Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எத்தனை பிழைகள் செய்தாலும்...

கர்நாடகா தரிசனம்!


பெங்களூருவிலிருந்து முல்பாகல் 98 கி.மீ. தூரம்; அங்கிருந்து 12 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது கூடுமலை. இங்கு கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீமகா கணபதி ஆலயத்தை ஏற்கெனவே (சக்தி விகடன் 24.1.12 இதழில்) தரிசித்துவிட்டோம். இந்த ஆலயத்தில் இருந்து சுமார் அரை பர்லாங் தூரத்தில் அமைந்துள்ளது, அருள்மிகு சோமேஸ்வரர்- அருள்மிகு க்ஷமதாம்பிகை திருக்கோயில்.

கூடுமலை மகா கணபதி பழைமையானவர் என்றாலும், அவருக்கு விஜயநகரப் பேரரசர்கள் கோயில் எழுப்புவதற்கு முன்பே, சோழ மன்னர்கள் கட்டிய சிவாலயமாம் இது. மேலும், அஸ்திவாரம் தோண்டாமல் ஒரு பாறையின் மீது எழுப்பப்பட்ட ஆலயம் இது என்பது குறிப்பிடத்தக்கது!

பேளூர் மற்றும் ஹளபேடு ஆலயங்களைச் சிற்ப அற்புதங்களுடன் எழுப்பிய சிற்பிகளில் ஜகனாச்சாரி என்பவர் இந்த சோமேஸ்வரர் திருக்கோயிலின் பாதியைக் கட்டிமுடிக்க, மீதி திருப்பணிகளை அவரின் மகனான சிற்பி டங்கணாச்சாரி நிறைவேற்றியதாகச் சொல்கிறார்கள்.

திருக்கோயிலின் படிகளில் ஏறியதுமே, முகப்பில் நம்மை வரவேற்று ஆசியளிக்கும் விதமாக ஆனைமுகனின் தரிசனம். தோற்றத்தில் கூடுமலை விநாயகரைப் போலவே திகழ்ந்தாலும், அவர் அளவுக்கு இவர் பிரமாண்டம் இல்லை. சுமார் 5 அடி உயரத்துடன் திகழ்கிறார். ஆனாலும், இவரின் விக்கிரகத் திருமேனி, பக்தர்களை வசீகரிக்கும் விசேஷமான சிற்ப பொக்கிஷமே! இந்த விக்கிரகத்தின் உட்பகுதி உள்ளீடற்று (வெற்றிடமாக) திகழ்கிறது. சிறு கல் கொண்டு தட்டிப் பார்த்தால், இன்னிசை எழுமாம்!

'இந்த ஆலயத்துக்கு வருவோர், சிறு கல்லெடுத்து விநாயகர் சிலையைத் தட்டித் தட்டி வழிபட வேண்டும்’ என்று எவரோ கிளப்பிவிட, வருவோர் போவோரெல்லாம் விநாயகர் சிலையைப் பதம் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். நல்லவேளையாக, தொல்லியல் துறையினர் இப்போது இந்த முகப்பு விநாயகரைச் சுற்றி கூண்டு அமைத்துவிட்டார்கள்!

ஸ்ரீசோமேஸ்வரர் ஆலயத்தின் தூண் ஒன்றில், சிற்பி டங்கணாச்சாரியுடன் ராஜராஜ சோழன் காட்சி தரும் சிற்பம் இருக்கிறது. நம் தமிழ் மன்னர்கள் சிற்பிகளையும் அவர்களின் கலைத் திறனையும் எப்படியெல்லாம் கௌரவித்தார்கள் என்பதற்கு, இந்தச் சிற்பம் ஒரு சாட்சி! கோயிலுக்குள் ஸ்ரீதேவி- பூதேவி சமேத ஸ்ரீசென்னகேஸ்வரர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீநகரதேஷ்வரர் ஆகியோரையும் தரிசிக்கலாம். அருகிலுள்ள கூடுமலையின் குகையில் கவுண்டின்ய மகரிஷி தவம் செய்ததாகப் புராணம் சொல்கிறது. அதற்கேற்ப, இந்தக் கோயிலில் கவுண்டின்ய மகரிஷிக்கும் சிலை உள்ளது.

''சோழச் சக்ரவர்த்தியின் ஆணைப் படி இந்தக் கோயிலைக் கட்டும் திருப் பணிகளை மேற்கொண்டார் சிற்பி ஜகனாச்சாரி. கோயில் வேலைகள் பாதி நிறைவடையும் தருணத்தில், ஏதோ காரணமாக வெளியூர் சென்றார் சிற்பி. நெடுநாட்களாகியும் அவர் திரும்பி வராததால், அவரின் மகன் டங்கணாச்சாரியைத் தேடிப் பிடித்து அழைத்து வந்து, மீதிப் பணியைத் தொடரும்படி கேட்டுக் கொண்டார் சோழ மன்னர்.

அதையேற்று சிற்பி டங்கணாச்சாரி, ஆலயத் திருப்பணியைத் தொடர்ந்தார். இந்த நிலையில் ஜகனாச்சாரி திரும்பினார். தான் இல்லாமலேயே பிரமாண்டமாக திருக்கோயில் எழுப்பப்படுகிறது என்பதை அறிந்து கோபம் கொண்டார். ஆனால், அதைக் கட்டிக் கொண்டிருப்பது தன் மைந்தனே என்பதை அறியாமல், கையில் இருந்த சுத்தியலை வேகமாக வீசியெறிந்தார். அது கோயில் விதானத்தின் ஒரு பகுதியைத் தாக்கிச் சேதப்படுத்தியது (சிதிலமான அந்தப் பகுதியை இன்றும் காணலாம்)! சோழர்கள் ஆணைப்படி கட்டப்பட்ட ஆலயம் என்றாலும், கட்டிடக்கலையில் ஹொய்சாளரின் பாணியில் திகழ்கிறது. இங்கு சிவலிங்கத் திருமேனியராய் காட்சி தரும் ஸ்ரீசோமேஸ்வரர், ராஜராஜ சோழ மன்னர் வணங்கித் துதித்த தெய்வம்; மிகவும் சக்தி வாய்ந்தவர். இவரை வழிபடும் பக்தர்களின் குறைகளைப் போக்குபவர். இந்த நம்பிக்கையுடன் வெகுதூர ஊர்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து ஸ்ரீசோமேஸ்வரரைத் தரிசித்துச் செல்கின்றனர்'' என்று சிலிர்ப்புடன் விவரிக்கிறார், இந்தக் கோயிலின் குருக்கள் லோகநாத தீக்ஷித்.

இந்த ஆலயத்தை ஒட்டி (ஒரே வளாகத்தில்) தனிக்கோயிலாகவே திகழ்கிறது ஸ்ரீக்ஷமதாம்பாளின் சந்நிதி. எழில்மிகு திருக்கோலத்தில் அருள்கிறாள் இந்த அம்பிகை. வேண்டியதை வேண்டியபடி தரும் கருணை நாயகி இவள் எனச் சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் பக்தர்கள். ''க்ஷமித்தல் என்றால் பிழை பொறுத்தல் என்று பொருள். இந்த அம்பிகையை வழிபட்டால், அவர்களின் பிழைகளை எல்லாம் மன்னித்து, வரங்களை வாரி வழங்குவாள் என்பது உறுதி!'' என விளக்குகிறார், அம்பிகை சந்நிதியின் அர்ச்சகர் அரவிந்த தீக்‌ஷித்.

ஸ்வாமி மற்றும் அம்பாளின் திருக்கோயில்கள் காலை 8 மணி முதல் மதியம் 1:30 மணி வரையிலும், பிற்பகல் 3 முதல் இரவு 7:30 மணி வரையிலும் திறந்திருக்கும். கூடுமலை கணபதியைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள், நம் சோழன் கட்டிய சோமேஸ்வரர் ஆலயத்தையும் அவசியம் தரிசித்து வாருங்கள். அந்த ஈஸ்வரனின் திருவருளால் நம் சோகங்கள் ஒட்டுமொத்தமும் காணாமல் போகும்.

படங்கள்: ச.வெங்கடேசன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
செந்தில் நாதனை பணிந்திட... செவ்வாய் தோஷம் விலகிடும்!
ஆலயம் தேடுவோம்!

எடிட்டர் சாய்ஸ்