Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிஞ்சுக் குழந்தையின் வினை தீர்த்த ’மன்ச்’ முருகன்!

தமிழர்களின் வாழ்வியலைப் பொறுத்த மட்டில், சமயக் கோட்பாடுகளைக் கடந்து, பொது வாழ்வில் கலந்துவிட்ட, சில கருத்தியல்களில் முக்கியமான இடம் ‘முருகனு’க்கு, என்றும் உண்டு.

தமிழ்க்கடவுள் என்று போற்றப்படும், முருகன், புனிதமானக் கடவுள் என்ற நிலையையும் தாண்டி நம் வாழ்வில் நிறைந்திருக்கிற ஒரு எளிய துணைவனாகவே, பார்க்கப்படுகிறார் என்பதே உண்மை. சீமான் போன்றோரின் பேச்சு தொடங்கி, சினிமாப் பாடல்கள், திடீரெனக் கடவுள் தோன்றும் நகைச்சுவைக் காட்சிகள் வரை நம் நவீனமயமாதலின் பயணத்திற்கு ஏற்றார் போல் நம்மோடு தொடர்ந்து வரும் தன்னேரிலாத ஒரு தொன்மமே ‘முருகக் கடவுள்’.

அந்த இளைய வேளின் இளமைக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது, ஆலப்புழாவிலுள்ள ‘மன்ச் முருகன்’ திருக்கோவில்.

‘யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை’ என்றார் திருமூலர். பச்சை இலைகள் அரிதாகி விட்ட இன்றைய நகரமயமானச் சூழலில், சாக்லேட்டு நிவேதனத்தையும் ஏற்றருள்கிறார் இந்த ‘மன்ச் முருகன்’.


கேரள மாநிலத்தில், ஆலப்புழாவிலுள்ள 'செம்மோத் ஸ்ரீ ஸுப்ரம்ணய ஸ்வாமி' திருக்கோவிலில் வீற்றிருக்கும் பாலமுருகன், பெயருக்குத் தகுந்தாற் போல், பாலனாகிய முருகன், ’மன்ச்’ சாக்லேட் ப்ரியராக அருள்கிறார் என்கின்றனர் பக்தர்கள். இதன் பின் ஒரு சுவையானக் கதையையும் கூறுகின்றனர்.

இது குறித்து, இந்தக் கோவிலைப் பராமரித்து வரும் குடும்பத்தின் தலைவரான, திரு.அனூப் செம்மோத் அவர்களிடம் கேட்டபோது,
”இந்த வழக்கம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கியதாகும். எங்கள் ஊரில் வாழ்ந்த ஒரு இஸ்லாமியச் சிறுவன் தொடர்ந்து முருகனுக்கு, ’மன்ச்’ அளித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு நாளிரவு அவன் கடும் நோய்வாய்ப்பட்டான். இரவெல்லாம் ‘முருகா, முருகா’ என்று சொல்லிய வண்ணம் இருந்திருக்கிறான். மறுநாள் அவனை முருகன் கோவிலுக்கு, அவன் பெற்றோர் அழைத்து வந்திருக்கின்றனர். கோவில் அர்ச்சகர், இறைவனுக்கு ஏதேனும் அர்ப்பணிக்குமாறு கேட்டிருக்கிறார். அச்சிறுவனின் பெற்றோர் பூக்கள், எண்ணெய் முதலிய வழிபாட்டுப் பொருட்களை வாங்கி அர்ப்பணித்திருக்கின்றனர்; ஆனால் அச்சிறுவன் மீண்டும் ‘மன்ச்’ வாங்கி முருகனுக்களித்திருக்கிறான். அந்நாளிலேயே அதிசயமாக, அச்சிறுவன் உடல் நலம் பெற்றுவிட்டான்,” என்று கூறுகிறார்.

இந்தக்கதை ஊர்முழுதும் பரவிப் பரவி, முருகன் ‘மன்ச்’ ப்ரியராக அறிப்பட்டார். இந்நிலையில் ஆடிக் கிருத்திகையன்று கைநிறைய ‘மன்ச்’ ஏந்திய வண்ணம் பக்தர்கள் முருகனைக் காண திரள்கின்றனர்.

பல்வேறு பூஜைகளின் ப்ரஸாதமாக, இக்கோவிலில் ’மன்ச்’ வழங்கப்படுகிறது.மேலும் அர்ச்சனைக்காகவும், மாலைகட்டிச் சாற்றுவதற்காகவும் பக்தர்கள் தட்டு நிறைய ‘மன்ச்’ அளிக்கின்றனர்.
இன்னும் சிலர் ஒரு படி மேலே போய், எடைக்கு எடை, ‘மன்ச்’ துலாபாரம், கொடுக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து ஆலப்புழா வட்டாரத்திலுள்ளக் குழந்தைகளின் செல்லக் கடவுளாகி இருக்கிறார், இந்த ‘மன்ச்’ முருகன்.

”தேர்வு போன்ற சமயங்களில் கையில் சாக்லேட்டுடன், குழந்தைகள் இங்குக் குழுமுவதைப் பார்க்க, அழகாய் இருக்கும்” என்கிறார், இவ்வூர்வாசியான, வழக்குரைஞர் ப்ரியதர்ஷன்.

”சாதி, மத, சமயக் கோட்பாடுகளைத்தாண்டி மக்கள் பெருந்திரளாய் ‘மன்ச்’உடன் வந்து வழிபட்டுப் போவதும், மிகத் தொன்மையான இந்த முருகக்கடவுள், ஆறு ஆண்டுகளில் ’மன்ச்’ ப்ரியாராக மாறிப்போனதும், வியக்கத்தக்கவையே” என்கின்றனர் கோவில் நிர்வாக அதிகாரிகள்.

கடவுளரின் உணவையும் காலம் தான் நிர்ணயிக்கிறது போலும்!

ச. அருண்
மாணவப் பத்திரிக்கையாளர்