அன்புக்கரசி, திருச்சி. ''சமீபத்தில் என்னுடைய அக்கா மகள் பூப்பெய்தினாள். ஊரில் இருந்துவந்த பெரியவர்கள் அவளை உளுத்தங்களி, கருப்பட்டி, நல்லெண்ணெய், முட்டை போன்றவற்றை வலுக்கட்டாயமாகச் சாப்பிடச் சொல்கின்றனர். இவை வெறும் சடங்கா அல்லது இவற்றால் ஏதாவது நன்மை இருக்கிறதா?'' தேன்மொழி, மகப்பேறு மருத்துவர், கோவை. ''அது சடங்கு அல்ல... சயின்ஸ். பூப்பெய்தல் என்பது ஒரு பெண்ணுள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும் தருணம். இந்த நேரத்தில் இரண்டையுமே பக்குவப்படுத்தி, தயார் செய்வது என்பது அவளின் வாழ்நாள் முழுமைக்கும் நல்லது. பூப்பெய்தியப் பெண்ணுக்கு உளுத்தங்களி கொடுப்பார்கள். உளுந்தில் புரதச் சத்து உள்ளது. இது கருப்பையைச் சுருக்கும். இதன் மூலம் ரத்தப்போக்கும் வலியும் குறையும். கருப்பட்டியில் அதிக இரும்புச் சத்து இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு சமயங்களில் ரத்தம் வெளியேறுவதன் மூலம் ரத்த சோகை வராமல் இது பார்த்துக்கொள்ளும். எள்ளில் இரும்புச் சத்து இருக்கிறது. எள்ளில் இருந்து கிடைக்கும் நல்லெண்ணெயும் உடலுக்கு நல்லது.. . .