Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பழமையை காக்கும் புதிய முயற்சி!

நாளை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில் கும்பாபிஷேகம்!

26.1.2015 அன்று பாலாலயம் செய்யப்பட்டு துவக்கப்பட்ட திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் தற்போது முடிவுற்று நாளை கும்பாபிஷேகத்திற்காக தயார் நிலையில் உள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக முழுவதும் மூலிகைகளையும், இயற்கைப் பொருட்களையும் கொண்டு இக்கோயிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக தொல்லியல் முறையில் திருப்பணிகள் செய்துமுடிக்கப்பட்டுள்ளது.  

தரைத்தளத்தில் பழமை

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலில் மூலவர் சன்னதியில் அர்த்த மண்டபம், மகாமண்டபம், அலங்கார மண்டபத்தில் இருந்த மார்பிள் தரைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு, புராதன முறையில் கருங்கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.  இதற்குத் தேவையான கருங்கற்கள் அனைத்தும் சேலம் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.

குறிப்பாக கோயிலின் திருப்பணி வேலைகளுக்கு  பண்டைய காலத்தைப் போல அரைத்த பொள்ளாச்சி சுண்ணாம்பு, மணல் கற்றாழைச்சாறு, வெல்லம் இவற்றைக் கலந்து புளிக்கச் செய்து கிடைத்த கலவைப் பூச்சு பயன்படுத்தப்பட்டுள்ளது.

கோயிலின் விமானங்களில் உள்ள மரச் சட்டங்களில் தண்ணீர் உறிஞ்சாத வகையில் முந்திரி தோல் எண்ணெய் ஐந்து முறை பூசப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.

மூலவர் ஆனந்த விமானத்தின் உட்புறம் மூன்று நிலைகளிலும் இருந்த ஈரம் முற்றிலுமாக dehumidifier கொண்டு உறிஞ்சி எடுக்கப்பட்டுள்ளது. அதிலிருந்த தங்க ரேக் ஒட்டப்பட்ட கலசங்கள் நீக்கப்பட்டும், செம்பாக இருந்த கவசங்கள் அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்டு மீண்டும் பொருத்தப்பட்டுள்ளது. 1898 மற்றும் 1992 ஆகிய வருடங்களில் பொருத்தப்பட்ட அனைத்து விமானங்களிலும் உள்ள இருபத்தொன்பது செப்பு கவசங்கள், இராஜ கோபுர கலசம் உட்பட அனைத்து விமானங்களுக்கும்  தற்போது தங்க முலாம் பூசப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன. கோயிலின் விமானங்கள் மற்றும் சுற்றுச்சுவர்களில் முளைத்திருக்கும் செடிகளை ஆப்கானிஸ்தானிலிருந்து கொண்டுவரப்பட்ட மூலிகைகளைக் கொண்டு நீக்கியிருக்கிறார்கள்.

நம்மாழ்வார் சன்னதியில்  முன்பு காணப்பட்ட இருட்டைப் போக்க தற்போது வென்டிலேஷன் பொருத்தப்பட்டுள்ளது. அனைத்து வாயிற்கதவுகளுக்கும்,முக்கிய சன்னதிகளின் கதவுகளுக்கும் புதியதாய் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

நெய் தீப வெளிச்சத்தில் மூலவர் தரிசனம் :

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கோயில் முழுவதும் மின் அமைப்புகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இனி திருக்கோயிலின்  உட்புறம் எந்த இடத்திலும் குண்டு பல்புகளையோ, டியூப் லைட்டுகளையோ, அதிக ஒளி உள்ள மினி பல்புகளையோ காண இயலாது. முற்றிலுமாக எல்.ஈ.டி பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் அனைத்து மூலவர் சன்னதியிலும் மூலவரை நெய் தீப வெளிச்ச்சத்தில் மட்டுமே தரிசிக்கலாம்.

கோயிலைச் சுற்றியிருந்த ஆக்கிரமிப்புக்கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு நான்கு மாடவீதிகளிலும் சிமெண்ட் சாலைகள் போடப்பட்டுள்ளது.நான்கு தோரண வாயில்களும் பழுதுபார்க்கப்பட்டு, வர்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

நூறு வருடங்களுக்கு முந்தைய தோற்றத்தில் திருவல்லிக்கேணி ஆண்டாள் நீராட்டு மண்டபம் :

 இதற்கு முன்பு குப்பைமேடாகவும், கடைகளின் ஆக்கிரமிப்பாலும் பக்தர்களின் பார்வைக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டிருந்த பார்த்தசாரதி திருக்கோயிலின் எதிர்புறமுள்ள ஆண்டாள் நீராட்டு மண்டபம் நூறு வருடஙளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டு கோயிலின் பழங்காலத் தோற்றத்தை நினைவூட்டும் வண்ணம் கும்பாபிஷேகத்திற்காக தாயார் செய்யப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணி கோயிலில் முதலாம் இராஜேந்திர சோழனின் கல்வெட்டு கண்டுபிடிப்பு :

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலின் கும்பாபிஷேகம்  12.6.2015 (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. மூலவர் சன்னதியில் அர்த்த மண்டபம், மகாமண்டபம், அலங்காரமண்டபத்தில் இருந்த மார்பிள் தரைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு, புராதன முறையில் கருங்கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.  இதற்குத் தேவையான கருங்கற்கள் அனைத்தும் சேலம் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான திருப்பணிகள் நடைபெற்ற வேளையில்  மூலவர் வேங்கட கிருஷ்ண ஸ்வாமியின் கர்ப்ப கிரகத்தின் வடமேற்கு திசையில்  தரைத்தளத்தை புரணமைக்கும்போது கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் முதலாம் இராஜேந்திரனின்(1012-1044) மெய்கீர்த்திப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

அல்லிக்கேணியில் நந்தவனம் :

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலில்  பல ஆண்டுகளுக்குப் பிறகு அல்லி மலர்ச் செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. குளத்தின் உள்ளே சுற்றிலும் புஷ்பச் செடிகள் நிறைந்த நந்தவனம் அமைக்கப்பட்டுள்ளது.திருக்குளத்தில் நீரை சுத்தப்படுத்த நீர்மூழ்கி மோட்டார்கள் நிறுவப்பட்டு, தண்ணீரை மறு சுழற்சி செய்யப்படுகிறது. 

மொத்தத்தில் ஒவ்வொருமுறை திருவல்லிக்கேணி கோயிலுக்குள் நுழையும்போதும் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயிலுக்குள் நுழைவதைப் போன்ற ஓர் அனுபவத்தோடு பார்த்தசாரதியின் அனுபவத்தைப் பெறலாம்.

கும்பாபிஷேக நேரம்:

12.06.15,  நாளை, வெள்ளிக்கிழமை, காலை 7.00 - 8.00 மணி.

- தி. ஜெயப்பிரகாஷ், படங்கள்: பா. சரவணக்குமார்.