Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஷேர்லக் ஹோம்ஸ்


''பங்குச் சந்தைக்கு நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்பதால் புதன்கிழமை இரவே சிங்கப்பூருக்குப் போகிறேன். அங்கிருந்தபடியே மெயிலில் செய்திகளை அனுப்புகிறேன்'' - வாரத் தொடக்கத்திலேயே இப்படி ஒரு டீல் போட்டிருந்தார் ஷேர்லக். ''போன் வாயேஜ்'' சொல்லி டீலை ஓகே செய்திருந்தோம். சொன்னபடி வெள்ளிக்கிழமை மாலை நமக்கு மெயிலில் செய்தி அனுப்பி இருந்தார் அவர். இனி செய்திகள்..!

மும்பை பங்குச் சந்தையின் எம்.டி.யாக இருந்த மதுகண்ணன், அந்தப் பதவியிலிருந்து விலகி , டாடா சன்ஸ் நிறுவனத்தின் குரூப் ஹெட் (பிஸினஸ் டெவலப்மென்ட்) ஆகப் போகிறார். இவருக்குப் பிறகு பி.எஸ்.இ.யின் தலைமைப் பொறுப்புக்கு வரப் போகிறவர் யார் என்பது சஸ்பென்ஸ்!

கண்ணனின் வருகைக்குப் பிறகு பி.எஸ்.இ.யில் பல புது புராடக்ட்கள் அறிமுகமானது. இதனால் பி.எஸ்.இ. நல்ல வளர்ச்சி கண்டது. என்றாலும், என்.எஸ்.இ.யின் வேகத்திற்கு ஈடு தருகிற மாதிரி புதிய தலைவர் இருக்க வேண்டும் என்கிறார்கள் புரோக்கர்கள்.

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களுக்கு வரி விதிக்கப் படும் என மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து நம் சந்தையைத் தேடிவரும் பணம் மிகவும் குறைந்துவிட்டது. கடந்த ஒன்பது மாத காலத்தில் இல்லாத அளவுக்கு வெளிநாட்டு முதலீடு குறைந்துவிட்டதாம்.

கெயின் எனர்ஜி தனது நான்காவது காலாண்டு ரிசல்ட்டை அறிவிக்கும் சமயத்தில் பங்கொன்றுக்கு   12-15 ரூபாய் ஸ்பெஷல் டிவிடெண்ட் அறிவிக்கலாம் என்கிறார்கள்.  ரிஸ்க் எடுக்க நினைப்பவர்கள் இந்த பங்கை வாங்கலாம்.

எஸ்ஸெல் நிறுவனம் ஐ.வி.ஆர்.சி.எல். நிறுவனத்தில் தனது முதலீட்டை  அதிகரித்துக் கொண்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு 2.08 சதவிகித பங்குகளை வாங்கியதன் மூலம், அதனிடம் இருக்கும் மொத்த பங்குகளின் சதவிகிதம் 12.27-ஆக உயர்ந்துள்ளது. ஐ.வி.ஆர்.சி.எல். புரமோட்டர்கள் வைத்திருக்கும் பங்கில் ஒரு ஷேருக்கு 90 ரூபாய் தரத் தயார் என்கிறது  எஸ்ஸெல்.

கிட்டத்தட்ட 16 நாடுகளில் 114 வங்கிகளை தரமிறக்கம் செய்வதற்கான பரிசீலனையில் இறங்கி இருக்கிறதாம் மூடி நிறுவனம். இதில் இந்தியாவை சேர்ந்த எத்தனை வங்கிகள் தரமிறக்கப்படுமோ என்று கலங்கிப் போயிருக்கின்றன சில வங்கி நிர்வாகம். வங்கிப் பங்கு, பேங்கிங் இ.டி.எஃப்.பில் முதலீடு செய்து வைத்திருப்பவர்கள் கவனமாக இருக்கவும்.

என்.எம்.டி.சி.யின் உற்பத்தி கடந்த ஆண்டைவிட 20%, அதாவது 30 மில்லியன் டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவிலும், கோவாவிலும் இரும்புத் தாது வெட்டி எடுப்பதற்குத் தடை விதித்ததில் என்.எம்.டி.சி.க்கே சாதகம்.

டி.வி.எஸ். மோட்டார்ஸின் துணை நிறுவனமான லட்சுமி ஆட்டோ காம்போனென்ட்ஸ் நிறுவனத்தை ஹோண்டா மோட்டார் இந்தியா நிறுவனம் வாங்கி இருக்கிறது. இதன் மூலம் டி.வி.எஸ். நிறுவனத்திற்கு 620 கோடி ரூபாய் கிடைக்கும்.

அப்போலோ ஹாஸ்பிட்டலின் சுச்சரிதா ரெட்டி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 12,38,000 பங்குகளை விற்றிருக்கிறாராம். என்ன காரணமோ  தெரியவில்லை!

அமெரிக்காவிற்கு விசா தருவது தொடர்பாக உருவாக்கப்பட்டிருக்கும் புதிய விதிமுறைகளினால் ஐ.டி. நிறுவனங்கள் கடுமையாக பாதிப்படைந்திருக்கிறது. அமெரிக்க வாடிக்கையாளர் களின் பிரச்னைகளைத் தீர்க்க ஆட்களை அனுப்ப முடியாத தால் அந்நிறுவனங்கள் வேறு ஐ.டி. நிறுவனங்களைத் தேடி போனாலும் போகலாம்.

வால்டன் இன்டர்நேஷனல் வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனம் பெங்களூரு ஐ.டி. நிறுவனமான மைன்ட்ட்ரீ நிறுவனத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வைத்திருந்த 9.8 சதவிகித பங்கில் பாதியை 90 கோடி ரூபாய்க்கு கடந்த புதன்கிழமை அன்று விற்றது. கடந்த மூன்றாண்டுகளாகவே இந்த நிறுவனம் வைத்திருந்த பங்குகளை கொஞ்சம்       கொஞ்சமாக விற்று வருகிறது.

உலக அளவில் ஐ.டி. துறைக்காகச் செய்யப்படும் செலவு 2012-ல் 3.7 டிரில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. இது கடந்த ஆண்டைவிட 2.5% அதிகம் என்றாலும் 3.7% அளவுக்கு அதிகமாக இருக்கும் என்றுதான் எதிர்பார்த்தார்கள். மேற்சொன்ன இந்த மூன்று செய்திகளும் ஐ.டி. துறை பங்கு வாங்கி வைத்திருப் பவர்களுக்கு!

மூன்றாண்டு லாக் இன் பீரியட் என்று அறிவிக்கப்பட்ட ராஜீவ்காந்தி ஈக்விட்டி ஸ்கீமை ஓராண்டாக குறைக்கலாமா என மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. தவிர, ஒருவர் தன் வாழ்நாளில் ஒரேமுறைதான் இத்திட்டத்தில் முதலீடு செய்து வரிச் சலுகை பெறமுடியும் என்கிற விதியும் குழப்புவதாக இருப்பதால், மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

இ.பி.எஃப்.-ல் கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி ரூபாய் குவிந்துக் கிடக்கிறது. இதில் ஒரு பகுதியை பங்குச் சந்தைக்குத் திருப்பிவிடலாமா என்று யோசித்து வருகிறதாம் மத்திய அரசாங்கம். உள்நாட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தேவைப்படும் இன்ஃப்ரா ஃபண்டுகளில், பி.எஃப். பணத்தில் 5 சதவிகிதத்தை முதலீடு செய்யவும் முயற்சித்து வருவதாக தகவல்..!

பி.எஸ்.இ. அதன் ஏ குரூப்பிலிருந்து ஒரு டஜன் பங்குகளை நீக்கி இருக்கிறது. ஜெட் ஏர்வேஸ், ஸ்ரீரேணுகா சுகார்ஸ், கோத்ரெஜ் இண்டஸ்ட்ரிஸ், ஆம்டெக் ஆட்டோ, ஆல்ஸ்டாம் புராஜெக்ட்ஸ்.. என்பவை விலகிய பங்கில் முக்கியமானவை.                எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ், எம்.ஆர்.எஃப். அஸ்ட்ரஜெனிகா பார்மா, செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ், எய்ஷர் மோட்டார்ஸ் உள்ளிட்ட 13 பங்குகளை புதிதாக ஏ குரூப்பில் சேர்த் துள்ளன.

ஏப்ரல் 13-ம் தேதி இன்ஃபோசிஸ் ரிசல்ட் வரப் போகிறது. 17-ம் தேதி ஆர்.பி.ஐ. கூட்டம் இருக்கிறது. இதில் சி.ஆர்.ஆர். அல்லது முக்கிய வட்டி விகிதங்கள் குறைக்கப்படுமா? அல்லது இரண்டும் குறைக்கப்படுமா? இன்ஃபோசிஸ் ரிசல்ட் எப்படி இருக்கும்? என்பதை பொறுத்தே அடுத்த வாரம் சந்தையின் போக்கு இருக்கும்.

அமெரிக்காவில் மூன்றாம் கட்ட பொருளாதாரச் சலுகை இல்லை என்கிற அறிவிப்பால், நம் சந்தைக்கு வரும் பணம் குறையும். இதனால் ரூபாயின் மதிப்பு 54 வரை செல்லும்.''

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
நிதி ஓசை!
உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

எடிட்டர் சாய்ஸ்