Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பின்னணிக் குரல் கலைஞர்கள் முதன்முறையாக முன்னணியில் தோன்றி நடித்த ஸ்ரீராகவேந்திரர் நாடகம்!

ல்வேறு திரைப்படங்களுக்குப் பின்னணிக் குரல் பேசி வரும் பின்னணிக் குரல் கலைஞர்கள் ஒன்றிணைந்து ஸ்ரீராகவேந்திரர் என்னும் நாடகத்தை நேற்று 2-7-2015 மாலை 6 மணிக்கு சென்னை நாரத கான சபாவில் அரங்கேற்றியது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

ஸ்ரீராகவேந்திரரின் முன் ஜென்ம அவதாரங்களான சங்கு கர்ணன், பிரகலாதன், பாஹ்லீகன், ஸ்ரீவியாசராஜர் முதற்கொண்டு பிறகு வேங்கடநாதனாய் பிறந்து, இறுதியாக அவர் மந்திராலயத்தில் உள்ள பிருந்தாவனத்தில் ஜீவ சமாதி அடைந்தது வரை மிகவும் சிறப்பான முறையில் ஸ்ரீராகவேந்திரரின் வரலாற்றை இரண்டு மணி நேர நாடகமாக மேடையில் நிகழ்த்திக் காட்டினார்கள்.

ஸ்ரீராகவேந்திரரின் வரலாற்றை எப்படி அனைவரும் எளிமையாக புரிந்துகொள்ளும் விதமாக உருவாக்கினீர்கள் என இந்நாடகத்தை உருவாக்கிய விட்டல் நாராயணனிடம் கேட்டபோது, "ஸ்ரீராகவேந்திரர் என்றாலே எளிமைதானே" என்றார் அடக்கமாக! "இந்த நாடகத்தில் நடித்த பின்னணிக் கலைஞர்கள் அனைவரும் வருடத்தில் ஒருமுறை 48 நாட்கள் விரதமிருந்து மந்திராலயத்திற்கு சென்று ஸ்ரீராகவேந்திரரை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த பக்தியின் வெளிப்பாடே அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த நாடகம் அரங்கேற காரணமாய் அமைந்தது" என்றார்.

திரையில் தோன்றி நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரத்திற்குத் தங்களின் பின்னணிக் குரலால் உயிர்கொடுக்கும் கலைஞர்கள் நடிப்பாற்றலும் மிகுந்தவர்கள் என்பதை இந்த நாடகம் மூலம் நிரூபித்தார்கள்!

- தி.ஜெயப்பிரகாஷ்
படங்கள்: ப.சரவணக்குமார்