Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆடி அமாவாசை விழா சதுரகிரி மலையில் லட்சம் பக்தர்கள்

சதுரகிரி சுந்தரலிங்கம் மலைக்கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடங்களில் பலத்த முன்னேற்பாடுகள்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. கடந்த மே மாதம் 17ம் தேதி வைகாசி வெள்ளியன்று பக்தர்கள் வழக்கம் போல் மலைக்கோவிலுக்கு சென்றனர். அப்போது திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 8 பேர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியாகினர்.

எனவே மே மாதம் 18ம் தேதி முதல் மலைக்கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பக்தர்கள் லட்சகணக்கான பக்தர்கள் மலை ஏறி கோவிலுக்கு சென்று வழிபடுவர். எனவே கடந்த ஆக 8ம் தேதி முதல் பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே ஆடி அமாவாசையை முன்னிட்டு அசாம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க விருதுநகர், மதுரை மாவட்ட போலீசார் அதிக அளவில் குவிக்க்பட்டுள்ளனர். இது தவிர 8 மருத்துவ குழுவினர் மலைப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

ஆடி அமாவாசை நாளான இன்று காலை சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், தயிர், மஞ்சள் உள்பட 18 வகையான அபிஷேகங்கள் நடந்து வருகிறது. பிறகு சிறப்பு பூஜைகள், சிறப்பு அலங்காரங்கள் நடந்து வருகிறது.

வத்திராயிருப்பு அருகேயுள்ள தாணிப்பாறை வழியாக மேற்கு தொடர்ச்சி மலைக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குழுக்கள் குழுக்களாக மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குழு குழுவாக செல்பவர்களில் ஒருவரின் முகவரி மற்றும் செல்போன் நம்பர்களை வனத்துறையினர் பெற்று பதிவு செய்து வருகின்றனர். சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 500 போலீசார் வரிசையாக பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

அது மட்டுமின்றி வானிலையை கண்காணித்து அறிவிப்புகள் வெளியிட மலைப்பகுதியில் 5 மொபைல் டீம்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடங்களில் பாதுகாப்புக்காக சிமிண்ட் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டு கயறுகள் கட்டப்பட்டுள்ளது.

நேற்று இரவு மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இன்று காலை 6 மணி முதல் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே காலை முதல் பக்தர்கள் சாரை சாரையாக மலையேறி வருகின்றனர். அதுபோல் மதுரை மாவட்டம் சாப்டூர் வாழைத்தோப்பு வழியாகவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரன் தலைமையில் 500 போலீசாரும், மதுரை மாவட்ட எஸ்.பி. விஜேயேந்திர பிதாரி தலைமையில் 500 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதுவரை ஒரு லட்சத்துக்கு அதிகமான பக்தர்கள் மலை ஏறியுள்ளனர்.

செய்தி: எம்.கார்த்தி.
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்