Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குழந்தைகள் வழிபட்ட பாலாடை ஸ்ரீஅங்காள பரமேஸ்வரிக்கு கும்பாபிஷேகம்!

சென்னை திருவல்லிக்கேணியில், சுமார் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலயமாகத் திகழ்கிறது சின்னமலையனூர் அருள்மிகு பாலாடை  அங்காள பரமேஸ்வரி ஆலயம்.

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் பக்தரான கிருஷ்ணப்பர் என்பவரின் கனவில் அம்மனின் உத்தரவுக்கு ஏற்ப அங்காள பரமேஸ்வரி கோயிலில் உள்ள புற்றிலிருந்து மண் கொண்டு வரப்பட்டு, தன் இடத்தில் ஓலை குடிசை அமைத்து மணலால் அம்மனின் உருவத்தை அமைத்து அபிஷேகம் இல்லாமல் பூஜைகள் மட்டும் செய்து வழிபட்டு வந்தார்.

காலப்போக்கில் பல குழந்தைகளே பூஜைகள் செய்யத் தொடங்கினர். குழந்தைகளே பூஜித்ததால் உள்ளம் குளிர்ந்த அம்மன் குழந்தை இல்லாத பெண்கள் தன்னை வழிபட்டாள் அவர்களுக்குக் குழந்தை வரம் அருளினாள்.

குழந்தை வரம் தருவதால் இந்த அம்மனுக்கு 'பாலாடை அம்மன்' என்ற பெயரும், மேல்மலையனூரில் இருந்து உருப் பெற்றமையால் 'சின்ன மலையனூர்' என்ற சிறப்புப் பெயரைக் கொண்டும் பக்தர்கள் அழைக்க தொடங்கினர்.

இதனிடையே, இத்திருக்கோயிலின் கும்பாபிஷேகம் சுமார் 75 வருடங்களுக்கு முன்பு நடைபெற்றபோது, காஞ்சி மகாஸ்வாமிகளால் ஸ்ரீசக்கரம் ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பிறகு, அம்பாளின் அனுக்கிரஹத்துடன் தேவப் பிரசன்னம் பார்த்து அம்பாள் உத்தரவுபடி திருப்பணிகள் செய்யப் பெற்று வரும் கார்த்திகை 6-ம் நாள் (22.11.2015) அன்று ஞாயிற்றுக்கிழமை 10.30 முதல் 11.30 மணிக்குள்ளாக இந்திய தேசத்தில் உள்ள சக்தி தலங்கள், பிரசித்தி பெற்ற  புராதன கோயில்கள், பஞ்ச பூத ஸ்தலங்கள், அம்பாளின் 51 சக்தி பீடங்கள் மற்றும் நேபாள், வங்கதேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ஸ்தல ம்ருத்யு, தீர்த்தங்கள் மற்றும் புனித நதிகளின் தீர்த்தங்களை கொண்டு அம்பாளை பிரதிஷ்டை செய்து மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முன்னதாக 18.11.2015 முதல் 21.11.2015 வரை 4 நாட்களும் நான்கு கால யாக சாலை பூஜைகள் நடைபெற உள்ளன. 

மேலும் மிக பழைமையான, தொன்மையான கோயில்களில் மட்டும் நடைமுறையிலுள்ள விசேஷமான பூஜைகளான கஜ பூஜை, அஸ்வ பூஜை, கோ பூஜை, சர்ப்ப பூஜை, வடுக பூஜை போன்ற பூஜைகளும் இத்திருத்தலத்தில் நடைபெற உள்ளது.

இத்திருக்கோயிலில் வழிபடும் பக்தர்களுக்கு திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் குழந்தை பாக்கியம் பெறவும், தம்பதியர் ஒற்றுமை சிறக்கவும், உத்தியோகம் அமையவும், தீராத நோய் தீரவும், கல்வியில் சிறக்கவும் இங்கு பிரார்த்தித்துக் கொண்டால் நிறைவேறுவதாகவும் பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.  

இந்த கும்பாபிஷேக விழாவில், நீங்களும் கலந்துகொண்டு அம்பாளின் அருளை பெறலாமே!.

- ரா.வளன்