எம்.செல்லையா, சாத்தூர். 'நாட்டியப் பேரொளி’ பத்மினி, 'அபிநய சரஸ்வதி’ சரோஜாதேவி, 'நடிகையர் திலகம்’ சாவித்திரி, 'புன்னகை அரசி’ கே.ஆர்.விஜயா என்று பழைய நடிகைகளுக்கு பட்டம் கிடைத்ததுபோல் இப்போது யாருக்கும் பட்டம் கிடைக்கவில்லையே? கிடைப்பதற்குள் பட்டம் அறுந்து விடுவதால்! சி.பி.நாராயணன், செக்கானூர். மகா விஷ்ணுவும் மகாலட்சுமியும் கடல் நடுவில் இருக்கிறார்கள். அவர்களுடைய ஆடைகள் நனையாமலேயே இருக்கின்றனவே, அது எப்படிங்க? (சத்தியமாக இது தெய்வ நிந்தனை இல்லை.) அது நீங்க நினைக்கிற பாற்கடல் இல்லை. அப்படி இருந்தால் பால் கெட்டுப் போய் மகாவிஷ்ணு மூக்கைப் பிடித்துக்கொண்டுதான் உட்கார வேண்டிவரும். கோடானு கோடி நட்சத் திரங்களைக் கொண்ட 'கேலக்ஸி’ என்கிற விண்வெளிக் கடலில் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்று அர்த்தம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அதற்கு இந்தியர்கள் 'பாற்கடல்’ என்றுபெயர் வைத்துவிட்டார்கள். போன நூற்றாண்டில்தான் விஞ்ஞானிகள் அதற்கு ஆச்சர்யமாக 'மில்கி வே’ என்று பெயர் வைத்தார்கள். நாம வசிக்கிற 'கேலக்ஸி’ங்க!