Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாழ்க்கைக்கு வழிகாட்டிய வாசல் கோலம் !

வே.கிருஷ்ணவேணி படங்கள்: என்.விவேக்

''எல்லோருக்குள்ளும் ஏதாவது ஒரு தனித்தன்மை இருக்கும். அதை வெளிக்கொண்டு வர்றதுலதான் வெற்றிக்கும் நமக்குமான தூரம் நிர்ணயிக்கப்படுது!''

- தன் பெயின்ட்டிங் வேலைகளுக்கு இடையில், நம்பிக்கையோடு நம்மிடம் பேசினார் கனிமொழி.

சென்னை, வடபழனியில் பெயின்ட்டிங் கிளாஸ் எடுக்கும் கனிமொழியின் மாத வருமானம் 20,000 ரூபாய். அதைவிட, தன்னிடம் பெயின்ட்டிங் கற்கும் பெண்கள், அதை ஒரு தொழிலாக முன்னெடுத்துச் செல்வதற்கு தான் தூண்டுகோலாக இருப்பதையே பெருமையாக நினைக்கும் கனிமொழியின் விரல்கள், கிராஃப்ட் வேலைப்பாடுகளிலும் கில்லி.

வெயில் இறங்கத் தொடங்கியிருந்த ஒரு மாலை வேளையில் கனிமொழியை சந்தித்தபோது, ''பிறந்து, வளர்ந்தது எல்லாம் மயிலாடுதுறை பக்கமிருக்கற திருவிளையாட்டம்  கிராமம். அரசுப் பள்ளியில அப்பா ஹெட்மாஸ்டரா இருந் தார். எனக்கு இரண்டு தங்கைகள். 'ரிட்டயர்டு ஆகறதுக்குள்ள மூணு பொண்ணுங்களையும் கரையேத்திடணும்'ங்கற நோக்கத்துலயே எங்கப்பா கணக்குகளை போட, அதுக்குள்ள அடங்கிப் போச்சு என்னோட படிப்புக் கனவு. ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு, 'காலேஜ்ல படிக்கிறேன்'னு எவ்வளவு போராடியும், கல்யாணத்தை முடிச்சுட்டாங்க.

சென்னையில செட்டில் ஆகி, குழந்தைகள் வளர்ந்து ஸ்கூலுக்கு அனுப்பின பிறகு, வீட்டுல வெறுமையா உணரும்போது எல்லாம், என்னைக் காப்பாத்தினது இயல்பிலேயே எனக்கு இருந்த கற்பனைத் திறனும், கை வேலைப்பாடுகள் மீதான ஆர்வமும்தான். பிளெய்ன் சேலைகளுக்கு டிசைன் பண்றது, வரையறதுனு நேரத்தைச் செலவிட்டேன்'' எனும் கனிமொழிக்கு, 'செகண்ட் ஹாஃப்' சமயத்தில்தான் வாழ்க்கை கிக் ஸ்டார்ட் எடுத்திருக்கிறது.

''பத்து வருஷத்துக்கு முன்ன, 'ஹேண்டி கிராஃப்ட்' டெபுடி டைரக்டர் ராமமூர்த்தியோட நிகழ்ச்சியை பொதிகை டி.வி-யில பார்த்தேன். பெயின்ட்டிங் கத்துக்கணும்ங்கிற ஆர்வம் எனக்குள்ள துளிர்த்தது அப்போதான். மறுநாளே அவருக்கு போன் பண்ணி வழிகாட்டுதல் கேட்டேன். ராஜா அண்ணாமலைபுரத்துல இருக்கிற செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில பயிற்சி எடுத்துக்கச் சொன்னார். அதை முடிச்சப்போ... என் மேலயே எனக்கு நம்பிக்கையும், மரியாதையும் வந்திருந்தது.

என் ஆசை தீர நான் வரைஞ்சு மகிழ்ந்ததுக்கு அப்புறம், 'ஏன் பெயின்ட்டிங் கிளாஸ் எடுக்கக் கூடாது?'னு தோணுச்சு. அக்கம் பக்கம் குழந்தைகள், பெண்கள்னு வகுப்புகளை ஆரம்பிச்சேன். நாளாக ஆக, வகுப்புல சேர்றவங்களோட எண்ணிக்கை அதிகமாயிட்டே வந்தது. பாட் பெயின்ட்டிங், டைசிஸ் (daisies)பெயின்ட்டிங், மதுபானி, காபி பெயின்ட்டிங், அப்ஸ்ட்ராக்ட் அண்டு ஆயில் பெயின்ட்டிங், நிப் பெயின்ட்டிங், ஒன் ஸ்ட்ரோக் பெயின்ட்டிங், பேசிக் அண்ட் அட்வான்ஸ்டு பெயின்ட்டிங், டிரை பேஸ்டல் பெயின்ட்டிங் மற்றும் ராஜஸ்தான், ஒடிசானு ஒவ்வொரு மாநிலத்துலயும் சிறப்பா இருக்கிற அத்தனை பெயின்ட்டிங் வகைகளையும் கத்துக்கிட்டு, கிளாஸ் எடுத்தேன். இப்போ டிராயிங் கிளாஸுக்கு ஒரு நபருக்கு மாசம் 1,000 ரூபாய் ஃபீஸ் வாங்குறேன். தவிர, என்னோட பெயின்ட்டிங்ஸை கண்காட்சி வெச்சு விற்பனையும் செய்றேன். மாசம் 20,000 ரூபாய் இப்போ எனக்கு கியாரன்டி!'' என்று சிரிக்கிறார் கனிமொழி.

இவருடைய கணவர் சந்தானம், தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். மூத்த பையன் சிபி, அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிக்க, இரண்டாவது பையன் கோபி, வி.ஐ.டி. காலேஜில் எம்.எஸ் சாஃப்ட்வேர் படிக்கிறார்.

தூரிகை மட்டுமல்லாமல்... ஃப்ளவர் மேக்கிங், ராஜஸ்தான் மிரர் வொர்க், மெட்டல் எம்போஸிங், கிளாஸ் ஃப்யூஸிங் வொர்க், எம்ப்ராய்டரி மற்றும் யோகா என்று பல ஏரியாக்களிலும் மிளிரும் கனிமொழி, அவற்றுக் கான வகுப்புகளையும் எடுக்கிறார்.

''இந்தப் பத்து வருஷத்துல கிட்டத்தட்ட ஐநூறு பேருக்கு மேல் வகுப்புகள் எடுத்திருப்பேன். ஓவிய ஆர்வத்தோட வர்றவங்களுக்கு கத்துக் கொடுக்கறது சந்தோஷம்னா, இதை ஒரு தொழிலா, பொருளாதாரத்துக்கான பிடிப்பா எடுத்துப் பண்ற ஐடியாவோட வகுப்புக்கு வர்ற பெண்களுக்குக் கத்துக் கொடுக்கிறது பெரிய சந்தோஷமா இருக்கு. அப்படி என்கிட்ட கத்துக்கிட்டு இப்போ அதை சின்ன, பெரிய லெவல்ல பிஸினஸா பண்றவங்க நிறைய இருக்காங்க. பல பெண்களோட தன்னம்பிக்கைத் திரி, என்னால தூண்டப்படுதுனு நினைக்கும்போது, பெருமையா, சந்தோஷமா இருக்கு!'' என்ற கனிமொழி,

''ஸ்கூல் படிச்சிட்டு இருந்தப்போ, என் கற்பனையை எல்லாம் வாசல்ல கோலமா விரிப்பேன். அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் நின்னு ரசிச்சு, வாய் விட்டுப் பாராட்டாம நகரமாட்டாங்க. அதைக் கேட்கும்போதெல்லாம் எங்கம்மா, 'இந்தக் கோலம்தான் உன் வாழ்க்கையை முன்னேற்றப் போற முதல் புள்ளினு நினைக்கிறேன்!’னு பெருமையா சொல்வாங்க. அந்த ஆசீர்வாதம் இன்னிக்கு உண்மை ஆகிருக்கு!''

- எட்டிப் பார்க்கும் கண்ணீர் துடைத்துச் சிரிக்கிறார் !

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
அறிவாளி குழந்தை வேண்டுமா... அவசியம் கொடுங்க தாய்ப்பால்!
நடுங்க வைக்கும் நாப்கின்..!

எடிட்டர் சாய்ஸ்