கனிவான பேச்சால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். உங்கள் ராசிக்கு 3-வது ராசியில் நந்தன ஆண்டு பிறப்பதால், முடியாததை முடித்துக் காட்டுவீர்கள். குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் எதிர்பாராத பண வரவு உண்டு. நிர்வாகத்திறன் கூடும். குழந்தை இல்லாத தம்பதியருக்கு வாரிசு உண்டாகும். சித்திரை, வைகாசி மாதங்களில் அலைச்சல் இருந்தாலும் வளர்ச்சியும் உண்டு. வீடு கட்டுதல், நண்பர்-உறவினர் வீட்டு விசேஷங்களால் செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போதும் கவனம் தேவை. சகோதரர்களுக்கு இடையே சச்சரவுகள் வந்து விலகும். ஆவணியில் சுப நிகழ்வுகள் கூடிவரும். பொன், பொருள் சேர்க்கையுண்டு. சொந்த ஊரில் மதிப்பு கூடும். தாம்பத்தியம் இனிக்கும். புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் காய்ச்சல், சளித் தொந்தரவு வந்து விலகும். வீடு- வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். மகளுக்கு நல்ல வரன், மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். வருட மத்தியில் சொத்துப் பிரச்னை தீரும்.