Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

ருண் நன்றாகப் படிக்கக்கூடிய மாணவன். ஆசிரியர்களின் செல்லப் பிள்ளை. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அந்தப் பள்ளியின் பெயர் பிரபலமாகக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவன் அருண். படிப்பு, விளையாட்டு, கல்விசார் கூடுதல் நடவடிக்கைகளில் (Extra Curricular Activities) ஆர்வமாக இருந்த அருண், சில வருடங்களுக்கு முன்மாதிரி மாணவனாக இருந்ததில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. தான் படிக்கும் முறை, விளையாட்டுகளில் பயன்படுத்தும் டெக்னிக்குகளைத் தனது சொந்தப் படைப்பாகப் பதிவுசெய்துவந்தான்.

 இப்படி பட்டொளி வீசிப் பரபரவென இருந்த அருணின் வாழ்வில் முதல் சிக்கலாக வந்தவன் கபிலன். அருண் செய்யும் அனைத்திலும், அவனைவிட கபிலன் பல மடங்கு திறம்படச் செயல்பட ஆரம்பிக்க... அருணின் புகழ் குறைந்து கபிலன் பிரபல மாக ஆரம்பித்தான். சில வருடங்களுக்குப் பின்னர் புனிதா வந்து சேர்ந்தாள். புனிதா வின் இன்னொரு திறமை நண்பர்களை அடையாளம் கண்டு சேர்த்துவைப்பது. இப்படி அழகிய வண்ணத்துப்பூச்சியாக இருந்து வந்த புனிதா புகழ் பெற்றதிலும் ஆச்சர்யம் இல்லை. ஒரு காலத்தில் மதிப்பும் மரியாதையுடன் இருந்த தனது நிலைமை பரிதாபமாகிப்போனதில் அருணுக்கு ஆத்திரம். தனது திறமைகளைத் தீட்டிக்கொள்வதற்குப் பதிலாக, புனிதா மீது வழக்கு தொடர்கிறான் அருண். தான் பதிவுசெய்துவைத்திருந்த தனது திறமை களை காப்பி அடித்துதான் புனிதா புகழ் பெற்றாள். அதனால், அவளது புகழில் இருந்து ராயல்டி கொடுக்க வேண்டும் என்பது அவன் தரப்பு வாய்தா!

நிற்க.

இது கதை அல்ல! மாறாக, டெக் உலகில் இன்று நடந்துவரும் காப்புரிமைச் சண்டை யின் உருவகம்தான் மேற்கண்டது.

பாத்திரங்கள்:

பள்ளி = இணையம். ஆசிரியர்கள் = பயனீட்டாளர்களான நாம் எல்லாரும். அருண் = யாஹூ, கபிலன் = கூகுள், புனிதா = ஃபேஸ்புக்!

உங்களது கண்டுபிடிப்புக்கான காப்புரிமை ஒன்றைப் பெற்றுக்கொள்ள லட்சக்கணக்கில் செலவாகிறது என்பதால், பலர் அதில் கவனம் செலுத்துவது இல்லை. 'இந்தியா வின் எடிசன்’ எனச் சொல்லப்படும் ஜி.டி. நாயுடு பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர் என்றாலும், காப்புரிமைபற்றி அவர் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் உலக அளவில் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல்போனதற்கு முக்கியக் காரணம். பேடன்ட் (Patent) என்பது கண்டுபிடிப்பு அறிஞர்களுக்கு முக்கியம்தான் என்றாலும், அதற்கு விண்ணப்பிக்கும் செயல்முறையும் அது கொடுக்கப்படும் வழிமுறைகளும் அசாத்தியக் குழப்பம் உருவாக்குபவை. உதாரணத்துக்கு, ரைஸ்டெக் என்ற அமெரிக்க நிறுவனத்துக்கு 'பாசுமதி’ அரிசியின் காப்புரிமை கொடுக்கப்பட, இந்திய அரசு 'அமெரிக்கா என்ற நாடு உருவா வதற்கு முன்னரே, எங்களது விவசாயிகள் விளைவித்துவரும் அரிசிக்கு ஒரு நிறுவனத் தின் காப்புரிமை கொடுக்கப்படுவது கேலிக்கூத்து!’ என்றபடி இந்தக் காப்புரிமையை எதிர்த்தது.

வர்த்தகத் தொடர்புடைய அறிவுசார் சொத்துரிமைகளைப் பாதுகாக்க இருக்கும் உடன்படிக்கை என்பது இருந்தாலும், இதன் மூலம் சர்வதேச வழக்கு மன்றங்களில் வழக்கு தொடர்ந்து நடத்துவது அதிக செலவு எடுக்கும் என்பதால், பல நாடுகள் இதைக் கண்டுகொள்வது இல்லை. நாட்டுக்குள்ளேயே வணிகம் நடக்கும் வரை இது ஓ.கே. ஆனால், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய நிலை வருகையில், காப்புரிமைபற்றிய ஆய்வு செய்ய வேண்டும் என்று இறக்குமதி செய்யும் நாடு வலியுறுத்தும்பட்சத்தில் சிக்கல் தொடங்கும். உதாரணத்துக்கு, மேற்படி உதாரணத்தின்படி, இந்தியாவில் இருந்து ஜெர்மனிக்கு பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்கையில், அமெரிக்க நிறுவனமான ரைஸ்டெக்குக்கு ராயல்டி கொடுக்க வேண்டி வந்திருக்கும்.

காப்புரிமை பற்றிய விக்கி உரலி  http://en.wikipedia.org/wiki/Patent. மற்றொரு பயனுள்ள உரலி http://www.google.com/ patents

இந்த வலைதளத்தில் கூகுள் இது வரை கொடுக்கப்பட்டு இருக்கும் காப்புரிமைகள் அனைத்தின் நகல்களையும் தரவேற்றி வைத்திருக்கிறது. மரப்பாச்சி பொம்மையில் இருந்து மைதா மாவு தோசை வரை யாராவது காப்புரிமை இருக்கிறதா என்பதைத் தேடிக் கண்டிபிடிக்கலாம்.

இப்போது காப்புரிமை செய்யப்பட்ட தனது 10 கண்டுபிடிப்புகளை ஃபேஸ்புக் பயன்படுத்தி இருக்கிறது என்கிறது யாஹூ.

உரலி http://paidcontent.org/article/419-meet-the-10-patents-yahoo-is-using-to-sue-facebook/

அது என்னவெல்லாம் என்பதைப் பார்க்கும்போதுதான் யாஹூவின் விஷமத் தனம் தெரிகிறது. இவற்றில் ஒன்றில்கூடப் புதுமையானது, அரிதானது என்பதைப் பார்க்க முடியவில்லை.

பொதுவாக, பெரிய நிறுவனங்கள் இதுபோன்ற இடியாப்பச் சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும்போது, வழக்கு மன்றத்துக்கு வெளியே பணம் கொடுத் துத் தீர்த்துக்கொள்வது வழக்கம்.ஆனால், இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவுக் குப் பிரமாண்டமான பங்குச் சந்தை நுழைவுக்குத் தயாராகிக்கொண்டு இருக் கும் ஃபேஸ்புக், இந்த வழக்கை எதிர் கொள்வது மட்டும் அல்ல; யாஹூவின் மீது நாங்கள் எதிர் வழக்கு தொடரப்போகிறோம் என்றும் சொல்லி இருக்கிறது.

கண்களுக்குத் தெரிவதற்கும் பின்னால் விரிந்திருக்கும் முக்கிய விவகாரம் ஒன்று இருக்கிறது. அது உங்களையும் என்னையும் பற்றியதுதான். என்ன என்பதைப் பார்க்கலாம் அடுத்த வாரத்தில்!

LOG OFF

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
ஹாய் மதன் கேள்வி - பதில்
யாதும் ஊராகி... யாவரும் இல்லாது...

எடிட்டர் சாய்ஸ்