'ஏ, கன்னியம்மா... புள்ளயக் கொஞ்சம் பாத்துக்கத்தா... அக்கி எழுதிட்டு வந்திடுறேன்...' என்றபடி தாயம்மாக்கா வெளியே வரவும், நான் அவளைத் தேடி உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. 'என்ன செமதி, இவ்ளோ தூரம்? கொஞ்சம் கைவேலையா இருக்கேன். காத்து வாங்கிட்டு செத்த வேடிக்கை பாரு...' என்றபடி தாயம்மா பின்புறம் செல்ல, வாசலில் இருந்த கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தேன். கரிசலின் கோடை கொளுத்தத் தொடங்கி இருந்தது. வேம்பும் தென்னையும் இல்லை என்றால், வெக்கையில் புழுங்கிச் சுருங்க வேண்டியதுதான் என்று நினைத்தபடி ஆசுவாசிக்கையில், கன்னியம்மா மண் பானையில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து தந்தாள். சீரகமும் வெட்டிவேரும் கலந்த தண்ணீர் இனித்தது. 'பதநீர் விக்கிற முனியாண்டியை இன்னும் காணல. 'அங்கும் இருப்பான், இங்கும் இருப்பான்; ஆக்கின சோத்துக்குப் பங்கும் இருப்பான்’கிற மாதிரிச் சரியா. . .