கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!
மா எஎன்றால் அம்மா; தாயார். அவளின் சிபாரிசுடன் அவள் சொன்னபடி நமக்கு அருள்பவன் அல்லவா கண்ணன்! எனவே, 'மாதவன்’ எனும் திருநாமமும் மகத்தானது. நல்லதும் கெட்டதும் நாராயணன் அறிவான். நன்மையை வழங்குவோரையும் தீமையைத் தருபவர்களையும் அவன் அறியாமல் வேறு எவர் அறிவார்? அதனால்தான் பஞ்ச பாண்டவர்களுடனேயே இருந்து அவர்கள் வெல்வதற்கு அத்தனை முஸ்தீபுகளையும் செய்து, வெற்றி பெறச் செய்தான் ஸ்ரீகிருஷ்ணன். நாச சிந்தனை கொண்ட கௌரவர்களை, துரியோதனக் கூட்டத்தை துவம்சம் செய்தான். நல்ல சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு நல்லவிதமாகச் செயல்பட்டால்தான் உங்களின் அடுத்த சந்ததி, நோய் நொடியில்லாமல், கல்வியும் ஞானமும் கொண்டு சிறப்புற வாழும். சந்ததிகள் மீது அக்கறை இல்லாதவர்கள் இங்கே, எவருமில்லை. ஆகவே, நல்ல சிந்தனைகள், நல்ல செயல்பாடுகள் உங்களிடம் இருந்தால், அவனது திருநாமத்தைச் சொல்லிக் கொண்டிருந்தால்... உங்களிடம் ஓடிவருவான் அந்த நாராயணன்! அத்தனை வாத்ஸல்யமானவன், அவன்! அதனால் அவனுக்கு 'பக்த வத்சலன்’ எனும் திருநாமம் அமைந்தது.