Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நந்தன வருட பலன்கள் !

'ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

தமிழ்ப் புத்தாண்டான 'நந்தன' ஆண்டு, வரும் 13.4.2012 வெள்ளிக்கிழமையன்று பிறக்கிறது. அதாவது... மாலை மணி 5.37-க்கு கிருஷ்ண பட்சத்து அஷ்டமி திதி, உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதம், தனுசு ராசி கன்னியா லக்னம் 4-ம் பாதத்தில், நவாம்சத்தில் சிம்ம லக்னம் தனுசு ராசியில், சித்தி நாம யோகத்தில் கௌலவம் நாம கரணத்தில், சித்த யோகம், நேத்திரம், ஜீவனம் கூடிய நன்னாளில் பஞ்சபட்சியில் பகல் கடைசி சாமத்தில் கோழி பலமிழந்த நேரத்தில் சூரிய தசையில், சந்திர புக்தியில், சனி அந்தரத்தில், குரு ஓரையில் சிறப்பாக பிறக்கிறது நந்தன ஆண்டு!  இந்தப் புத்தாண்டில் நம் ஒவ்வொருவரின் ராசிப்படி... சாதக, பாதகங்கள் எப்படி எப்படியெல்லாம் இருக்கும் என்று இங்கே பார்ப்போம்...

மேஷம்: கூடி வாழும் குணம் கொண்டவர்களே! உங்கள் ராசிக்கு 9-வது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. 17.5.2012 முதல் குரு 2-ல் அமர்வதால், கணவர் பாசமாக இருப்பார். மகளுக்கு நல்ல வரன், மகனுக்கு நல்ல வேலை அமையும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். உடல் நலம் சீராகும். கார்த்திகை, தை, மாசி மாதங்களில் சொத்து, உயர்ரக ஆபரணங்கள் வாங்குவீர்கள். 13.4.2012 முதல் 11.9.2012 வரை சனி 6-ல் நிற்பதால், எதையும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். 2.12.2012 முதல் வருடம் முடியும் வரை ராசிக்குள் கேது, 7-ல் ராகுவும் நிற்பதால்... உடல் உபாதை, டென்ஷன் வந்து போகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். ஜூன் மாதம் முதல் உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் தேடி வரும். என்றாலும், 12.9.2012 முதல் சனி 7-ல் அமர்வதால் முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.  

இந்தப் புத்தாண்டு குடும்ப அமைதியையும், வசதி, வாய்ப்புகளையும் அதிகப்படுத்தும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று செவ்வாய்க்கிழமையில் நெய் விளக்கேற்றி வணங்குங்கள்.  

ரிஷபம்: எதிலும் நடுநிலை தவறாதவர்களே! உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ராசிக்குள் ஆட்சி பெற்றிருக்கும் நேரத்தில் இந்த நந்தன வருடம் பிறப்பதால், அடிப்படை வசதிகள் பெருகும். ஆனால், எட்டாவது ராசியில் பிறப்பதால்... வீண் டென்ஷன், ஆரோக்கிய குறைவு வந்து நீங்கும். 17.5.2012 முதல் குருபகவான் ராசிக்குள் ஜென்ம குருவாக வருவதால், வாக்குவாதங்கள் வரும். குறிப்பாக, ரோகிணி நட்சத்திரக்காரர்கள் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ஆடி, ஆவணி மாதங்களில் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். 11.9.2012 வரை சனி 5-ல் நிற்பதால், பிள்ளைகள் கொஞ்சம் கோபப்படுவார்கள். 12.9.2012 முதல் வருடம் முடியும் வரை சனி 6-ம் வீட்டிலேயே தொடர்வதால், பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் பிறக்கும். 2.12.2012 முதல் கேது உங்கள் ராசியை விட்டு விலகுவதால், முன்கோபம் நீங்கும். ஆனால், கேது 12-ல் நுழைவதால்... திடீர் பயணங்கள், தூக்கமின்மை ஏற்படலாம்.. 2.12.2012 முதல் 6-ம் வீட்டுக்கு ராகு வருவதால் எதிர்த்தவர்கள், நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில்... சம்பள உயர்வு கிடைக்கும்.    

இந்தப் புத்தாண்டு, முற்பகுதியில் வேலைச்சுமையை தந்தாலும், மையப்பகுதியிலிருந்து மகிழ்ச்சியை தரும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் சிவாலயம் சென்று திங்கட்கிழமையில் நெய் விளக்கேற்றி வணங்குங்கள்.

மிதுனம்: இதயத்திலிருந்து பேசுபவர்களே! உங்கள் ராசியை சந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், சமயோஜிதமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சொந்த பந்தங்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. 17.5.2012 முதல் குருபகவான் ராசிக்கு 12-ல் மறைவதால்... சுபச் செலவுகள், வேலைச்சுமை அதிகமாகும். 13.4.2012 முதல் 11.9.2012 வரை சனிபகவான் நான்காம் வீட்டில் அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால்... மறைமுக விமர்சனம், தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரலாம். 12.9.2012 முதல் சனி 5-ல் நுழைவதால், பிள்ளைகளின் போக்கு கவலை தரக்கூடும். 2.12.2012 முதல் கேது லாப வீட்டுக்கு வருவதால், ஷேர் மூலம் லாபம் வரும். ராகு 5-ம் வீட்டுக்கு வருவதால், எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். ஆவணி, புரட்டாசி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் புதிய திட்டங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில்... பதவி உயர்வு, எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

இந்தப் புத்தாண்டு கொஞ்சம் அலைச்சல் தந்தாலும், முன்னேற்றப் பாதையில் தடைபடாமல் செல்ல வைக்கும்.

பரிகாரம்: சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானை அருகம்புல் சாற்றி வணங்கவும்.

கடகம்: சுதந்திர மனப்பான்மை உள்ளவர்களே! உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் இந்த நந்தன ஆண்டு பிறப்பதால், பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். செவ்வாய் 2-ம் வீட்டில் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால்... பேச்சால் பிரச்னை, வீண் செலவுகள் ஏற்படலாம். 17.5.2012 முதல் வருடம் முடியும் வரை குரு பகவான் லாப வீட்டில் அமர்வதால், வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பழுதாகிக் கிடக்கும் வாகனத்தை வைகாசி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் மாற்றுவீர்கள். 11.9.2012 வரை சனி 3-ல் நிற்பதால், மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். 12.9.2012 முதல் சனி 4-ல் அமர்வதால்... வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் ஏற்படும். 2.12.2012 முதல், வருடம் முடியும் வரை ராசிக்கு 10-ம் வீட்டில் கேது நீடிப்பதால், உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். 2.12.2012 முதல், ராகு 4-ம் வீட்டுக்கு வருவதால்... பசியின்மை, தூக்கமின்மை வந்து போகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.   உத்யோகத்தில் உயரதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். 17.5.2012 முதல் 10-ம் வீட்டை விட்டு குரு விலகுவதால், பெரிய பொறுப்புகள் தேடி வரும்.

இந்த நந்தன வருடம் புகழையும், பண பலத்தையும் தரும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் ஆஞ்ச நேயர் கோயிலுக்கு நவமி திதியில் சென்று நெய் விளக்கேற்றி வணங்குங்கள்.

சிம்மம்: முகத்துக்கு நேராக பேசுபவர்களே! உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் குருபகவான் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், தொட்ட காரியம் துலங்கும். செலவுகளைக் குறைத்து, சேமிக்கத் தொடங்குவீர்கள். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் குடும்பத்தில் நல்லது நடக்கும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். 17.5.2012 முதல் குரு ராசிக்கு 10-ல் நுழைவதால், சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் வரும். ஆனி, தை மாதங்களில் பணப்பற்றாக்குறை நீங்கும். 13.04.2012 முதல் 22.6.2012 வரை செவ்வாய் ராசிக்குள் அமர்ந்திருப்பதால்... முன் கோபம், உடல் உபாதை, சொத்து பிரச்னைகள் வந்து செல்லும்.

சனிபகவான் 11.9.2012 வரை பாதச்சனியாக 2-ல் அமர்ந்திருப்பதால், பேச்சில் காரம் வேண்டாம். 12.9.2012 முதல் சனிபகவான் 3-ம் வீட்டுக்குள் நுழைவதால், எதையும் சாதித்துக் காட்டுவீர்கள். 2.12.2012 முதல் ராகு 3-ம் வீட்டுக்குள் நுழைவதால், எதிர்ப்புகள் அடங்கும். பிரச்னைகள் சுமுகமாக முடியும். கேது 9-ல் நுழைவதால், வரவுக்கு மிஞ்சிய செலவுகள், கருத்து மோதல்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் வரவு சுமார்தான். வைகாசி, தை மாதங்களில் லாபம் கணிசமாக உயரும். 17.5.2012 முதல் குருபகவான் 10-ல் அமர்வ தால் உத்யோகத்தில் கால நேரம் இல்லாமல் உழைக்க வேண்டிவரும்.  

இந்தப்  புத்தாண்டு சமூக அந்தஸ்தையும், நிம்மதியையும் உங்களுக்குத் தரும்.

பரிகாரம்: பௌர்ணமி திதி நாளில் லக்ஷ்மி நரசிம்மரை வணங்குங்கள்.

கன்னி: பாரம் சுமந்து களைத்தவர்களை சுமப்பவர்களே! உங்கள் ராசிக்கு 4-வது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால்... பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். சித்திரை, வைகாசி மாதத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். 17.5.2012 முதல் குரு 9-ல் அமர்வதால், புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். உறவினர், தோழிகள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சனிபகவான் 13.4.2012 முதல் 11.9.2012 வரை ஜென்மச்சனியாக இருப்பதால், பதற்றம் வந்து போகும். 12.9.2012 முதல் பாதச்சனியாக தொடர்வதால்... பேச்சால் பிரச்னை, அநாவசிய செலவுகள் ஏற்படலாம்.. பொங்குசனி நடைபெறுபவர்களுக்கு திடீர் யோகமும் உண்டாகும். 2.12.2012 முதல் ராகு 2-ம் வீட்டிலும், கேது 8-ம் வீட்டிலும் நுழைவதால்... வீண் வாக்குவாதம், மன இறுக்கம் வந்து செல்லும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.

இந்தப் புத்தாண்டு உடல் ஆரோக்கியம், மன மகிழ்ச்சி தரும்.

பரிகாரம்: குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபடுங்கள்.

துலாம்: பரந்த மனம் கொண்டவர்களே! உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் இந்த நந்தன ஆண்டு பிறப்பதால், சவாலான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். சிலருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். 17.5.2012 முதல் குரு 8-ல் அமர்வதால், சாலையில் செல்லும்போது கவனம் தேவை. முன்யோசனையில்லாமல் அவசர முடிவுகள் எடுக்காதீர்கள். வருட ஆரம்பம் முதல் 11.9.2012 வரை விரயச் சனி நடைபெறுவதால், திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். 12.9.2012 முதல் வருடம் முடியும் வரை ஜென்மச்சனி தொடர்வதால், ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். 2.12.2012 முதல் உங்கள் ராசிக்குள் ராகுவும், கேது 7-ம் வீட்டிலும் அமர்வதால், உடல் நலக் கோளாறு வந்து செல்லும். வியாபாரத்தில், போட்டிகளை சமாளிப்பீர்கள். பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில், புது வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.

இந்தப் புத்தாண்டில் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும்,  வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகளும் உண்டு.

பரிகாரம்: அருகிலிருக்கும் புற்று அம்மன் கோயிலுக்குச் செல்லுங்கள்.

 

விருச்சிகம்: எதிலும் புதுமையை விரும்புபவர்களே! உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். 17.5.2012 முதல் குருபகவான் 7-ம் வீட்டில் நுழைவதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். 13.4.2012 முதல் 22.6.2012 வரை செவ்வாய் 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், குழந்தை இல்லாத தம்பதியருக்கு வாரிசு உருவாகும். 13.4.2012 முதல் 11.9.2012 வரை சனி லாப வீட்டில் அமர்ந்திருப்பதால், எதிலும் முன்னேற்றம் உண்டு. 12.9.2012 முதல் ஏழரைச் சனி தொடர்வதால், வேலைச்சுமை அதிகரிக்கும். 2.12.2012 முதல் ராகு உங்கள் ராசியை விட்டு விலகுவதால்... அழகு, ஆரோக்கியம் கூடும். கேது 6-ல் நுழைவதால், பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில், வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். உத்யோகத்தில், நெடுநாட்களாக எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்புண்டு.

இது, உங்கள் அடிப்படை வசதிகளை உயர்த்தும் ஆண்டாக மலரும்.

பரிகாரம்: அருகில் இருக்கும் சிவாலயத்தில், சனீஸ்வர பகவானை எள் விளக்கு ஏற்றி வணங்குங்கள்.

தனுசு: புன்சிரிப்பால்  வசீகரிப்பவர்களே! உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் குரு அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், பிள்ளைகளால் பெருமை ஏற்படும். எதிர்பார்த்த பணம் சித்திரை, வைகாசி மாதங்களில் கைக்கு வரும். 13.4.2012 முதல் 22.6.2012 வரை செவ்வாய் 9-ம் வீட்டில் நிற்பதால், பிள்ளைகளுக்கான செலவு அதிகமாகும். 17.5.2012 முதல் உங்கள் ராசி நாதனான குருபகவான் 6-ம் வீட்டில் நுழைவதால், பயணங்கள் செல்ல நேரிடலாம். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். சனிபகவான் சாதகமான வீடுகளில் இந்தாண்டு முழுக்க   செல்வதால், உத்யோகத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். 2.12.2012 முதல் ராகு லாப வீட்டில் நுழைவதால், வேற்று மதத்தினர்களின் உதவி  கிடைக்கும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டுக்கு வருவதால், பிள்ளைகள் பிடிவாதமாக நடந்து கொள்வர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு.

இந்தப் புத்தாண்டு அலைச்சலுடன் ஆதாயத்தையும் தரும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் ஷீரடி சத்ய சாய்பாபா ஆலயத்துக்கு சென்று வழிபடுங்கள்.

மகரம்: மனசாட்சிக்கு விரோதமாக நடக்காதவர்களே! உங்கள் பிரபல யோகாதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று வலுவாக 5-ல் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆனால், உங்களுக்கு பன்னிரண்டாவது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். 23.6.2012 முதல்  செவ்வாய் சாதகமாக அமர்வதால் உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். 17.5.2012 முதல் குருபகவான் ராசிக்கு 5-ம் வீட்டில் நுழைவதால், சொத்து சேர்க்கும் அளவுக்கு வருமானம் உயரும். இந்தாண்டு முழுக்க சனி சாதகமான வீடுகளில் செல்வதால், விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். 2.12.2012 முதல் ராகு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டுக்கு செல்வதால், உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். நான்காம் வீட்டுக்கு கேது வருவதால் சலிப்பு வந்து நீங்கும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும்.

 இது, வெற்றிக் கனியை சுவைக்க வைக்கும் ஆண்டாக இருக்கும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் சிவாலயத்திலுள்ள பைரவரை வணங்குங்கள்.

கும்பம்: மலர்ந்த முகத்துடன் பழகுபவர்ளர்களே! உங்கள் ராசிக்கு பதினோராவது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால்... அழகு, ஆரோக்கியம் கூடும். சித்திரை, வைகாசி, ஆடி மாதங்களில் பணப் புழக்கம் திருப்திகரமாக இருக்கும். 23.6.2012 முதல் 14.8.2012 வரை செவ்வாய் 8-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், உறவினர்ககளால் அலைச்சல் இருக்கும். 17.5.2012 முதல் குரு நான்காம் வீட்டில் நுழைவதால், வேலைச்சுமை அதிகரிக்கும். 13.4.2012 முதல் 11.9.2012 வரை ராசிநாதன் சனி பகவான் அஷ்டமத்துச்சனியாக வருவதால், யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். 12.9.2012 முதல் 9-ம் வீட்டுக்கு சனி வருவதால், பணவரவு உண்டு. 2.12.2012 முதல் ராகு உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டுக்கு செல்வதால், சேமிப்புகள் கரையும். கேது, ராசிக்கு மூன்றாம் வீட்டுக்கு வருவதால் உறவினர்களின் அனுசரணை அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் ஆர்வத்துடன் பணிபுரிவீர்கள்.

இந்தப் புத்தாண்டு சமயோஜித புத்தியால் சாதிக்க வைக்கும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோயில் சென்று ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வணங்குங்கள்.

மீனம்: செயற்கரிய செயல்களை செய்தாலும் எளிமையாக இருப்பவர்களே! உங்கள் ராசிக்கு பத்தாவது ராசியில் இந்த நந்தன வருடம் தொடங்குவதால், உங்களின் சாதனை தொடரும். வைகாசி, ஆனி மாதங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். ஆடி மாதத்தில் பிள்ளைகளின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். அரசு காரியங்கள் ஆவணி மாதத்தில் விரைந்து முடியும். 13.4.2012 முதல் 22.6.2012 வரை செவ்வாய் 6-ம் வீட்டில் நீடிப்பதால், பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும். 17.5.2012 முதல் குருபகவான் ராசிக்கு 3-ல் அமர்வதால், சில விஷயங்கள் தாமதமாக முடியும். சனியின் சஞ்சாரம் இந்தாண்டு முழுக்க சரியில்லாததால், பணப்பற்றாக்குறை வந்து நீங்கும். 2.12.2012 முதல் கேது ராசிக்கு 2-ம் வீட்டுக்கு வருவதால், குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் வந்து போகும். எட்டாம் வீட்டுக்கு ராகு வருவதால், சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் வேலைச்சுமை கொஞ்சம் அதிகரிக்கும்.

இது, ஆரோக்கியத்திலும்... பண விஷயத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஆண்டு.

பரிகாரம்: சிவாலயத்தில் நடைபெறும் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
நமக்குள்ளே...
கேபிள் கலாட்டா !

எடிட்டர் சாய்ஸ்