Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாளை அருணகிரிநாதர் குருபூஜை விழா!

ந்தாதி இல்லா இறைவனுக்குக் கந்தாதி அன்றுரைத்தும்
நந்தா வகுப்பலங் காரம் அவர்க்கே நனிபுனைந்தும்
முந்தா தரவில் அவன் புகழ் பூதியும் முற்றும்சொன்ன
எந்தாய் அருண கிரிநாத! என்னை நீ ஏன்றருளே.

(தணிகைமணி)

தெய்வத் தமிழ் இலக்கிய வரலாற்றில் 'சந்தம்’ எனும் பெரு நதியைப் பாயச்செய்து, ஓசையும் இசையுமாக அதை வளப்படுத்திய பெருமை அருணகிரிநாத சுவாமிகளுக்கே உரியது. அவர் அருளிச் செய்த திருப்புகழ்ப் பாடல்களை, முருகப் பெருமான் தன் தாளிலும் தோளிலும் அணிந்து மகிழ்கிறான்.

14-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், திருவண்ணாமலையில் தோன்றியவர் அருணகிரிநாதர். ஆனால், அவரது வரலாறு பற்றிய முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை. அவரது திருப்புகழ்ப் பாடல்களில் காணப்படும் அகச்சான்றுகளைக் கொண்டே அவரது வரலாற்றை - குறிப்பாக அவர் பெற்ற அருள் அனுபவங்களை நாம் அறிய முடிகிறது. ''முத்தைத் தரு பத்தித் திருநகை...’ என்று முதலடி எடுத்துக் கொடுத்து, திருப்புகழ் எனும் சந்தப்பாவைப் பாட வைத்தார் அருணை முருகன்.

அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ்ப் பாடல்கள் மொத்தம் பதினாறாயிரம் என்பர். அவர், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கோபுரத்தில் நின்றபடி அந்தத் திருப்புகழ் ஏடுகளை பூமியில் சிதறி விழுமாறு விட்டதால், அவை பல்லோர் வயப்பட்டு பலப் பலவாய் பல இடங்களுக்கும் போயின என்றும், நிறைவாக அருணகிரி, முனீந்திரர் சிதாகாசப் பெருவெளியில் மறைந்தருளினார் என்றும்... ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் தான் எழுதிய அருணகிரிநாதர் வரலாற்றில் குறிப்பிடுகிறார். பாம்பன் சுவாமிகள், தாம் பாடியுள்ள ஒவ்வொரு பதிகத்திலும் நிறைவுப் பாடலில் அருணகிரிநாதரைப் போற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சொற்சுவை, பொருட்சுவை, யாப்புச்சுவை, அணிச்சுவை, பக்திச் சுவைகளோடு சந்தம் பல செறிந்து விளங்கும் திருப்புகழ், திருவகுப்பு, கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல் மயில் சேவல் விருத்தங்கள், திருஎழு கூற்றிருக்கை ஆகியவை அருணகிரியார் நமக்காகத் தந்த முருகப்பெருமானின் தோத்திர நூல்களாகும். அருணகிரியார் பாடிய பல்லாயிரம் திருப்புகழ்ப் பாடல்களில் இன்று நமக்குக் கிடைத்துள்ளவை 1,331 பாடல்களே! இதில் 206 தலங்களுக்குரிய பாடல்கள் 1,029. மற்ற 302 பாடல்கள் பொதுவானவை.

அவருக்கு குன்று தோறாடல் கூட்டு வழிபாட்டுக் குழுவினர் சார்பாக ''அருணகிரிநாதர் குருபூஜை'' என்ற பெயரில் வருடம்தோறும் குரு பூஜை நடந்து வருகிறது. இந்த ஆண்டு (01.07.015)  நாளை புதன்கிழமை நல்லூர் - முத்தணம்பாளையம் ரோடு, பள்ளக்காட்டுப் புதூர் மந்திரகிரி  வேலாயுதசுவாமி திருக்கோயிலில் நடைபெறுகிறது.

இவ்விழாவில் திருவாவினன்குடி திருக்கோயில் ஓதுவார் மூர்த்தி திரு. அமுதகணேசன் அவர்கள் கவுரவிக்கப்படுகிறார்.

காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணிவரை நடைபெறும் இந்நகழ்ச்சியில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

- இ.ராஜவிபீஷிகா.