Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குருப் பெயர்ச்சிப் பலன்கள் - 2015

14-7-2015 முதல் 11-8-2016 வரை

(திருக்கணிதப்படி)

- நவக்கிரக ரத்ன ஜோதி சந்திரசேகரபாரதி

 

குரு ஸ்லோகம்:

தேவானாம்ச ருஷினாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.


குரு காயத்ரி:

ஸுராசார்யாய வித்மஹே ஸுர ஸ்ரேஷ்டாய தீமஹி
தந்நோ குரு ப்ரஜோதயாத்.

வ்ருஷப த்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரஜோதயாத்.

நவக்கிரகங்களில் முழுச்சுபர் ஆவார் இவர். தன காரகராகவும், புத்திர காரகராகவும் இருக்கிறார். அந்தணர் வகுப்பைச் சேர்ந்தவர். சமஸ்கிருத பாஷை பேசுபவர். சத்வ குணம் உள்ளவர். மஞ்சள் நிறத்தவர். வாதம் சம்பந்தமானவர். உடலில் சதையையும் மூளையையும் ஆள்பவர். பஞ்ச பூதங்களில் ஆகாயத்தை ஆள்பவர். தேவர்களுக்குக் குரு ஆவார்.

மந்திரியாகவும் விளங்குபவர். நான்கு கரங்களைக் கொண்டவர்.

வடகிழக்குத் திசை இவருக்கு உரியது. யானையை வாகனமாகக் கொண்டவர். குருவுக்குப் பிரீதியாக யானைக்குக் கரும்பு கொடுப்பது நல்லது.  நீள் சதுர (செவ்வக) ஆசனம் இவருக்குப் பிடித்தமானது. இனிப்பு சுவை இவருக்குப் பிடிக்கும்.

இனிப்புப் பண்டங்களை இவருக்கு நைவேத்தியம் செய்து, மற்றவர்களுக்குக் கொடுப்பதன் மூலம் குரு அருள் பெறலாம்.

'பொன்னன்' எனப்படும் இவர் பொன்னுக்கு அதிபதி ஆவார்.

முல்லை மலர் தொடுத்து இவருக்கு அணிவித்து வணங்க, வேண்டியதை வழங்குவார்.

ஹோமம் செய்யும் இடங்களில் இவர் இருப்பார் என்பதால் ஹோமம் நடக்கும் இடங்களுக்குச் சென்று கலந்து கொண்டால் இவரது அருள் கிடைக்கும். அரசு சமித்து இவருக்கு உரியது.  ஹோமத்தில் அரசு சமித்தை உபயோகிப்பதன் மூலம் இவரது அருளைப் பெறலாம்.

தட்சிணாமூர்த்தி இவருக்கு அதிதேவதை ஆவார். இவருக்கு அதிதேவதை இந்திர மருத்துவன் என்றும், பிரத்யதி தேவதை பிரம்மா என்றும் கூறப்பட்டுள்ளது.

பஞ்ச பூத தத்துவத்தில் இவர் ஆகாயத்தைக் குறிப்பதால் ஆகாயத் திருத்தலமான சிதம்பரம் சென்று ஸ்ரீநடராஜரை வழிபடுவதன் மூலம் திருவருளும் குருவருளும் பெறலாம்.

இவர் தனுசு, மீன ராசிகளுக்கு அதிபதி ஆவார். இதில் தனுசு ராசி இவருக்கு மூலத்திரிகோண ராசியாக அமைவதால்  அதிபலம் பெறுவார்.

கடகம் உச்ச வீடு.  மகரம் நீச வீடு.

அறிவு என்றால் குரு. வேதம் என்பதற்குப் பொருள் அறிவு ஆகும்.  வேதத்தின் வடிவம்தான் குரு ஆவார்.

புனித சிந்தனை, நன்னெறிகளைக் கடைப்பிடித்தல், தெய்வ பக்தி, வழிபாடு, மதாபிமானம், ஒழுக்கம், அறிவுக்கூர்மை, பெருந்தன்மை, சாஸ்திர அறிவு, புனித யாத்திரை, மட ஆதிக்கம், அமைச்சர் போன்ற உயர்பதவி, கெளரவமான உத்தியோகம், உயர் ரக வாகனம், அரசு சன்மானம், உயர் ரக ஆடை, அணிமணிகள், நீதி, நியாயம், தர்மம், ஈகை, உடல் உறுதி, உள்ளத் தெளிவு, சுபிட்சம், மகிழ்ச்சி, மலர்ச்சி, கல்வி, நன்மக்கட்பேறு ஆகியவற்றை குரு அருள்வார்.

ஒருவரது ஜாதகத்தில் குரு ஒருவர் மட்டுமே அதிகம் பலமாக இருந்தாலும் போதுமானது. அவரது கருணையால் அனைத்துத் துன்பங்களும் அகலுவதற்கு இடம் உண்டாகும்.

குருவின் பார்வை விசேடமானது. குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும். குரு தசை நடக்காவிட்டாலும், அவர் பார்வை பட்ட இடமும், கிரகமும் நற்பலன்களைத் தரும்.

நவக்கிரகங்களில் முழு முதல் சுபக்கிரகமான, சுபத் தன்மை நிறைந்த குருவானவர் கோசாரப்படி 14-7-2015 அன்று கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு இடம் மாறுகிறார். குருவுக்கு நட்பு வீடு இது. 11-8-2016 வரை சிம்ம ராசியில் உலவிவிட்டு அதன்பிறகு கன்னி ராசிக்கு இடம் மாறுவார்.

சிம்மத்தில் குரு உலவும் இக்காலத்தில் மேஷம், கடகம், துலாம், தனுசு, கும்பம்  ஆகிய ராசிகளைச் சேர்ந்தவர்களுக்கு சுப பலன்களைத் தருவார்.

மிதுனம், கன்னி, மகரம், மீனம் ஆகிய ராசிகளைச் சேர்ந்தவர்களுக்குக் கெடுபலன்களைத் தரக்கூடுமாதலால் குறிப்பிட்ட ராசிக்காரர்கள் குருப் பிரீதி செய்து கொள்வது அவசியமாகும்..

ரிஷப, விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஓரளவு நலம் உண்டாகும்.

ஜனன கால ஜாதகப்படி இந்தக் குருப்பெயர்ச்சிக் காலத்தில் யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் சுப பலன்கள் சொல்லப்பட்டுள்ள ராசிக்காரர்களுக்குப் பருத்தி புடவையாய்க் காய்த்தது போல் இரட்டிப்பு சுப பலன்கள் உண்டாகும். 

கெடுபலன்கள் சொல்லப்பட்டுள்ள ராசிக்காரர்களுக்குச் சங்கடங்கள் குறைந்து, ஓரளவாவது நன்மைகள் உண்டாகும்.

மேலும் ஒருவர் பிறந்த நட்சத்திரத்துக்கு 2, 4, 6, 8, 9-ஆவது நட்சத்திரங்களில் குரு உலவும்போது சுப பலன்களைத் தருவார். ராசிக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்களில் அமர்ந்து, நட்சத்திரப்படியும் சாதகமாக உலவும்போது நற்பலன்களின் அளவு கூடும்.

1, 3, 4, 6, 8, 10, 12-ஆம் இடங்களில் அமர்ந்து, நட்சத்திரப்படி சாதகமாக உலவும்போது கெடுபலன்களின் அளவு குறையும்.

கோசாரம், தசாபுக்தி, நட்சத்திரம் இம்மூன்று நிலைகளின்படி குரு பலம் சிறப்பாக அமையப்பெற்றவர்கள் பாக்கியவான்கள். விசேடமான சுப பலன்களை இவர்கள் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை.

குரு பலம் அமையப் பெறாதவர்கள் குரு கவசம், குரு காயத்ரி, குரு மூல மந்திரம், வேத மந்திரம், ஸ்தோத்திரம், த்யான ஸ்லோகம், அஷ்டோத்திரம் ஆகியவற்றைச் சொல்லி, வழிபடுவது சிறப்பாகும்.

குருவுக்கு உரிய வழிபாட்டுத் தலங்கள்:

கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில் ஆலங்குடி ஆபத் சகாயேஸ்வரர் ஆலயம் குருவுக்குரிய வழிபாட்டு தலமாகும்.  இங்கு தட்சிணாமூர்த்தியே குருவாகக் காட்சி அளிக்கிறார்.

தஞ்சாவூர் அருகில் உள்ள தென்குடி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபடுவதன் மூலமும் குரு அருள் பெறலாம். இங்கு குருவுக்குத் தனிச் சந்நிதி உண்டு.

குரு ஸ்தானத்தில் உள்ளவர்களையும், குடும்பப் பெரியவர்களையும் உள்ளன்புடன் வணங்கி, அவர்களது வாழ்த்துக்களைப் பெறுவதன் மூலமும் குருவருள் பெறலாம்.

வேதம் படித்த அந்தணர்களை வணங்கி, அவர்களுக்கு வஸ்திரம், அன்னம், சொர்ணம் ஆகியவற்றை அளிப்பதன் மூலமும் குருவருள் கிடைக்கும்.

தினமும் 108 முறை குரு காயத்ரியைச் சொல்லி, குருவுக்கு பசும் நெய் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.

இனி, சிம்மத்தில் உலவும் குருவால் பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும் விளையக்கூடிய பொதுப்பலன்களைப் பார்ப்போம்.


ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ.

 உங்களின் குருப்பெயர்ச்சி பலன்களை அறிய,

 உங்களின் ராசிக்குரிய படங்களை க்ளிக் செய்யவும்

 

மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம்
தனுசு மகரம் கும்பம் மீனம்