மிஸ்டர் கழுகு: எனக்கு எதிரான சதி உனக்குத் தெரியுமா சசி?
கழுகார் வந்ததும் பாட ஆரம்பித்துவிட்டார்! 'நானே எழுதி நானே நடித்த நாடகத்தில் ஒரு திருப்பம்... என்னை நம்பியிருந்தாள், அவள் நலம் அடைந்தாள் என்றும் அதுதானே என் விருப்பம்’ என்று 'நான் ஆணையிட்டால்’ சினிமாப் பாட்டு! ''ஜெ. - சசி உறவும் பிரிவுமான விவகாரத்தை 'நாடகம்’ என்றுதான் நீர் சொல்கிறீரா?'' என்று கழுகாரைத் தூண்டிவிட்டோம். சிரித்தபடியே, ''சிந்திக்க ஒரு கதை!'' என்றார். ''பாட்டுடன் வந்தவர்... அடுத்து கதை சொல்லப்போகிறீரா? எப்போதுதான் நியூஸ்?'' என்று செல்லமாகக் கோபம் காட்டினோம். ''கதையைச் சொன்னதே ஜெயலலிதா என்றால் கேட்பீரா? மாட்டீரா? சசிகலாவுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்ட தினத்தன்று வெளிவந்த 'நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் அரைப் பக்கத்துக்கு ஒரு கதை வெளிவந்துள்ளது. அதற்கு 'ராமர் நடத்திய நாடகம்’ என்று தலைப்புக் கொடுத்துள்ளார்கள். இது தற்செயலானதா? அல்லது அறிவுரை கூறலா? என்று தெரியவில்லை. மிகமிக நீளமான கதையின் சுருக்கம் மட்டும் சொல்கிறேன்!