எமிலிக்கும் இஷிமுராவுக்கும் விடைதரு விழா. சீவி முடித்துச் சிங்காரித்திருந்தது அட்டணம்பட்டி. கார்த்திகை மாத அருகம்புல் தரை மூடிப் படர்ந்திருப்பது மாதிரி மைதானம் முழுக்க மக்கள். ''இந்த மண்ணுக்கு என்று உண்டான கலைகளை நீங்கள் இப்போது காணப்போகிறீர்கள். போராட்டங்களாலும் துயரங்களாலும் சூழப்பட்ட எங்கள் வாழ்வில் ஒரு வெறுமை நிரப்பப்படாமலே கிடக்கிறது. எங்கள் மக்கள் தங்கள் சொந்தக் கலைகளால் அதை நிரப்பிக்கொள்கிறார்கள். கடவுளும்கூடக் கலையின் இன்னொரு பாகம்தான். இரண்டுமே வாழ்வின் வெறுமையை நிரப்ப வந்த இருவேறு பொருண்மைகள். இப்போது கோலாட்டம் பாருங்கள்'' இருவரின் செவியோடு ஓதினான் சின்னப்பாண்டி. பச்சைப் பாவாடையும் சிவப்புச் சட்டையும் அணிந்த பத்துப் பன்னிரண்டு சிறுமிகள் வட்டமிட்டு வட்டமிட்டுக் கோலாட் டம் ஆடினர். இரு கோல்களும் எதிர்க் கோல்களில் உரச உரச... நாதமும் நாட்டியமும் அங்கே ஒன்றோடு. . .