Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிரெடிஷனல் காபி மேக்கர் !

சா.வடிவரசுபடங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

 

சென்னையின் முக்கியமான ஸ்டார் ஹோட்டல்களில் ஒன்றான ஷெரட்டன் பார்க் ஹோட்டல்.... கேட்டரிங் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பட்டம் பெற்ற 'செஃப்'களாக நிறைந்திருக்க, அவர்களுக்கு மத்தியில் பரபரவென காபி கலந்து கொண்டிருக்கிறார் ரத்னம் மாமி. காண்பவர்களைஎல்லாம் சற்றே வித்தியாசமாக ஈர்க்கிறது இந்தக் காட்சி!

''நான் தயாரிக்கற காபியைக் குடிக்கறதுக்காகவே ஹோட்டலுக்கு நிறைய பேர் வர்றாங்கனு நிர்வாகத்துல பாராட்டிச் சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு!'' என்று சொல்லும் ரத்னம் மாமி, பார்க் ஹோட்டலின் 'டிரெடிஷனல் டச் ஃபில்டர் காபி மேக்கர்'! ஆம், இதற்கென்றே பிரத்யேகமாக இவரை இந்தப் பணியில் அமர்த்தியுள்ளனர்.

''திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர்தான் என் ஏரியா. ரொம்ப நல்லா சமைப்பேன். தேன்குழல், முறுக்கு, கொழுக்கட்டைனு பலகாரங்கள் செய்றதுலயும் அசத்துவேன். இதையே அடிப்படையா வெச்சு வேலை தேட ஆரம்பிச்சேன். எல்லாரும்தான் சமைக்கறாங்க, நமக்குனு ஸ்பெஷாலிட்டியை உருவாக்கிட்டு வேலை கேட்கணும்னு தோணுச்சு. ஃபில்டர் காபி போடுறதுல நான் கில்லாடி. அஞ்சு மாசம் முன்ன இதைச் சொல்லித்தான் இங்க வாய்ப்பு கேட்டேன். காபி போட்டுக் காட்டச் சொன்னாங்க. குடிச்சுப் பார்த்துட்டு, 'சூப்பர்!’னு ஆன் த ஸ்பாட் அப்பாயின்ட் பண்ணிட்டாங்க!''

- உற்சாகம் ததும்புகிறது ரத்னம் மாமியின் கண்களில்.

''ஹோட்டல்ல எனக்குனு பிரத்யேகமா ஒரு காபி கார்னர் உருவாக்கித் தந்திருக்குது   நிர்வாகம். கூடவே, பாரம்பரியப் பாத்திரங்கள், குவளைகள், பரிமாறுவதற்கு பாரம்பரிய உடை அணிந்த சர்வர்னு என்னோட டிரெடிஷனல் ஃபில்டர் காபிக்கு இன்னும் வசீகரமும் சேர்த்திருக்காங்க. ஆரம்பத்தில் காபி மட்டும் போட்டுட்டு இருந்த நான்... சுண்டல், லட்டு, ரவா லட்டுனு தென்னிந்திய ஸ்நாக்ஸையும் தயார் செய்றேன். 'ஒரு சிப் காபி, ஒரு வாய் ஸ்நாக்ஸ்... சூப்பர் மாமி!’னு கஸ்டமர்கள் பாராட்டுறாங்க. தினமும் 11 மணி நேரம்  வேலை இருக்கும். அந்தக் களைப்பு தெரியாம பேட்டரி ஏத்துறது இப்படிக் கிடைக்கற பாராட்டுக்கள்தான்.

வீட்டுல எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காம, ஆயுளுக்கும் சமைச்சுப் போட வேலையை மட்டும் பெண்கள் செய்றாங்க. ஆனா, ஹோட்டல்கள்ல கை நிறைய சம்பளம் வாங்கிட்டு சமைக்கறதுக்கு மட்டும் ஆண்கள் கிளம்பிடறாங்க. ஹோட்டல் கிச்சன்கள்லயும் பெண்கள் நிரம்பணும், நிறைய சம்பாதிக்கணும்!''

- ஆதங்கமும் அக்கறையுமாக அழைக்கிறார் 'ஃபில்டர் காபி மேக்கர்’ ரத்னம் மாமி!


இரண்டு பேருக்கு பாரம்பரிய ஃபில்டர் காபி தயாரிக்கும் செய்முறை...

200 மில்லி தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அதிலிருந்து 160 மில்லி எடுத்து, அதில் நான்கு டீஸ்பூன் காபி பவுடரைக் கலந்து (காபி பவுடர் மிகவும் தரமானதாக இருக்க வேண்டும்), ஒரு நிமிடம் திரும்பவும் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு, இதை வடிகட்டினால்... டிகாக்ஷன் தயார். இது திக்காக இருப்பது போல் தயாரிக்க வேண்டும் என்பது முக்கியம். 200 மில்லி பாலை நன்கு காய்ச்சவும். இதை டிகாக்ஷனுடன் கலக்கவும். தேவைப்படும் அளவுக்கு சர்க்கரை கலந்து பரிமாறவும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
எட்டு சவால்கள்....எதிர்கொள்ளும் வழி !
ஆல் இன் ஆல் பெண்கள் மெஸ் !

எடிட்டர் சாய்ஸ்