Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருவாரூரில் உற்சாகத்துடன் துவங்கியது ஆடி சுவாதி விழா!

திருவாரூரில் 9ஆம் ஆண்டு ஆடி சுவாதி விழா இன்றைய தினம் (23.௦7.2௦15) மக்களின் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.   திருவாரூரில் 63 நாயன்மார்களில் நால்வரில் ஒருவராக திகழக்கூடிய, சிவபெருமானின் தோழராய் விளங்கும் சுந்தரருக்கும் பரவை நாச்சியாருக்கும் திருமணம் இன்று வெகு விமரிசையாக முடிந்தது. மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு, வரிசை எடுத்தல், பத்திரிகை அடித்து திருமணம், மொய் வைத்தல், விருந்து படைத்தல் என எம்பெருமானின் நண்பனுக்கு திருமணம் நடந்தேறியது. 

இன்றைய தினம் காலை 6 மணிக்கு நம்பி ஆரூராரை நிறைகுடம் கொடுத்து திருவாரூர் புதுத்தெரு, நாலுகால் மண்டபத்திலிருந்து மாப்பிள்ளை அழைத்தல் நிகழ்ச்சியும் 8 மணிக்கு பெண் அழைத்தல் நிகழ்ச்சியும் நடக்க, காலை 9 மணிக்கு மேல் நம்பி ஆரூராருக்கும் (சுந்தரர்) பரவை நாச்சியாருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. இன்று மாலை 6 மணியளவில் நம்பி ஆரூரார் 63 நாயன்மார்களுடன் ஆழித்தேரோடும் வீதியில் 63 நாதஸ்வர இசை கச்சேரியுடன் வீதியுலா காட்சியும் நடக்கவிருக்கிறது. நாளை மாலை நம்பி ஆரூரார் வெள்ளை யானையில் கயிலாய வாத்தியங்களுடன் வீதியுலா மற்றும் கயிலாயம் செல்லும் நிகழ்வுடன் ஆடி சுவாதி விழா நிறைவுபெறுகிறது.

பேரன்புடையீர் !

"சைவ சமயத்தின் பீடமாகவும், பல சித்தர்கள் அருள் நிறைந்ததும், பஞ்சபூத குலங்களில் முதன்மையாகவும், மூர்த்தி, தலம், தீர்த்தம், இதனுள் முதன்மையாகவும், பிறக்க முக்தி அளிப்பதும், 11 நாயன்மார்கள் வழிபாடு செய்வித்தும், 63 நாயன்மார்கள் அருவமாக உள்ளதும் திருவாரூரில் நீக்கமற நிறைந்துள்ள சிவபரம்பொருள் ஆரூரின் பற்றிடம் கொண்ட பெருமானின் பெரும் கருணையினாலும் திருநீரும், கண்டிகையும், திருவைந்தெழுத்தும் பொருளாக கொண்ட நாயன்மார்களின் குரு அருளினாலும் நடைபெறும் கலியுக ஆண்டு 5116 மன்மத வருடம் ஆடி மாதம் 7ம் நாள் (ஜூலை 23) வியாழக்கிழமை காலை ௦9.௦௦ மணிக்கு மேல் சிவயோக சிவதினத்தில் மேம்படு சடையனாருக்கும், வாழ்க்கை மனை இசைஞானியார்க்கும், உலகம் உய்ய அவதாரம் செய்த நம்பி ஆருரர்க்கும் கதிர்மணி மிகுந்ததென்ன, உருத்திர கணிகைமாமரம் பதியிலார் குலத்துள் தோன்றிய நங்கை பரவைநாச்சியார்க்கும் திருமணம்" என பல நாட்களுக்கு முன்பே பொதுமக்களுக்கு பத்திரிக்கை அடித்து தரப்பட்டன.

வேத ஆகம மந்திரங்கள் முழங்க தோத்திரங்கள் பாட ஹர ஹர, சிவ சிவ என்னும் முழக்கத்தோடு பிரம்மன், விஷ்ணு, இந்திரன் போன்ற தெய்வங்களும், தேவர்களும் வந்து எதிர்கொண்டு அழைத்துச் செல்ல, வெள்ளை யானை மேல் ஏறிப் பறந்து சென்று முக்தியடைந்து சிவலோகம் சேர்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வரலாறு கயிலை மலையில் உபமன்னியு முனிவருக்குப் பரமேஸ்வரனால் உரைக்கப்பட்ட புனிதமான புண்ணிய வரலாறாக பாவிக்கப் படுகிறது.

பிரம்மலோகம், வைகுண்டம் போன்ற தேவலோகங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு விளங்குவதும் ஆணவம் (நான், எனது என்ற உணர்வு) கர்மம் (இன்ப, துன்பங்கள்) மாயை (பிறவிகள்) ஆகிய மூன்று மலங்களிலிருந்தும் விடுவிக்கப் பெற்று முக்தியடைந்த தூய்மையான உயிர்களின் இடமுமாகிய சிவபுரம் என்னும் திருக்கைலாயத்தில் சுந்தரர் என்பவர் பரமேசுவரனுடைய நண்பராய், தொண்டராய் இருப்பவர். ஆலகால நஞ்சின் காற்றுப்பட்டே மேனியெல்லாம் கருத்துப்போன நாராயணன் மற்றும் பிரம்மன், இந்திரன் போன்ற தேவர்கள் எல்லாம் நஞ்சு கண்டு அஞ்சியோடி பூமியிலுள்ள கயிலை மலையை அடைந்து காத்தருளும்படி வேண்டினர். பரமன் பாற்கடலிலிருந்து வந்த ஆலகால நஞ்சை எடுத்து வருமாறு சுந்தரரை அனுப்பினார். சுந்தரர் உருண்டையாகத் திரட்டிக் கொண்டு வந்த விஷத்தை உண்ட சதாசிவன் அண்டசராசரங்களை எல்லாம் காத்தருளி நஞ்சை அமுதமாக்கினார். ஆலகால நஞ்சைக் கொண்டு வந்ததால் சுந்தரருக்கு ஆலகால சுந்தரர் என பெயர் அமைந்தது.சுந்தரர் ஒருநாள் திருத்தொண்டில் ஈடுபட்டிருக்கும்போது அவரது சிந்தனையும் வேறு இரு தொண்டர்களின் சிந்தனையும் வழிபாட்டிலிருந்து விலகின.  மாசடைந்த உயிர்களைத் தூய்மைபடுத்துவதற்காக மாசிலாமணீசன் மூவரையும் மானிடப் பிறவிகளாக அருளச் செய்தார்.
 
சுந்தரர் திருநாவலூரில் வாழ்ந்து வந்த சடையனார் இசைஞானியார் என்ற ஆதிசைவ அந்தணர்களுக்கு ஆரூரான் என்ற பெயர் கொண்ட மகனாக அவதரித்தார். மற்ற இருவர்களுள் ஒருவர் திருவாரூரில் பரவையார் என்ற பெயருடனும், மற்றொருவர் திருவொற்றியூரில் சங்கிலியார் என்ற பெயருடனும் பிறந்து வளர்ந்தனர்.திருமுனைப்பாடி நாட்டு மன்னன் சுந்தரரிடம் அன்பு கொண்டு தன் மகனாகப் போற்றி வளர்த்து வந்தான். உரிய பருவத்தில் பூணூல் அணிவித்தல் முதலிய மங்கல நிகழ்ச்சிகள் எல்லாம் முறைப்படி நடக்க சுந்தரருக்கு 16 ஆண்டுகள் ஆயின.

ஒரு சமயம் சுந்தரர் திருவாரூர் சென்று புற்றிடங்கொண்ட பெருமானைக் காண வருகிறார். அங்கு கோயிற்பணி செய்து வாழ்ந்த பரவையாரைக் கண்டு விரும்பினார். இருவரும் மணம் புரிந்து வாழ்ந்தனர். பின்னர் சுந்தரர் திருவொற்றியூரை அடைந்து தியாகேசரை வணங்கினார். அங்கு சங்கிலியார் மணவாழ்வில் விருப்பமில்லாமல் திருக்கோயில் தொண்டு புரிந்து வாழ்ந்துவந்தார். சங்கிலியாரைக் கண்ட சுந்தரர் அவரை மணம்புரிந்து கொள்ள விரும்பினார். திருவொற்றியூரை நீங்கிச் செல்ல மாட்டேன் என்று கூறி சங்கிலியாரிடம் சத்தியம் செய்து கொடுத்து மணம் புரிந்து வாழ்ந்தார்.
இந்நிலையில் திருவாரூரில் திருவிழாக்காலம் நெருங்கிய நேரத்தில் திருவாரூரைப் பிரிந்திருக்க முடியாமல் வருந்திய சுந்தரர் திருவாரூக்கு பயணமானார். சத்தியத்தை மீறி திருவொற்றியூர் எல்லையைத் தாண்டியதால் அவருடைய கண்கள் குருடாயின. பின்னர் காஞ்சிபுரத்திற்கு சென்று ஏகாம்பரேசுவரனைத் தொழுது பாடினார். அப்போது இறைவன் ஒரு கண்ணில் பார்வை அருளினான். தொடர்ந்து பல்வேறு திருத்தலங்களுக்கு சென்று திருவாரூரை அடைந்து தியாகேசனைத் தொழுது வருந்திப்பாடி வழிபட்டு மற்றொரு கண் பார்வையையும் பெற்றார். அப்போது சுந்தரர் மறுமணம் புரிந்துகொண்டதை அறிந்த பரவையார் சுந்தரரை ஏற்றுக்கொள்ள மறுத்தார். சுந்தரர், பரவையார் மீதுள்ள காதலை தெரிவித்து தியாகேசனின் துணையை நாடினார். பெண்ணாகவும், ஆணாகவும் ஒருசேர விளங்கி எல்லோருக்கும் அருள்புரியும் அர்த்தநாரீசுவரன் வேதியர் வடிவில் சென்று பரவையாரின் சீற்றத்தைத் தணித்து சுந்தரரின் அன்பை புரியவைத்து இருவரும் சேர்ந்து வாழ அருள்புரிந்தான்.
 
பரமனின் உத்தரவுப்படி தனது நண்பராக விளங்கிய சுந்தரர் திருமணம் செய்துகொண்ட பரவை மாளிகைதான் தற்போது திருமணம் பரவைநாச்சியார் சுந்தரர் திருக்கோயிலாகும். இங்கு இருவரும் அருள்பாலித்து வருகின்றனர். அத்தகு சிறப்பு பெற்ற தலத்தில் இன்றைய திருமணம் அரங்கேறி இருக்கிறது.  அன்பர்களுக்கு திருமண விருந்து தியாகராஜர் கோவிலின் ஆயிரங்கால் மண்டபம் அருகே படைக்கப்பட்டது.  இன்றைய தினமும் நாளைய தினமும் நிகழ்வுகள் இருப்பதால் வெளியூர் பயணிகளின் வருகை இன்னும் திருவாரூர் நோக்கி விரைந்து கொண்டே இருக்கிறது.

கட்டுரை மற்றும் படங்கள் : த.க.தமிழ் பாரதன்
மாணவ பத்திரிகையயாளர்