்கப்படுகிறது'' என்று மளமளவென ஒப்புவித்தார்.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஜெய​லட்சுமி, ''இந்தப் பிரச்னை குறித்துப் பேசி, ஆசிரியர்கள் வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். சத்துணவை அந்தப் பகுதி​களுக்குக் கொண்டுசெல்வது கடினம் என்பதால், வேறு எப்படி செயல்படுத்துவது என்று ஆலோசனை நடத்தி வருகிறோம்'' என்றார்.

அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சண்முகவேலு, ''கடந்த வாரத்தில் ஆட்சியர் தலைமையில் மலைக் கிராமங்களில் முகாம் நடப்பதாக இருந்து, தவிர்க்க முடியாத காரணத்தால் நடக்கவில்லை. மலையில் இருந்து கீழே வந்த 30 பேருக்குப் பசுமை திட்டத்தில் வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. மேலே உள்ளவர்களுக்கு எந்தத் திட்டத்தின் கீழ் வசதி தர முடியும் என்பதை ஆட்சியர், வன அலுவலர்களுடன் பேசித்தான் முடிவு செய்ய முடியும்'' என்றார்.

பரிதாபம்!

                       - ம.சபரி

   படங்கள்:  மகா.தமிழ்ப்பிரபாகரன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
நடராஜன், திவாகரன் சந்திப்பு நடந்ததா?
மிஸ்டர் மியாவ்: பற்றி எரியும் பருத்தி!

எடிட்டர் சாய்ஸ்