Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருப்பதி திருக்குடை இன்று யானை கவுனி தாண்டுகிறது!

ன்று சென்னையில் திருப்பதி குடை யானை கவுனி தாண்டுகிறது!

 குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி’ என ஆண்டாள் போற்றிப் பாடிய ஆண்டவனுக்கு அற்புதமான ஒரு வழிபாடு.

புரட்டாசி மாதம் நெருங்க நெருங்க... திருவேங்கடவனின் அடியார் உள்ளங்கள் எல்லாம், சென்னையை நோக்கியே இருக்கும். ‘தமிழ்நாட்டில் வேறு எந்த ஓர் ஊருக்கும் கிடைக்காத பாக்கியம், சென்னைக்கு உள்ளது. தரும மிகு சென்னை என்பது உண்மைதான்!’ என அவர்கள் வாய் முணுமுணுக்கும்; மெய் சிலிர்க்கும்!

இதற்குக் காரணம், சென்னை கந்தப்ப செட்டி தெருவில் இருந்து, திருப்பதி ஏழுமலையானுக்குச் சமர்ப்பிப்பதற்காக உருவாக்கப்படும் ‘திருப்பதி குடை’கள்தான்! ‘திருப்பதி குடைகள், கவுனி (சென்னையில் உள்ள ஒரு பகுதியான யானைகவுனி!) தாண்டுகிறது’ என்கிற வண்ணமயமான போஸ்டர்கள் சென்னை நகரெங்கும் திமிலோகப்படும். அது, வேங்கடவன் பக்தர்களைப் பரவசப்படுத்தும். சென்னை மற்றும் அதைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் உள்ள பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா’ என்கிற கோஷத்துடன் இந்தத் திருக்குடை வைபவத்தில் உளப்பூர்வமாகக் கலந்து கொள்வார்கள்.

தனது அருள் குடையின் கீழ் வைத்து நம்மையெல்லாம் கட்டிக் காக்கும் அந்த ஏழுமலைவாசனுக்குச் சமர்ப்பிக்கப்படும் திருக்குடைகள் பற்றிப் பார்க்கலாம்.

திருமலை- திருப்பதியில் வருடந்தோறும் நிகழும் பிரம்மோற்சவ கருட சேவைக்குப் பட்டுக் குடைகள் சமர்ப்பிப்பது என்பது கோலாகலமான ஒரு திருவிழாவாகவே நடைபெறும். பிரம்மோற்சவத்துக்கு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பாகச் சுபதினம் ஒன்றில், நல்ல நேரத்தில் பூஜைகள் செய்து... திருக்குடைகள் செய்யும் பணியைத் தொடங்குவர். முழுக்கப் புதிய பொருட்களைக் கொண்டே இந்தத் திருக்குடைகள் செய்யப்படும்.

பட்டுத் துணி, மூங்கில், ஜரிகை, மின்னும் பொருட்கள் போன்றவற்றால், நகாசு வேலைப்பாடுகளுடன் சுமார் ஏழடி விட்டமும், அதே உயரத்துடனும் ஐந்து அல்லது ஆறு குடைகள் தயாரிப்பார்கள். இதைத் தயாரிக்கும் பேறு பெற்ற அன்பர்கள், விரதம் அனுஷ்டிப்பார்கள்.

இந்தக் குடைகள் பக்தி சிரத்தையுடன் தயாரானதும் இவற்றுக்கு பூஜை, ஆராதனை உட்படச் சகல மரியாதைகளும் நடக்கும். அதன் பிறகு மேள தாளம், வேதப் பிரபந்த கோஷங்களும் ‘கோவிந்த’ நாமமும் முழங்க திருக்குடைகள் திருப்பதியை நோக்கிக் கிளம்பும். சுமார் 150 வருடங்களாக திருக்குடை வைபவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாத ஆரம்பத்தில் துவங்கும் திருக்குடை யாத்திரை, அதே மாத இறுதியில் நிறைவடையும்.


குடைகள் தயாரான இடத்தில் இருந்து கிளம்பி, அருகில் உள்ள யானைகவுனி பகுதியைத் தாண்டும்போது பக்தர்கள் கூட்டம் கூடி, ‘கோவிந்த நாமம்’ முழங்கி, வழியனுப்பி வைப்பார்கள். இந்த நிகழ்ச்சி, காண்போரை எல்லாம் பரவசத்தில் ஆழ்த்தும்.

இந்தக் குடைகள் எந்தெந்த வீதிகளில் பவனி வருவது, எங்கெங்கே தங்குவது என்பதெல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருக்கும். அதன்படி, திருக்குடைகள் கடக்கும் இடமெல்லாம் சிறப்பான வழிபாடு நடைபெறும். இந்தக் குடை பயணம் செய்யும் இடங்களில் எல்லாம் நைவேத்தியம், அன்னதானம், நீர் மோர், பானக விநியோகம் என அமர்க்களப்படும்.

யாத்திரை கொண்டு செல்லும் குடைகளில் இரண்டு மட்டுமே திருப்பதியில் சமர்ப்பிக்கப்படும் (மற்றவை செல்லும் வழியில் உள்ள பைராகி மடத்திலும், திருவள்ளூர் கோயிலுக்கும் அளிக்கப்படும்.).

கோவர்த்தன மலையையே குடையாகப் பிடித்து தன் பக்தர்களைக் காத்த அந்தப் பரந்தாமன், யாத்திரையாக வரும் இந்தத் திருக்குடைகளை ஏற்றுக் கொண்டு, அகிலத்தையே காத்து ரட்சிக்க அன்புடன் பிரார்த்திப்போம்!