மனம் ஒரு குரங்கா ?
வனத்தில், வேடன் ஒருவனை புலி துரத்தியது. தலைதெறிக்க ஓடியவன், ஒரு மரத்தில் ஏறிக் கொண்டான்.
புலிக்கு மரம் ஏற முடியவில்லை. வேடனுக்கு நிம்மதி. தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டான். மறுகணம் அருகே பெரிய குரங்கு ஒன்று இருப்பதைப் பார்த்து அதிர்ந்தான். ஆனால், குரங்கு வேடனை அமைதிப்படுத்தியது!
நேரம் சென்றது. குரங்கு சற்றே கண்ணயர... மரத்தடியில் இருந்த புலி பேசியது. 'வேடனே... அந்தக் கு...ரங்கை கீழே தள்ளிவிடு. உன்னை விட்டுவிடுகிறேன்!' என்றது.
எவ்வளவு நேரம்தான் மரத்தில் இருப்பது? தான் தப்பித்தால் போதும் என்று எண்ணிய வேடன் குரங்கை தள்ளி விட்டான்.
கீழே விழுந்த குரங்கிடம், ''குரங்கே! எனக்கு மனித மாமிசம்தான் பிடிக்கும். நீ அந்த மனிதனை தள்ளிவிடு. உன்னை விட்டு விடுகிறேன்' என்றது புலி. அப்படியே செய்வதாகச் சொன்ன குரங்கு, மரத்தின் மேல் ஏறியது. வேடன் அலறினான்.
மரத்தில் ஏறிய குரங்கோ, "அஞ்சாதே! என் இடத்துக்கு வந்த உன்னைக் கைவிடுதல் அறம் ஆகாது. உன்னை காப்பாற்றுவேன்" என்றது!
வாழ்வே வரமாக..!
( சக்தி விகடன் இதழிலிருந்து )
இளைஞன் ஒருவன், மெக்கானிக் கடை ஒன்றில் நீண்ட நாட்களாகப் பணியாற்றி வந்தான். அன்று, ஒரு காரின் இன்ஜினைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தான். அப்போது, அந்த ஊரின் பிரபலமான இதய சிகிச்சை நிபுணர் ஒருவர், தனது காரை செப்பனிடுவதற்காக அங்கு வந்தார்.
அவரை அ...ருகில் அழைத்த இளைஞன், ''பார்த்தீர்களா... இந்த இன்ஜின்தான் காரின் இதயம். இந்த உதிரி பாகங்கள் அனைத்தும் வால்வுகள். நானும் உங்களைப்போல ஒவ்வொரு நாளும் இந்த வால்வுகளை இணைத்து ரிப்பேர் செய்கிறேன். உங்களுக்கும் எனக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆனால், எனக்குச் சம்பளம் வெறும் இருநூறு ரூபாய்; உங்களுக்கோ பல ஆயிரங்கள்'' என்றவன், நீண்டதொரு பெருமூச்சு விட்டுப் பொருமினான்.
அந்த மருத்துவர் ஒரு விநாடிகூடத் தயங்காமல், ''உண்மைதான். நீயும் அறுவை சிகிச்சைதான் செய்யறே! ஆனா... கார் ஓடிக்கிட்டிருக்கும்போது செஞ்சு பாரு!'' என்று கூறிவிட்டுச் சென்றார்.
வாழ்வில், உண்பதும் உறங்குவதும்போல ஒப்பிடுவதும் வெகு இயல்பாக ஒவ்வொரு நாளும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

வாழ்வில் எல்லாம் இருந்தும், மகிழ்ச்சியின்றிப் பலர் தவிப்பதற்குக் காரணம், பொறாமை எனப்படும் வயிற்றெரிச்சல்தான். வள்ளுவரின் மொழியில் சொல்லவேண்டுமானால், அழுக்காறு!
பொறாமை அகற்றி மனத்தை தூய்மையாக வைத்திருந்தால், அதுவே தெய்வம் வாழும் ஆலயமாகும்!
'கடவுள் உன்னை நம்புகிறாரா?'
வெளிநாடு ஒன்றில் நடந்ததாகச் சொல்லப்படும் வேடிக்கையான ஒரு சம்பவம்:
இரவு நேரம். அந்தப் பெரிய வீட்டில் திருடன் ஒருவன் நுழைந்தான். ஒரு பக்கம் படுக்கை அறை; மற்றொரு பக்கம் பணப்பெட்டி இருக்கும் அறை. இதைச் சுலபமாக அடையாளம் கண்டு கொண்ட அந்த அனுபவசாலி திருடன், மெள்ள பணப்பெட்டி இருக்கும் அறைக்குள் நுழைந்தான். பீரோவை நெருங்கினான். அதன் கைப்பிடியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது!
'இந்த பீரோவைத் திறக்க நீங்கள் அதிகம் சிரமப்பட வேண்டாம். ஏனெனில், இது பூட்டப்படவே இல்லை. கைப்பிடியைத் திருகினால் போதும், பீரோ திறந்து கொள்ளும்!' என்ற அந்த வாசகத்தைப் படித்தவன் குஷியானான். 'ஆஹா... வேலை சுலபமாக முடிந்து விடும் போல் இருக்கிறதே!' என்று உற்சாகம் அடைந்தான்.
மீண்டும் ஒரு முறை படுக்கை அறையை நோட்டம் இட்டான். எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
'பணத்தை அள்ளிச் செல்வது ரொம்பவே சுலபம்!' என்ற எண்ணத்துடன், பீரோவின் கைப்பிடியை மெள்ள திருகினான். அவ்வளவுதான்!

உயரே இருந்த கனமான மண் மூட்டை ஒன்று 'பொத்'தென்று அவன் தலையில் விழுந்தது. வலியில் அலறினான் திருடன். இதையடுத்து, வீட்டில் இருந்தவர்கள் விழித்துக் கொண்டனர். எல்லா விளக்குகளும் எரிந்தன.
அபாயச் சங்கும் ஒலித்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் ஓடி வந்தனர். விளைவு... காவலர்கள் வந்து, திருடனைப் பிடித்துச் சென்று சிறையில் தள்ளினர். அங்கே... அந்தத் திருடன் அலுத்துக் கொண்டான்:
''ச்சே... இப்படியெல்லாம் செஞ்சாங்கன்னா, நான் எப்படி இந்த மனிதர்களை நம்ப முடியும்?''
நண்பர்களே, சிந்தித்துப் பாருங்கள்!
திருடன், மற்றவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையா முக்கியம்? இவன் மீது மற்றவர்கள் வைக்கிற நம்பிக்கைதானே முக்கியம்!
பக்தன் ஒருவன், கோயிலில் தரிசனம் முடிந்து கர்வத்துடன் திரும்பிக் கொண்டிருந்தான்.
எதிரே வந்த பெரியவர் ஒருவர், ''இந்த அளவுக்குத் தலை நிமிர்ந்து வருகிறாயே... என்ன காரணம்?'' என்று கேட்டார் அவன், ''நான் கடவுளை நம்புகிறேன்!'' என்றான்.
உடனே, ''அது முக்கியம் இல்லையே!'' என்றார் பெரியவர்.
''எனில்... வேறு எதுதான் முக்கியம்?'' என்று கேட்டான் பக்தன்.
அந்தப் பெரியவர் அமைதியாக பதில் சொன்னார்: ''கடவுள், உன்னை நம்புகிறாரா என்பதே முக்கியம்!''
ரங்கை கீழே தள்ளிவிடு. உன்னை விட்டுவிடுகிறேன்!' என்றது.
எவ்வளவு நேரம்தான் மரத்தில் இருப்பது? தான் தப்பித்தால் போதும் என்று எண்ணிய வேடன் குரங்கை தள்ளி விட்டான்.
கீழே விழுந்த குரங்கிடம், ''குரங்கே! எனக்கு மனித மாமிசம்தான் பிடிக்கும். நீ அந்த மனிதனை தள்ளிவிடு. உன்னை விட்டு விடுகிறேன்' என்றது புலி. அப்படியே செய்வதாகச் சொன்ன குரங்கு, மரத்தின் மேல் ஏறியது. வேடன் அலறினான்.
மரத்தில் ஏறிய குரங்கோ, "அஞ்சாதே! என் இடத்துக்கு வந்த உன்னைக் கைவிடுதல் அறம் ஆகாது. உன்னை காப்பாற்றுவேன்" என்றது! |