Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புது வீடு !

பக்காவான பிளானிங் தொடர் ம.மோகன் படங்கள்: கே.கார்த்திகேயன்

''ஒவ்வொரு தடவை ஊருக்குப் போகும்போதும், 'சொந்தமா வீடு கட்டிடுப்பா!’ங்குறதுதான் அப்பாவின் நலம் விசாரிப்பாகவே இருக்கும். இப்போ இந்த வீட்டைக் கட்டி முடிச்சு நிமிரும்போது, ஏதோ இந்த ஜென்மத்துக்கான பயனை அடைஞ்ச மாதிரி தோணுது!''

- 15 வருடங்களுக்கு முன் கும்பகோணத்திலிருந்து வேலை தேடி சென்னைக்கு வந்தவர், குமரேசன். தன் உழைப்பின் உறுதுணையோடு சென்னை, ஊரப்பாக்கம் அருகில் உள்ள காரணைபுதுச்சேரியில் தனக்கான 'மிடில் கிளாஸ்’ வீட்டை கட்டியிருக்கும் நிறைவு அவர் முகத்தில்!

''புரமோஷனுக்காக வெயிட்டிங். அடுத்ததா வீட்டோட முதல் தளத்தை எழுப்பணும், கார் வாங்கணும்!'' என்று கனவுகளை விரிப்பவருக்கு, இடம் வாங்கிக் கொடுத்து, வீட்டைக் கட்டி, கையில் சாவியையும் திருப்தியையும் கொடுத்திருப்பவர், சென்னை, 'டச் கன்ஸ்ட்ரக்ஷன்’ அரவிந்த்ராஜ்.

''குமரேசன் சாரோட குழந்தையும், என்னோட குழந்தையும் ஸ்கூல்மேட். எங்களோட அறிமுகமே அவங்களாலதான்!'' என்று சிரித்த அரவிந்த், வீட்டின் டிராயிங்கை டேபிள் மீது வைத்து விவரிக்கத் தொடங்கினார்.

''1,428 சதுர அடி கொண்ட இடம் இது. அதுல கட்டடத்துக்கு 766 சதுர அடியும், முன்பக்கம் போர்டிகோ போர்ஷனுக்கு (கார் பார்க்கிங் மற்றும் மாடிப்படிகள் அடங்கியது) 208 சதுர அடியும் எடுத்துக்கிட்டோம். இந்த வீடு, கார்னர் பிளாட்டா அமைஞ்சது சிறப்பு. இந்த வீட்டோட இடப்பக்கமும், எதிர்பக்கமும் 23 அடி அகல சாலைகள். அதனால காற்று, வெளிச்சத்துக்கு குறையிருக்காது'' என்றவர், டிராயிங்கை மடக்கி வைத்துவிட்டு, போர்டிகோ பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

''இந்தப் பகுதியை கார் பார்க்கிங் மற்றும் மாடிக்குப் போவதற்கான படிகள்னு பிரித்து பயன்படுத்தி இருக்கோம். போர்டிகோவோட தரைப்பகுதியில் ஃபேவர் பிளாக் டைல்ஸும், சுவர்ல எலிவேஷன் டைல்ஸும் ஒட்டினது, வீட்டுக்குத் தனி அழகைக் கொடுத்திருக்கு. வீட்டோட முன்பக்க வலது கார்னர்ல மாடிப்படிகள் அமைச்சுருக்கோம். எதிர்காலத்துல முதல் தளம், இரண்டாம் தளம்னு வீட்டை எழுப்பும்போது, தரை தளத்துல இருக்குறவங்களுக்கோ, அடுத்தடுத்த தளங்களுக்கு குடி வர்றவங் களுக்கோ என்ட்ரன்ஸ் எந்த இடையூறையும் ஏற்படுத்தக் கூடாதுங்கறதுக்காக இந்த ஏற்பாடு''

- தேக்கால் ஆன கதவைத் திறந்து ஹாலுக்குள் சென்றார் அரவிந்த்.

''நகைப்பெட்டி மாதிரி கச்சிதமான வீடா இருந்தாலும், ஹாலை கொஞ்சம் பெரிதா, அழகா அமைச்சுட்டோம்னா, நல்ல லுக் கிடைக்கும்ங்கறதால ஹாலுக்கு 14ஜ்15 அளவு இடத்தை ஒதுக்கிட்டோம். ஸ்பெஷல் ஸ்டெயின்  கிளாஸ் பொருத்தப்பட்ட மூன்று ஜன்னல்களும் அதோட வசீகரத்தைக் கூட்டுது. இன்னும் கார்விக் டிசைன், கட்னி மார்பிள்ஸ்னு ஹாலை அசத்தலா வடிவமைச்சுருக்கோம்!'' என்று அரவிந்த் நிறுத்த, தொடர்ந்தார் குமரேசன்.

''அரவிந்த் சார் ஆரம்பத்துல வீட்டோட மேப் போட்டப்போ, 14ஜ்15 அளவுல ஒரு ஹால், 14ஜ்8 அளவுல ஒரு கிச்சன், 11ஜ்12 அளவுல ஒண்ணு, 11ஜ்9 அளவுல ஒண்ணுனு ரெண்டு பெட்ரூம், 7ஜ்4 அளவுல ஒரு பெட்ரூம் அட்டாச்டு பாத்ரூம், ஒரு தனி பாத்ரூம்னு டிராயிங் செய்திருந்தார். 'தனியே அமைக்கிற பாத்ரூமை வீட்டோட பின்பக்கத்துல, காம்பவுண்ட் சுவரை ஒட்டினாற்போல அமைச்சுக் கொடுங்களேன்... வீட்டுக்குள்ளேயே புழங்குற சூழல்ல இருந்து கொஞ்சம் மாறி குளிக்க, துவைக்கனு வெளியில போயிட்டு வர்ற ஃபீலிங் கிடைக்கும். அதோட பாத்ரூமுக்கு ஒதுக்கப் பட்ட இடத்தை பூஜை அறையா அமைச்சுடலாமே?’னு கேட்டப்போ, 'இதுவும் நல்ல ஐடியாவே இருக்கே!’னு ஆர்வமா செய்து கொடுத்தார்!''

- பூஜை அறை முன் நின்று ஃப்ளாஷ்பேக் சொன்னார், குமரேசன்.

தொடர்ந்த அரவிந்த், ''பொதுவா, ரெண்டு பாத்ரூம் வித் டாய்லெட்னு பிளான் செய்யும்போது ஒண்ணு இண்டியன் ஸ்டைல், இன்னொண்ணு வெஸ்டர்ன் ஸ்டைல்னு அமைக்க வேண்டியது அவசியம். குழந்தைகள், சிறியவங்களுக்கு இண்டியன் டாய்லெட், உடம்பு முடியாத பெரியவங்களுக்கு வெஸ்டர்ன் டாய்லெட்னு பயன்படுத்திக்கலாம்.

இந்த வீட்டுக்கு ஸ்கெட்ச் செய்தப்போ, காம்பவுண்ட் சுவருக்கும் கட்டடத்துக்கும் 4 அடி இடைவெளி விட்டுக் கட்டினோம். அதுக்குக் காரணம், குமரேசன் சாரோட மனைவி நிர்மலா மேடம்தான். 'கார் நிறுத்த பார்க்கிங் இல்லாமப் போனாலும் பரவாயில்லைங்க. வீட்டைச் சுற்றி மரம், செடினு வைக்க இடம் ஒதுக்கிடுங்க. தினமும் வீட்டை சுற்றி வந்து நாலு செடிங் களுக்குத் தண்ணி ஊத்துறதுல இருக்குற திருப்தி எனக்குக் கண்டிப்பா வேணும்!’னு விருப்பம் தெரிவிச்சாங்க. இதோ... அவங்களோட அந்த ஆர்வத்தாலயும், உழைப்பாலயும் இன்னிக்கு அங்க வாழை, கொய்யானு தளிரத் தொடங்கியிருக்கு!'' என்று அரவிந்த் சொல்லிக் கொண்டிருக்கும்போதே காபியோட வந்த நிர்மலா முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம், வீட்டைப் போலவே அழகாக!

நிறைவடைந்தது


இடம் ஒரு சதுர அடிக்கு 600 ரூபாய் வீதம், 1,428 சதுர அடிக்கு 8 லட்சத்து 56 ஆயிரத்து 800 ரூபாயும், கட்டடம் 766 சதுர அடிக்கு ஒரு சதுர அடிக்கு 1,200 ரூபாய் வீதம், 9 லட்சத்து 19 ஆயிரத்து 200 ரூபாயும் செலவாகியுள்ளது. போர்டிகோ பகுதிக்கு தனியே 208 சதுர அடிக்கு ஒரு சதுர அடிக்கு 900 வீதம், ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 200 ரூபாயும் சேர்ந்து, இடமும் வீடுமாக மொத்தம் 19 லட்சத்து 63 ஆயிரத்து 200 ரூபாய் செலவாகியுள்ளது. ஃபர்னிச்சர் செலவு சேர்க்கப்பட வில்லை.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
மயிலிறகு மனசு !
நந்தன வருட பலன்கள் !

எடிட்டர் சாய்ஸ்