Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சித்திரைக் குழந்தை... குடும்பத்தைக் குலைக்குமா ?

சி.காவேரிமாணிக்கம் படங்கள்: வீ.நாகமணி, சொ.பாலசுப்ரமணியன்

சித்திரை அப்பன்... தெருவில் விட்டான்' என்றொரு சொலவடை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் சொல்லப்படுவது உண்டு. சித்திரை மாதத்தில் பிறக்கும் குழந்தை, அந்தக் குடும்பத்தையே கதிகலங்க அடித்துவிடும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில், பல நூற்றாண்டுகளுக்கு முன் பிறந்த சொலவடை இது!

சமீபத்தில் நாளிதழில் வெளியான நீதிமன்ற தீர்ப்பு ஒன்று... அர்த்தமற்ற அந்தப் பயம் மருத்துவம் சிறக்கும் இந்த 21-ம் நூற்றாண்டிலும் தொடர்கிறது என்பதை உறுதிபடுத்தியுள்ளது! செய்தி இதுதான் -

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏவூரைச் சேர்ந்த கோமதி, ஆடி மாதம் கர்ப்பம் தரித்திருக்கிறார். 'ஆடி மாதத்தில் கர்ப்பம் தரித்தால் சித்திரை மாதத்தில்தான் குழந்தை பிறக்கும். அப்படி சித்திரையில் குழந்தை பிறந்தால் குடும்பத்துக்கு ஆகாது. எனவே, கோமதியைக் கொன்றுவிடு’ என்று, கோமதியின் கணவர் தனபாலிடம் அவர் பெற்றோர் சொல்ல, அதன்படியே கோமதியை அடித்துக் கொலை செய்துவிட்டார்.

தற்போது தனபால் மற்றும் அவருடைய பெற்றோருக்கு ஆயுள் தண்டனையும், அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார் திருச்சி முதன்மை செஷன்ஸ் கோர்ட் நீதிபதி பி.வேல்முருகன்.

'சித்திரையில் குழந்தை பிறந்தால் ஆகாது' என் கிற மூடநம்பிக்கையும், அதனால்  கருக்கலைப்பு, மீறி பிறக்கும் குழந்தையின் மீது வெறுப்பு என்கிற துன்பங்கள் தொடர்கதையாகி விட்ட நிலையில், இந்த மூடநம்பிக்கையை அகற்றும் விதமாக இங்கே பேசுகிறார் சென்னை, எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் எம்.மோகனாம்பாள்.

''கர்ப்பம் தரிப்பதற்கோ அல்லது குழந்தை பெற்றுக்கொள்வதற்கோ 'இந்த மாதம்தான் உகந்தது... இந்த மாதம் சரி கிடையாது’ என எதுவுமே இல்லை. வருடத்தின் எல்லா நாட்களிலும் கர்ப்பம் தரிக்கலாம்; குழந்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனாலும், 'ஆடி மாசம் கணவன், மனைவி சேரக்கூடாது... சித்திரையில் பிள்ளை பிறக்கக்கூடாது’ என்று நம் மக்களிடம் புழங்கி வரும் நம்பிக்கைக்குப் பின், ஓர் அறிவியல் காரணம் உண்டு.

பொதுவாக, ஆடி மாதத்தில் கர்ப்பம் தரிக்கும்போது பெரும்பாலும் சித்திரை மாதத்தில் குழந்தை பிறப்பு நிகழும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சித்திரையில்தான் அக்னி நட்சத்திரம் தொடங்கும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். குழந்தையின் சருமம் மிக மென்மையாக இருப்பதால் வெயிலைத் தாங்க முடியாமல் தோல் சிவந்துவிடும். மேலும், தாய்ப்பால் மட்டுமே உட்கொள்ளும் குழந்தைக்கு உடலில் நீர்வற்றி, உபாதைகள் வர வாய்ப்பு உள்ளது. சின்னச் சின்ன சூட்டுக் கொப்புளங்கள் உடல் முழுவதும் உண்டாகும். சமயங்களில் அம்மை போடுவதற்கும் வாய்ப்பு உண்டு.

குழந்தையை நிறைய பேர் தூக்கிக் கொஞ்சு வதால் தொற்றுநோய்களும் ஏற்படலாம். அதே போல தாய்க்கும் அதிக வெப்பம் மற்றும் வியர்வையால் நாவறட்சி, மயக்கம், வாந்தி உண்டாகலாம். இது அதிகமாகும் போது பக்கவாதம் மற்றும் ரத்தக் குழாய் களில் ரத்தம் உறைதல் போன்ற பெரிய பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

இவற்றை எல்லாம் தவிர்க்கத்தான், 'சித்திரையில் பிள்ளை வேண்டாம்' என்றனர் நம் முன்னோர்கள். ஆனால், விழிப்பு உணர்வு, மருத்துவ வசதிகள் எவ்வளவோ பெருகிவிட்ட இந்தக் காலத்தில் அந்த மூடநம்பிக்கைக்கும், அச்சத்துக்கும் அவசியமே இல்லை. சமயங்களில் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால், அதைத் தீர்ப்பதற்குத் தேவையான நவீன மருத்துவ வசதிகள் தற்போது உள்ளன'' என்று நம்பிக்கை ஊட்டினார் டாக்டர்.

இதைப் பற்றி பேசும் ஜோதிடர் கண்ணன் பட்டாச்சார்யா... ''சித்திரையில் குழந்தை கூடாது என்று நம்முடைய நூல்களில் எந்தக் குறிப்புகளும் இல்லை. ஜாதக ஆய்வுகளிலும் அப்படி எதுவும் கூறப்படவில்லை. ஏகபத்தினி விரத னான ராமன் பிறந்த ராமநவமி வருவது சித்திரை மாதத்தில்தான். அந்தக் காலங்களில் கோடையில் போதுமான தற்காப்பு இல்லாததால் அப்படிச் சொல்லி வைத்தனர். தற்போது தேவை யான வசதிகள் இருப்பதால் சித்திரையை ஒதுக்க வேண்டிய அவசியமே இல்லை!'' என்றார் அழுத்தமாக.

தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவையே தன் இனிய குரலால் கட்டிப் போட்டிருப்பவர்... எஸ். ஜானகி. இசை உலகில் இவர் தொடாத சிகரங்கள் இல்லை, பெறாத சிறப்புகள் இல்லை. இந்த இசை ஆளுமை பிறந்ததும், சித்திரை மாதத்தில்தான்.

''நான் சித்திரையில் பிறந்தவள் என்பதால் என் குடும்பத்தினர் என்னை ஒதுக்கிவிட்டார்களா என்ன? புகுந்த வீட்டிலும் இதனால் எந்த சிறு பிரச்னை யும் ஏற்படவில்லை. எனக்கு இப்போது 73 வயதாகிறது. சித்திரையில் பிறந்ததால் தான் இந்தப் பிரச்னை ஏற்பட்டது என குறிப்பிட்டுச் சொல்லும்படி இதுவரை என் வாழ்வில் எதுவும் நிகழவில்லை. எனவே, சித்திரையில் உங்கள் வீட்டுக்கு வரும் சின்ன உயிரை, சீருடன் வரவேற்று... கொஞ்சுங்கள்!'' என்று வேண்டுகோள் விடுக்கிறார் ஜானகி, தேன் குரலில்!


நம்பிக்கை வளர்ப்போம்!


 கோடையில் பிறக்கும் குழந்தைகள் மற்றும் பிரசவிக்கும் தாய்மார்களை காப்பாற்றிக் கொள்ள டாக்டர் எம்.மோகனாம்பாள் தரும் டிப்ஸ்...

குழந்தைகளுக்கு கை, கால், தலை என மொத்த உடலையும் போர்த்தி ஆடைகள் அணிவிக்க வேண்டாம். செயற்கை இழை மற்றும் கம்பளியால் ஆன ஆடைகள் வேண்டவே வேண்டாம். இதனால் குழந்தையின் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை உறிஞ்சப்படுவதற்கு வாய்ப்பு இல்லாமல் மீண்டும் சருமத்திலேயே தங்கி வியர்க்குரு பிரச்னை வரலாம்.

போதிய காற்றோட்டம் இல்லாததால் எந்த நேரமும் குழந்தை அழுதுகொண்டே இருக்கும். எனவே, வியர்வையை உறிஞ்சக்கூடிய, தளர்வான பருத்தியால் ஆன ஆடைகளையே அணிவிக்க வேண்டும்.

ரப்பர் ஷீட் மேல் குழந்தையைப் படுக்க வைத்தால், ஷீட் மீது ஒரு துணியை விரித்து அதன் மீது குழந்தையைப் படுக்க வைப்பது அவசியம்.

 வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், காலை ஒன்பது மணி முதல் மாலை மூன்று மணி வரை குழந்தையை வெளியில் எடுத்துச் செல்ல வேண்டாம். காலை ஆறு மணிக்கு அடிக்கும் வெயில்தான் பிறந்த குழந்தைக்கு ஏற்றது. அந்த நேரத்தில் குழந்தையை வெளியில் கொண்டு வந்தால், குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்-டி சத்து கிடைக்கும்.

பிரசவம் ஆன பெண்கள் கண்டிப்பாக நாள் ஒன்றுக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் சிறுநீர் நன்றாகப் பிரியும்; தொற்றுநோய்களும் ஏற்படாது. ஜூஸ், வடித்த கஞ்சி போன்ற திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். தர்பூசணிப் பழம், இளநீர், கிர்ணிப்பழம், வெள்ளரிக்காய் போன்ற சூடு தணிக்கும் பொருட்களை எடுத்துக் கொள்ளலாம். பழங்களை நன்றாக கழுவியபின் சாப்பிடலாம். அதேநேரம் அளவாகச் சாப்பிட வேண்டும். கூழ், மோர் போன்ற இயற்கை பானங்களும் நலம் பயக்கும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
நீங்களே உருவாக்கலாம்... வற்றாத நீ்ர ஊற்று !

எடிட்டர் சாய்ஸ்