Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அவள் 16

சூரியனோட ஸ்ட்ராவை பறிக்கணும் !உ.அருண்குமார் படங்கள்: வீ.சிவக்குமார்

செமஸ்டருக்குக்கூட அவ்வளவு மெனக்கெட்டிருக்க மாட்டார்கள்... ஆனால், சம்மருக்கு தங்களின் அழகுப் பராமரிப்பில் கேர்ள்ஸ் எடுக்கும் முயற்சிகள், முடிவற்றவை!

 

''அப்படி என்னவெல்லாம் செய்வீங்க..?'' என்றோம், திண்டுக்கல் என்.பி.ஆர். கல்லூரி மாணவிகள் சிலரிடம்.

''எல்லாமே செய்வோமே!'' என்ற அந்த கேர்ள்ஸ் கேங், கோடைக்காக உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எடுக்கும் முயற்சிகளை பட்டியலிட்டபோது, ஒவ்வொரு வருமே ஒரு குட்டி 'பியூட்டி என்சைக்ளோபீடியா' என்பது புரிந்தது!

''பவுடர் போட்டா... பத்தே நிமிஷத்துல வியர்வை அழிச்சுடும். ஆனா, சம்மர்ல நீண்ட நேரம் மேக்கப் தாக்குப் பிடிக்கவும் வழியிருக்கு'' என்று ஆரம்பித்த மீனாட்சி,

''தினமும் மேக்கப் போடுறதுக்கு முன்ன, ஐஸ் கட்டியை முகத்தில் தேய்ச்சுட்டு ஆரம்பிச்சா, மேக்கப் ரொம்ப நேரத்துக்குக் கலையாது. கொஞ்சம் பசும்பால்ல முகத்தை கழுவிட்டு, மேக்கப் போட்டாலும் நீண்ட நேரம் தாங்கும்!'' என்று சொல்ல,

''ஆனா, இதுக்கு ஒரு கண்டிஷன் இருக்கு... உங்க டாடி பால்வளத்துறையில் வேலை பார்க்கணும்!'' என கலாய்த்தார் ஜெஸ்ஸி!

''வெயிலால முகம் கறுத்து, கன்றிப்  போறது முக்கியமான பிரச்னை. அதுக்கு நான் தீர்வு சொல்றேன்!'' என்று முன்வந்த செல்வப்ரியா,

''பப்பாளிப்பழத்தை குழைச்சு தினமும் அரை மணி நேரம் ஃபேஸ் பேக் போட்டுக் கிட்டோம்னா, வெயிலால ஏற்படற கருமை மறைந்து, சருமம் பளபளக்கும். கறுத்துப் போயிருக்கிற கழுத்துக்கு, எலுமிச்சம் பழத்தை ரெண்டா வெட்டி, சுத்தியும் தேய்ச்சா, பளிச்!'' என்றார்.

''முழு உடம்புக்கும் டிப்ஸ் நான் சொல்றேன்!'' என்று விளம்பரத்துடன் வந்த யுவராணி,

''ஆவாரம்பூ இதழ், ரோஜா இதழ், பாதாம், கஸ்தூரி மஞ்சள்... இதையெல்லாம் காய வெச்சு, அரைச்சு வெச்சுக்கணும். தினமும் இதைத் தேய்ச்சுக் குளிச்சா, மொத்த உடம்புக்கும் சரும பாதுகாப்பு கிடைக்கும், வியர்வைத் தொல்லையும் நீங்கும்!'' என்று சொல்ல,

''விளம்பரம் ஓ.கே-தான். ஆனா, இந்த மாடல் ரொம்ப மொக்கையா இருக்கே!'' என்று தாரிணி சலிக்க, 'கிர்’ரானார் யுவராணி!

''வியர்வை நாற்றத்துக்கு எங்கிட்ட சொல்யூஷன் இருக்கு!'' என்று கனிமொழி ஆரம்பிக்க... அத்தனை கண்களும் அவரிடம் திரும்பின.

''தினமும் குளிங்க!'' என்றார் சிம்பிளாக.

மொத்த கேர்ள்ஸும் அவரை மொத்துவதற்காக கிளம்ப, ''ஏய் நிஜமாவே ஒரு சொல்யூஷன் இருக்குப்பா!'' என்று தொடர்ந்த கனிமொழி, ''தினமும் குளிக்கற தண்ணியில, கொஞ்சம் வேப்பிலையைப் போட்டு வெச்சு, பத்து நிமிஷம் கழிச்சுக் குளிச்சா... வியர்வை நாற்றம் நீங்கும். அதேபோல கற்பூரத் தூளையும் குளிக்கிற தண்ணி யில போட்டு கலந்து குளிச்சா, அன்னிக்கு முழுக்க உடம்பு மணக்கும்!'' என்ற கனிமொழிக்கு,

''குட்!'' சொன்னார்கள் கேர்ள்ஸ்!

''சம்மர்ல, உடம்புல இருக்குற எனர்ஜியை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுடுவார் சூரியன். அதைத் தடுக்க வழி சொல்லுங்க மச்சி'' எனக் கோரிக்கை வைத்தார் அபர்ணா.

''அவர்கிட்ட இருக்கிற ஸ்ட்ராவை பிடுங்கணும்!'' என்று வழக்கம்போல் ஜெஸ்ஸி அலும்பைக் கொடுக்க,

''தினமும் இளநீர்ல ஒரு கையளவு வெந்தயம் போட்டுக் குடிப்பேன். அதேபோல கத்தாழை 'ஜெல்’லை நீராகாரத்துல போட்டுக் குடிப்பேன்'' என்று தீர்வு தந்தார் சுபா சங்கரி.

உடனே, ''சைடுல ஏதாவது சித்த மருத்துவம் படிக்கிறியா..?!'' என்று ஆச்சர்யமானார் புவனேஸ்வரி.

'குட்டி பியூட்டி என்சைக்ளோபீடியா’ என்று இவர்களைச் சொன்னது சரிதானே!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
பீட்டர் இங்கிலீஷ் Vs பாரம்பரிய தமிழ்
மெடல்..மெட்ரோ...வைதேகி !

எடிட்டர் சாய்ஸ்