Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''போன மாப்பிள்ளை திரும்பி வரலையே..!''

கொதிக்கும் ரிஷிவந்தியம்

'தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட இதுவரை விஜயகாந்த் நிறைவேற்றவில்லை. அதுகூடப் பரவாயில்லை... தொகுதிப் பக்கம் அவரைப் பார்த்தே பல மாதங்கள் ஆகிப்போச்சு. இனியாவது எங்களைக் கவனிக்க அவர் வரணும்னு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்குப் (044-66808002) பலரும் தகவல் அனுப்பி இருந்தார்கள். 

ஆர்பாட்டத்துக்கு தலைமை தாங்கி நடத்திய இந்திய கம்னியூனிஸ்ட் கட்சியின் ரிஷிவந்தியம் ஒன்றியச் செயலாளர் அப்பாவுவிடம் பேசினோம். ''சட்டமன்றத் தேர்தல்ல எங்க தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த், பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார். தொகுதி மக்கள் கேட்டதை எல்லாம் செய்து தருவார் என்று பிரேமலதாவும் சொன்னாங்க. ஆனால், விஜயகாந்த் எதுவுமே செய்யவே இல்லை. விருத்தாசலம் மக்களை ஏமாற்றியது போலவே எங்களையும் இப்போது அவர் கண்டுகொள்வது இல்லை. தேர்தல் முடிஞ்சதும், 'உங்க ஊர் மாப்பிள்ளையை வெற்றி பெறச் செய்தமைக்கு நன்றி’ என்று சொல்லிட்டுப் போனதோடு சரி. போன மாப்பிள்ளை திரும்பி வரவே இல்லை.

மூங்கில்துறைப்பட்டு பக்கத்தில் இருக்கும் ஆர்க்கவாடி, சுத்தமலை ஆகிய கிராமங்களுக்கு  பஸ் வசதியே கிடையாது. 'நான் ஜெயிச்சதும் இந்த கிராமங்களுக்கு பஸ் விடுகிறேன்.  ஆர்க்கவாடி - அரும்பராம்பட்டு ஆகிய கிராமங்களுக்கு இடையில் பாலம் கட்டித் தருகிறேன். இந்தத் தொகுதியில உள்ள 53 ஊராட்சிகளுக்கும் தேவையான அத்தனை அடிப்படை வசதிகளையும் உடனே நிறைவேற்றித் தருவேன்’ என்று சொல்லிவிட்டுப் போனார்.

நாங்களும் இன்னைக்கு வருவார்... நாளைக்கு வருவாருன்னு எதிர்பார்த்து ஏமாந்து போய் நின்னதுதான் மிச்சம். லாலாப்பேட்டை, கூடலூர் பகுதியில் உள்ள 10 கிராமங்களுக்கு கிட்டத்தட்ட ஒரு மாதமாகவே மின்சார சப்ளை இல்லை. அந்தப் பகுதி மக்கள், தொகுதி எம்.எல்.ஏ-வான விஜயகாந்த்துக்கு பல தடவை ஃபேக்ஸ் அனுப் பிட்டாங்க. ஒரு பதில்கூட அனுப்பலை. மறுபடியும் ரிஷிவந்தியம் தொகுதியில் எப்படியும் போட்டி போடப் போறதில்லை என்று முடிவு கட்டி, இப்படி பாராமுகமாக இருக்கிறாரா என்று தெரியவில்லையே'' என்று ஆதங்கப்பட்டார்.

அ.தி.மு.க. தெற்கு மாவட்டப் பொருளா ளரான சந்திரசேகரன், ''எங்க ஊரை ஒட்டி சீர்பனந்தல் ஏரி இருக்குது. ஆழமான இந்த ஏரிக்கரை ஓரம் உள்ள சாலையைத்தான் பொதுமக்களும், மாணவர்களும் பயன் படுத்தி வருகின்றனர். சிதிலமடைந்த சாலையினால் வருஷத்துக்கு மூணு, நாலு பேர் விபத்தில் மாட்டி பலியாகி விடுகிறார்கள். சாத்தனூர் வலதுபுற வாய்க்காலை தூர்வாராததால், எங்க ஏரிக்கு தண்ணீர் சரியாக வராமல் முப்போகம் விளைய வேண்டிய விவசாயம் ஒரு போகத்தோட நிற்குது. தொகுதிக்குத் தேவையான ஆரம்பக்கட்ட அடிப்படை வசதிகளைக்கூட விஜயகாந்த் செஞ்சி கொடுக்கலை. இனி விஜயகாந்த்தை நம்பி எந்தப் பிரியோஜனமும் இருக்கப்போறது இல்லை. அதனால எங்க மாவட்ட அமைச்சரான சி.வி.சண்முகத்துகிட்ட பேசி, தொகுதி மக்களுக்குத் தேவையானதை செஞ்சி கொடுக்கச் சொல்லிக் கேட்கப் போறேன்'' என்று ஆவேசமாகச் சொன்னார்.

'ரிஷிவந்தியம் தொகுதியில் எந்தப் பிரச்னை என்றாலும், என் சார்பாக உங்கள் குறைகளை இவர் கேட்பார்...’ என்று விஜயகாந்த் கைகாட்டிவிட்டுப் போனது, விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் எல்.வெங்கடேசனைத்தான். அவரிடம் பேசினோம். ''கேப்டனை  சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செஞ்சிருக்காங்க. அத்தோடு அவரை எம்.எல்.ஏ-வாக எந்த ஒரு பணியையும் செய்யக்கூடாது என்று உத்தரவும் போட்டி ருக்காங்க. அதை எதிர்த்து கேப்டன் நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறார். இப்படி பட்ட பிரச்னைகள் காரணமாகத்தான் அவரால் தொகுதிக்கு வர முடியவில்லை. தலைவர் சொல்லிவிட்டுப் போனதால் நான் தொகுதியைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். பஸ் இல்லாத கிராமங்களுக்கு பஸ் விடக் கோரி  போக்குவரத்து செயலாளருக்குக் கேப்டன் கடிதம் அனுப்பி இருக்கிறார். அதனால் கூடிய சீக்கிரமே அந்த கிராமங்களுக்குப் பஸ் ஓடும். அதே போன்று பாலம் கட்டுவது தொடர்பாகவும் விழுப்புரம் கலெக்டருக்கு கடிதம் எழுதி இருக்கார். பாலம் கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்குவதாக, கலெக்டரும் உறுதி கொடுத்திருக்கிறார். அதனால், இன்னும் இரண்டு மாதங்களுக்குள் எல்லா பிரச்னையும் சரியாகிவிடும். சில கிராமங்களில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்கவே மின்சாரம் இல்லாமல்தானே இருக்கிறது. அதை யாரிடம் போய் கேட்பது?

கேப்டன் தொகுதிக்கு வந்தாலும் வராவிட்டாலும் எல்லா வேலைகளுமே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நாங்க ஆளும் கட்சி கிடையாது. மக்களோடு மக்களாகப் போராடும் இடத்தில் இருக்கிறோம். கேப்டனின் பேரைக் கெடுக்க வேண்டும் என்பதற்காகவே சிலரின் தூண்டுதலின் பேரில் இப்படி ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்துகிறார்கள். கூடிய சீக்கிரமே கேப்டன் நேரில் வந்து எல்லோருக்கும் பதிலடி கொடுப்பார்'' என்றார் நிதானமாக.

'என்ன கேட்டாலும், கேப்டன் லெட்டர் எழுதி இருக்கார்ன்னே பதில் சொல்றாங்க... இவங்களை நம்புன்னா அம்புட்டுத்தான்’ என்று மக்கள் விரக்தியோடுதான் பேசுகிறார்கள்!

- அற்புதராஜ்

படங்கள்: பா.கந்தகுமார்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
''முதல்வர் தொகுதியில் அனாதையாகப் போயிட்டோமே..''

எடிட்டர் சாய்ஸ்