Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கரும்பு ஏந்திய கந்தன்!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் என்னும் ஊரில் அமைந்துள்ளது,  ஶ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமியின் திருக்கோயில்.

தல வரலாறு:

சுமார் 900 -ஆம் ஆண்டுகளுக்கு முன் உறையூரை தலைநகராகக் கொண்டு சோழ மன்னன் ஆட்சி செய்த காலத்தில், இத்தலமானது கடம்ப மரங்கள் நிறைந்த அடர்ந்த  வனமாக இருந்துள்ளது. அப்போது வணிகன் ஒருவன்  உறையூரில் இருந்து வணிக நிமித்தமாக வடக்கு நோக்கிப் பயணத்தைத் தொடங்கினான். அவன் இக்கடம்பவனத்தை வந்தடைந்தபோது இருள் சூழ்ந்துவிட்டதால் மேற்கொண்டு பயணம் செய்ய இயலாமல், இக்கடம்ப வனத்திலேயே தங்க தீர்மானித்து, அங்கிருந்த ஆலமரத்தின் மீது ஏறி அமர்ந்து ஓய்வெடுத்தான். நள்ளிரவில் திடீரென்று அவன் கண்ணெதிரில்  ஒளி மிகுந்த தீப்பிழம்பின் நடுவே ஓர் சிவலிங்கம் தோன்றி, தேவர்களும், முனிவர்களும் வழிபடுகின்ற காட்சியைக் கண்டான். பொழுது விடிந்ததும் அரண்மனைக்கு சென்று பராந்தக சோழ மன்னனிடம் முதல் நாள் இரவு கண்ட அற்புதக் காட்சியை எடுத்துரைத்தான்.

சோழ மன்னனின் அரண்மனையில் விருந்தினராய் தங்கியிருந்த குலசேகரபாண்டியனும், இதைக் கேள்வியுற்று, பாண்டியனும்,சோழனும் வனத்தை வந்தடைந்து சிவலிங்கத்தை தேடி அலைந்தார்கள். ஆனால் அவ்விடத்தில் சிவலிங்கம் தென்படவே இல்லை. அப்போது திடீரென்று கையில் செங்கரும்பு ஒன்றினை ஊன்றிக்கொண்டு முதியவர் ஒருவர்  மன்னர்களை நோக்கி வந்தார்.அவர்களை சிவலிங்கம் உள்ள இடத்திற்க்கு அழைத்து சென்று,சிவலிங்கத்தை காட்டி மறைந்தார்.கீழே சிவலிங்கம் காட்சி தர,அதையொட்டிய மலைமீது ஶ்ரீ பாலதண்டாயுதபாணி கரும்பு  ஏந்தி காட்சி தந்தார். இந்த பேரின்பக் காட்சியை கண்ட மன்னர்கள் இருவரும் மனம் மகிழ்ந்தனர். அவ்விடத்திலேயே மலைமீது முருகனுக்கும், கீழே சிவனுக்கும் தனித்தனி ஆலயம் எழுப்பினார்கள்.

சிவனுக்கு ஏகாம்பரேசுவார் என்று பெயர். இத்திருக்கோயிலுக்குக் கிழக்கே  இரண்டு  கிலோமீட்டர் தொலைவில் அழகிய  மலையின் மீது முருகபெருமான் கோயில் அமைந்துள்ளது. தந்தையும், மகனும் ஒரே ஊரில் அமைந்திருப்பது சிறப்பு வாய்ந்ததாகக் கூறுகிறார்கள்.  மேலும் அருணகிரிநாதர் பாடிய ஸ்தலம் இது.

மதுரையை எரித்த கண்ணகி, அதே உக்கிரத்துடன் வடமேற்கு நோக்கி வரும் போது, கண்ணகியின் கோபத்தை தணித்து, அருள்புரிந்தாராம் முருகப் பெருமான். அதில் மனம் குளிர்ந்த கண்ணகி, செட்டிக்குளத்திற்கு அருகில் உள்ள சிறுவாச்சூர் என்ற ஊரில் ஶ்ரீமதுரகாளி அம்மனாக மக்களுக்கு அருள் புரிகிறார்.

வழிபாடு: 

இம்முருகனை தரிசித்துச் சென்றால், விவசாயத்தில் விளைச்சல் நல்லபடியாக இருக்கும் என்கிறார்கள். விளைச்சலில் லாபம் கண்ட விவசாயிகள் தங்களின் விளைச்சல் தானியங்களை முருகனுக்கு காணிக்கையாக செலுத்தி வழிபடுகின்றார்கள்.

இதே போல குழந்தை பேறு இல்லாதவர்கள் வந்து வழிப்பட்டால், அவர்களூக்குக் கண்டிப்பாக குழந்தை பேறு கிடைக்குமாம். அவ்வாறு குழந்தை பேறு பெற்றவர்கள் கரும்புத் தொட்டிலில் குழந்தையை வைத்து மலையேறித் தங்களின் வேண்டுதலை நிறைவு செய்கிறார்கள்.

விழாக்கள்:

ஶ்ரீபாலதண்டாயுதபாணி கோயிலில் கந்தசஷ்டி விழா மற்றும் பங்குனி உத்திர பெருவிழாவும், ஶ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தைப்பூசத்திருவிழாவும் வெகுவிமரிசையாக கொண்டாப்படுகிறது.

கொடியேற்றத்துடன் துவங்கி 14-நாள் விழாவாக பக்தர்கள் பிரம்மாண்டமாகக் கொண்டாடுகிறார்கள். இம்முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், பால் குடம் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தியும் வழிபடுகிறார்கள்.

எப்படிச் செல்ல வேண்டும்:

பெரம்பலூரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, ஆலத்தூர் கேட். இங்கே உள்ள கோயில் நுழைவாயில் வளைவில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவு பயணித்தால், செட்டிகுளம் என்னும் ஊரில் ஶ்ரீபாலதண்டாயுதபாணியின் தரிசனத்தை பெறலாம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 1 மணி வரை; மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

வெள்ளிக்கிழமை மற்றும் கிருத்திகை நாட்களில்... காலை 8 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

கட்டுரை: ர.ரஞ்சிதா (மாணவப் பத்திரிகையாளர்),

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்