Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புது வீடு !

பக்காவான பிளானிங் தொடர்ம.மோகன்படங்கள்: எம்.உசேன்

புதுமனைப் புகுவிழா நடத்தி இரண்டு மாதங்களே முடிந்திருக்கின்றன கிருஷ்ணகுமார் இல்லத்தில். திருமண ஆல்பத்தைப் போல, புது வீட்டின் கிரகப்பிரவேச ஆல்பத்தை அத்தனை ஆர்வமாகக் காட்டிக் கொண்டே, ''இது மேஜிக் ஸ்டோனால் ஆன சுவர்'', ''அதோ... அந்த டெக்கரேட் லைட் செட்டிங், எல்.ஈ.டி சிஸ்டம்ஸ்'' என்று மறுபக்கம் வீட்டையும் ஆர்வமுடன் நமக்கு அவர் அறிமுகப்படுத்திய விதம்... அந்த இல்லத்தின் மீது அவர் வைத்துள்ள காதலையும் சேர்த்தே வெளிப்படுத்தியது!

''என்னோட நண்பர் வீட்டை 'என்.எஸ். கே.பில்டர்ஸ்'-ன் எம்.டி-யான இன்ஜீனியர் கார்த்திகேயன் கட்டி இருந்தார். அவ்ளோ அழகான அந்த வீட்டைப் பார்த்த நான், அவரை வெச்சே என் வீட்டை கட்ட நினைச் சேன். ஒரு புள்ளியா என்கிட்ட இருந்த என் னோட வீட்டுக் கனவை கார்த்திகேயன்கிட்ட சொன்னேன். அவர்... கண், காது, மூக்குனு உருவம் கொடுத்து, இத்தனை அழகான வீட்டை உருவாக்கிக் கொடுத்துட்டார்... கூடவே என் நண்பராவும் ஆயிட்டார்!'' என்றபடியே கார்த்திகேயன் பக்கம் கிருஷ்ணகுமார் கைநீட்ட... சென்னை, திருவேற்காடு அருகில் உள்ள சின்னகோலடியில் இந்த வீடு எழும்பிய விதத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார் கார்த்திகேயன்.

''கடல் மாதிரி விரிஞ்சு கிடக்கற இந்த 3,850 சதுர அடி இடத்துல... 1,450 சதுர அடியில நீந்துற ஒரு கப்பல் மாதிரி அழகா ஒரு வீட்டை அமைக்கப் போறோம்னு நினைச்சப்போ, ஆரம்பத்துல எங்களுக்கே ஆர்வமா இருந்தது. செவ்வக வடிவ இடம் இது. முன்பக்கம் 900 சதுர அடி, பின்பக்கம் 1500 சதுர அடினு ஓபன் ஸ்பேஸுக்காக விட்டுட்டோம். போர்டிகோ, கார் பார்க்கிங்னு எதையும் பிரிக்காம, வலது பக்கத்துல 18 X 8 அளவில் கார் பார்க்கிங், இடது பக்கத்துல 10 X 8 அளவில் ஆபீஸ் ரூம்னு எடுத்துக்கிட்டு, மையத்துல நுழைவாயிலை அமைச்சுட்டோம். இங்க ஆபீஸ் ரூம் அமைச்சதால, கார் பார்க்கிங் ஏரியா 'டூ இன் ஒன்’னா இப்ப பயன்படுது. அதாவது கவர்டு பார்க்கிங். ப்ளஸ் கவர்டு போர்டிகோனு ரெண்டு விதத்துலயும் பயன்படற மாதிரி ஆகிடுச்சு. தேவைப்பட்டா காரை நிறுத்திக்கலாம். இல்லனா... ஃப்ரீயா உலாவற இடமாவும் பயன்படுத்திக்கலாம். அலுவலக பணிக்காக வந்து போறவங்களை வீட்டுக்குள்ள அனுமதிக்க வேண்டிய அவசியமும் இருக்காது.

இதேபோலத்தான், வெளியாட்கள் உபயோகத்துக்காக, வீட்டோட பின்பக்கம் இருக்கற முதல் தள படிக்கட்டோட கீழ்பகுதியில... டாய்லெட், பாத்ரூம் மற்றும் வாஷ்பேஸின் அமைச்சுருக்கோம். வீட்டோட பின்பக்க ஓபன் ஸ்பேஸ்ல ஷாமியானா அல்லது பந்தல் அமைச்சு நடத்துற வீட்டு நிகழ்ச்சிகளுக்கு... இந்த பாத்ரூம், வாஷ் பேஸினைப் பயன்படுத்திக்கலாம்''

- தொலைநோக்குப் பார்வையுடன் கட்டட வேலைகளை முடித்திருக்கும் கார்த்திகேயன், அறைகளின் அமைப்பு பற்றி தொடர்ந்தார்.

''கீழ்தளத்துல லிவிங் ஏரியாவை 17 X 19 அளவில் விஸ்தாரமா அமைச்சு, அதை ஒட்டினாற்போல 10 X 9 அளவிலான டைனிங் ஹால்; அடுத்தாப்ல... 10X10 அளவில் குழந்தைகளுக்கான பெட்ரூம்; அடுத்ததா 10X15 அளவில் கிச்சன்னு அமைச்சுருக்கோம். 'சமையலறைக்கு ஏன் இவ்ளோ இடம் ஒதுக்கணும்?’னுதான் பலரும் நினைப்பாங்க. இதுக்கு, 'சமைக்கறவங்களுக்கு வசதியானதா கிச்சன் அமைச்சுக் கொடுக்கிறதுதான், நமக்காக நாள் பூரா அந்த அறையிலயே நின்னு... பார்த்துப் பார்த்துச் சமைக்கற அவங்களோட அக்கறைக்கு நாம செய்ற பதில் அன்பு’னு வீட்டு ஓனர் கிருஷ்ணகுமார் சார் சொன்னதையேதான் நானும் பதிலா சொல்றேன். அது எவ்வளவு பெரிய உண்மை!'' என்று கார்த்திகேயன் சொன்னதைக் காதில் வாங்கிய கிருஷ்ணகுமார் - வரலட்சுமி தம்பதியின் முகங்களில் புன்னகை.

''கிச்சனுக்கு எதிர்ல 5 X 15 அளவில் பாஸே X ஏரியாவை (வராண்டா) ஒதுக்கிட்டு, 12 X 11 அளவுல மாஸ்டர் பெட்ரூம் அமைச்சோம். கிச்சனை அடைக்கற கிரைண்டர், பாத்ரூம் பக்கத்துல இடைஞ்சலா நிக்கற வாஷிங் மெஷின், பெட்ரூம்ல தேவையில்லாத ஆடைகளை நிரப்பிக்கிட்டு நிக்கற குட்டி பீரோ... இதுமாதிரியான எல்லா பொருட்களை இந்த பாஸேXல கொண்டு வந்து வெச்சுட்டோம். ஹால்ல நுழைஞ்சதுமே வலது பக்கத்துல, முதல் மாடிக்கு போறதுக்கான படிக்கட்டுகளை அமைச்சுருக்கோம்'' என்ற கார்த்திகேயன், அடுத்ததாக முதல் தளத்துக்கு அழைத்துச் சென்றார்.

''முதல் தளம் விருந்தினர்கள், நண்பர்கள் பயன்படுத்துறதுக்காக இருக்கட்டும்னு சொன்னார் கிருஷ்ணகுமார். ஆனா... 'முதல் தளத்துக்கான 1,450 சதுர அடியை ரெண்டு பாகமா பிரிச்சுக்கிட்டு, ஒரு பாகத்தை விருந்தினர்கள் உபயோகத்துக்கும்... மறுபாகத்தை வாடகைக்கு விடுற அமைப்புல ஒரு வீடாவும் கட்டிடலாம்'னு நான் வலியுறுத்த, அவர் ஏத்துக்கிட்டார். அதேபோலவே ரெண்டு பாகமா பிரிச்சுக்கிட்டு... முன்பாகத்துல 30 X 9 அளவில் பால்கனி, 17 X19 அளவில் லிவிங் ஏரியா, 10 X 10 அளவில் பெட்ரூம், 7 X 5 அளவில் வாஷிங் ஏரியா, 7 X 4 அளவில் டாய்லெட்னு விருந்தினர்களுக்காக கட்டிட்டோம். பின்பாகத்துல 16 X 6 அளவில் கிச்சன், 9 X10 பெட்ரூம், 12 X 15 அளவில் ஹால், அப்புறம் பாத்ரூம், டாய்லெட், சிட்அவுட்னு அமைக்க... 'அட... ஒரு குட்டி வீடு கிடைச்சிடுச்சே!’னு அவ்ளோ சந்தோஷமானார் கிருஷ்ணகுமார்'' என்றவர்,

''தென்கிழக்குல சமையலறை, வடகிழக்குல தண்ணீர் (மோட்டார்), தென்மேற்கில, அதாவது குபேர மூலையில மாஸ்டர் பெட்ரூம்னு வாஸ்துபடி பிளான் செய்த வீடும்கூட இது. தமிழ்நாட்டுல நிலவுற மின்வெட்டு, இப்போ புதுசா கட்டுற கட்டடங்கள்ல இன்வெர்டருக்கான வசதியையும் சேர்த்தே செய்ய வைக்குது. அப்படித்தான் இந்த வீட்டுலயும் 'இன்வெர்டர் லைன்’னு தனியாவே அமைச்சுருக்கோம். இப்படிப் பார்த்துப் பார்த்து எழுப்பியிருக்கிற இந்த வீட்டோட பராமரிப்புச் சாவி, இதோ... மிஸஸ் கிருஷ்ணகுமார் கையில் இருக்கு!'' என்று கார்த்திகேயன் முடிக்க, மகிழ்ச்சி முட்டிக்கொண்டு முன் நின்றது வரலட்சுமி முகத்தில்!

- கட்டுவோம்...


தரை தளம் 1,450 சதுர அடி, முதல் தளம் 1,450 சதுர அடி... மொத்தம் 2,900 சதுர அடியில் உருவாகியிருக்கிறது இந்த வீடு. மேஜிக் ஸ்டோன் கிரானைட்ஸ், மர வேலைப்பாடுகள், எலெக்ட்ரிகல் கிட்ஸ், காம்பவுண்ட், ஃப்ளோரிங் கிரானைட்ஸ்னு என்று உயர்தரமான பொருட்களைக் கொண்டே வடிவமைத்  துள்ளனர். எல்லாமும் சேர்த்து, சதுர அடிக்கு 2,000 ரூபாய் வீதம்... ஒட்டுமொத்த வீட்டுக்கும் ஆன செலவு 58 லட்சம்!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
பேபி ஷாப்பிங் !
ராசி பலன்கள்

எடிட்டர் சாய்ஸ்