மாத ராசிபலன்: 2013 ஜூன் 1 முதல் 30 வரை
- சந்திரசேகரபாரதி
மிதுனம்:
உங்கள் ஜன்ம ராசியில் புதனும் சுக்கிரனும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். இதனால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். வியாபாரிகளுக்கு லாபம் பெருகும். எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் புகழ் பெறுவார்கள். கலைஞர்களுக்கு வெற்றிகள் குவியும். மாதர்கள் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். மக்களால் அளவோடு நலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். கூட்டாளிகள் உதவி புரிவார்கள். புதிய ஆடை, அணிமணிகள் சேரும்.
5-ல் சனியும் ராகுவும் உலவுவதால் மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும். தீய பழக்கவழக்கங்களுக்கு இடம் தரலாகாது. சனியையும் ராகுவையும் குரு பார்ப்பதால் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். 12-ல் சூரியனும் செவ்வாயும் இருப்பதால் அரசு விவகாரங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். தந்தையாலும், உடன்பிறந்தவர்களாலும் செலவுகள் கூடும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. இயந்திரப்பணியாளர்களும் எஞ்சினீயர்களும் பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகும்.
15-ஆம் தேதி முதல் சூரியன் ஜன்ம ராசிக்கு மாறுவதும் சிறப்பாகாது. அலைச்சல் கூடும். அரசாங்கத்தாரால் புகழ் பெறுவீர்கள். எலக்ட் ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். 22-ஆம் தேதி முதல் சுக்கிரன் 2-ஆமிடம் மாறுவதால் குடும்ப நலம் சிறக்கும். பணவரவு அதிகமாகும். பேச்சில் இனிமை கூடும். பெண்களால் நலம் உண்டாகும். ஜலப் பொருட்கள் ஆதாயம் கொண்டுவரும். மாதர்களது முக்கியமான எண்ணங்கள் ஒன்றிரண்டு இப்போது நிறைவேறும். புதிய பொருட்சேர்க்கை நிகழும்.
திருவாதிரை, புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு மாத முன்பகுதி சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 3, 8, 12, 19, 20, 23, 27, 28.
திசைகள்: வடமேற்கு, வடக்கு, தென்கிழக்கு.
எண்கள்: 5, 6, 7. |