Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்கவுன்டருக்குப் பின்னால் தி.மு.க. பிரமுகர்?

திண்டுக்கல் திகில்..

சென்னையில் வங்கிக் கொள்ளையர்கள் மீது நடத்தப்பட்ட என்கவுன்டர் பரபரப்பு அடங்குவதற்குள் திண்டுக்கல்லில் அடுத்த அதிரடி. இந்த என்கவுன்டருக்குப் பின்புலமாக இருந்தது தி.மு.க. பிரமுகர் என்பதுதான் யாரும் எதிர்பாராத அதிர்ச்சி.   

கடந்த 12-ம் தேதி மாலை 6.30 மணி அளவில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஒரு லாட்ஜில் புகுந்தது போலீஸ் டீம். அங்கே தனது கூட்டாளிகள் சிலருடன் தங்கி இருந்தான், மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம். இந்தக் கும்பலை கைது செய்யத் திட்டமிட்டு வளைத்ததுதான் என்கவுன்டரில் முடிந்துள்ளது.

போலீஸ் அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.  'ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. ஒன்றியச் செயலாளர் கதிரவன் என்பவர், 'ஒரு தி.மு.க. பிரமுகரின் தூண்டுதலின் பேரில் தன்னை சிலர் கடத்தி, பணத்தையும் நகையையும் பிடுங்கிக் கொண்டதாக’ மதுரை எஸ்.பி-யான அஸ்ரா கர்க்கிடம் புகார் கொடுத்தார். இதை விசாரணை செய்தபோது, வரிச்சியூர் செல்வம் கோஷ்டி இதில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

அந்தக் கும்பல் திண்டுக்கல் லாட்ஜில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் போலீஸ் டீம், அவர்கள் தங்கி இருந்த ஒரு அறையை சுற்றி வளைச்சு இருக்காங்க. ஜெயச்சந்திரன் அறைக்கதவை தட்டிட்டு உள்ளே போனதும், அங்கே இருந்தவர்கள் இன்ஸ் பெக்டரைப் பிடிச்சு அமுக்கிட்டாங்க. அவர் உடனே துப்பாக்கியை எடுத்துச் சுட்டதில் சினோஜ் என்பவன் செத்துட்டான். அடுத்த அறையில் தங்கி இருந்த வரிச்சியூர் செல்வம், கேரளாவைச் சேர்ந்த வர்கீஸ், அஜித் ஆகிய மூணு பேரையும் பிடிச்சிட்டாங்க. பிஜு என்பவன் தப்பித்து விட்டான்...' என்று நடந்த சம்பவத்தை வர்ணித்தார்.

துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த சினோஜ், கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவன். இவர்மீது பாய்ந்த குண்டு நுரையீரலைத் துளைத்ததால் மரணம் ஏற்பட்டதாகச் சொல்லப்​படுகிறது. என்கவுன்டர் சம்பவத்தில் காயம் அடைந்த இன்ஸ்பெக்டர் ஜெயச் சந்திரன், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர், கடந்த 2002-ல் பெங்களூருவில் இமாம் அலி என்கவுன்டர் சம்பவத்தில் முக்கியப் பங்கு வகித்தவர்.

இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனிடம் பேசினோம். ''ஆயுதங்களோட நாலுபேர் தங்கி இருக்கிறதா தகவல் வந்துச்சு. அவங்களைப் பிடிச்சு இருக்கோம். வேற தகவல் வேணும்னா, மதுரை எஸ்.பி-கிட்ட கேட்டுக் கோங்க' என்றார் சுருக்கமாக.

அஸ்ரா கர்க்கிடம் பேசினோம். 'ஆள் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இருக்கிறார்கள் என்பதை அறிந்து பிடிக்க வந்தாங்க. அப்போ நடந்த சண்டையில சுட வேண்டியதாப் போயிடுச்சு...' என்றார்.

ஆள் கடத்தல் புகார் கொடுத்த கதிரவனிடம் பேசினோம். 'உள்கட்சி தேர்தல் விவகாரத்தில் அந்த தி.மு.க. பிரமுகருக்கும் எனக்கும் பிரச்னை. பிப்ரவரி 12-ம் தேதி நான் மதுரை ரிங் ரோட்டுல காரில் போயிட்டு இருந்தேன். அப்போது ஒரு கும்பல் போலீஸ்னு சொல்லி காரை வழிமறிச்சு, அவங்க காரில் வம்படியா ஏத்தினாங்க. அந்தக் கும்பலில் சினோஜும் இருந்தான். அவங்க அந்த தி.மு.க. பிரமுகருக்குப் போன் செய்து என்னைப் பேசச் சொன்னாங்க. என்னை விடச் சொல்லி அவரிடம் கதறி அழுதேன். அதன்பிறகு, அந்தக் கும்பல் என்னை மதுரை ஏர்போர்ட் அருகே இறக்கி விட்டுட்டாங்க. ஆனால், அந்தக் கும்பல்ல வரிச்சியூர் செல்வம் இல்லை'' என்றார்.

வரிச்சியூர் செல்வம் மீது மூன்று கொலை வழ க்குகள் உட்பட 25 வழக்குகள் உள்ளன. ஏழு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். பலமுறை போலீஸ் இவரை சுற்றி வளைத்தபோதும் எப்படியோ தப்பி விடுவார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், மதுரையில் இவரை போலீஸ் துப்பாக்கி முனையில் சுற்றி வளைக்க, நூலிழையில் தப்பினார் செல்வம். சிறையில் உள்ள வரிச்சியூர் செல்வத்தின் வாக்குமூலத்தை வைத்து

கடத்தலுக்கு காரணமாக இருந்த தி.மு.க. பிரமுகரைக் கைது செய்வது போலீஸின் திட்டமாம்.

இந்த என்கவுன்டர் சம்பவம் சில சந்தே கங்களையும் கிளப்பி இருக்கிறது. குண்டு பாய்ந்தவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வ துதான் வழக்கம். ஆனால், குண்டு பாய்ந்த நிலையில் சினோஜை வேனில் ஏற்றியவர்கள், எதற்காகவோ 15 நிமிடங்கள் காத்திருந்து  இருக்கிறார்கள். எதற்காக உடனே மருத்துவமனைக்குச் செல்லவில்லை? காத்திருந்த நேரத்தில் என்ன நடந்தது போன்ற கேள் விகளுக்குப் பதில் இல்லை.

கையில் துப்பாக்கியுடன் காவல்துறை ஆட்சி செய்வது நல்லதுதானா என்பதை ஆட்சியாளர்கள்தான் சொல்ல வேண்டும்.

- ஜி.பிரபு, ஆர்.குமரேசன், ஆர்.மோகன்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி,

உ.பாண்டி, வீ.சிவக்குமார்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
குத்தகை நிலத்தில் குடியிருப்புகளா?

எடிட்டர் சாய்ஸ்