Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருக்குடந்தை திருவுலா! - தலங்கள்... தகவல்கள்!

திருக்குடந்தை, குடமூக்கு என்றெல்லாம் புராணங்கள் சிறப்பிக்கும் மகாமக நகரமாம் கும்பகோணத்துக்கு ‘கோயில்களின் நகரம்’ என்றொரு சிறப்பும் உண்டு. இந்த ஊரில் மட்டுமல்ல, இந்த ஊரைச் சுற்றிலும் நாம் தரிசிக்க வேண்டிய புண்ணிய தலங்கள் ஏராளம் உண்டு. அவற்றில் சில இங்கே...

திருக்கருகாவூர்

கும்பகோணத்துக்குத் தென்மேற்கில் சுமார் 20 கி.மீ தொலைவிலுள்ளது  திருக்கருகாவூர் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில். ‘கரு காத்த ஊர்’ என்பதே மருவி ‘கருகாவூர்’ என்றாகி, திருவுடன் சேர்த்து விளங்குகிறது.

குழந்தைப்பேறு இல்லாதவர்கள், இங்கு வந்து, அம்பாள்  சந்நிதியில் உள்ள படியை நெய்யால் மெழுகி, அரிசிமாவால் கோலமிட்டு, அம்பாளிடம் மனம் உருக வேண்டிக்கொள்ள வேண்டும். அத்துடன், அம்பாள் பாதத்தில் வைத்து மந்திரித்து கொடுக்கப்படும் நெய்யை வாங்கிப்போய், அதனுடன் மேற்கொண்டு கொஞ்சம் நெய் சேர்த்து, இரவு படுக்கைக்குப் போகும்போது தம்பதியர் இருவரும் கொஞ்சமாக எடுத்து, அம்பாளை நினைத்தபடி நாற்பத்து எட்டு நாட்களுக்கு சாப்பிட்டு வர வேண்டும். பெண்கள் மாதவிலக்கின் ஐந்து நாட்களுக்கு மட்டும் சாப்பிடக் கூடாது. இதையெல்லாம் கடைப்பிடித்து வந்தால், நெய் தீரும் காலத்துக்குள்ளாகவே மழலை வரம் கிடைத்து விடும். குழந்தை பிறந்த பிறகு, அம்பாளிடம் வந்து ஆசி பெற்றுக்கொள்ள வேண்டும்!

செயற்கை மலையில் முருகன்!

முருகப்பெருமான், குரு அம்சமாகத் திகழும் தலங்கள் இரண்டு. அதில் ஒன்று சுவாமி மலை; மற்றொன்று திருச்செந்தூர். மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டத்தில், சுவாமி மலையில் ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமி கட்டு மலை (செயற்கைக் குன்று) கோயிலைக் கொண் டிருப்பது, இந்தத் தலத்தின் தனிச் சிறப்பு! இந்தத் தலம், கும்பகோணம் - திருவையாறு சாலையில் கும்பகோணத்துக்கு மேற்கில் சுமார் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணம் - தஞ்சாவூர்  சாலையில் திருவலஞ்சுழியில் இறங்கி, வடக்கே சுமார் 1 கி.மீ. தொலைவு பயணித்தால், சுவாமி மலையை அடையலாம்.

பேச்சுத் திறன் வேண்டுமா?

இந்திரனின் யானையான ஐராவதம் பூசித்த தலம் இன்னம்பூர். பாவங்கள் மற்றும் சாபங்களைத் தீர்க்கும் தலமாகவும் இன்னம்பூர் புகழப்படுகிறது. ‘எழுத்தறிவித்தவன் இறைவன்’ என்பார்கள். இங்கேயோ, இறைவனுக்கே ‘எழுத்தறிநாதர்' என்று திருப்பெயர்.

மேற்படிப்பு வேண்டுபவர்கள், வெளிநாடு சென்று பயில விரும்புபவர்கள் என்று பல நிலைகளில் கல்வியை நாடுபவர்களும் இந்த எழுத்தறிநாதரை நாடிவந்து நலம் பெறுகிறார்கள். பேச்சுத் தடங்கல் உள்ளவர்களை இங்கு அழைத்து வந்து, அவர்களின் நாக்கில் மலரால் எழுதினால், அவர்கள் பேச்சுத்திறன் பெறுவது திண்ணம் என்கிறார்கள். கும்பகோணம் - திருவையாறு சாலையில் உள்ள மேலக்காவிரி- புளியஞ்சேரி எனும் ஊரிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் இருக்கிறது இன்னம்பூர்.

திருவலஞ்சுழி நுரைப் பிள்ளையார்!

தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்தபோது, பிள்ளையாரை வழிபடாமல் பணியை ஆரம்பித்ததால் காரியம் தடைப்பட்டது. ஆகவே, கடலின் நுரையையே பிள்ளையார் திருவுருவாகச் செய்து தேவேந்திரன் பூஜித்தான். பிறகு அவர்களுக்கு அமிர்தம் கிடைத்தது. பிறகு தனது இருப்பிடம் திரும்பும்போது, இந்தத் தலத்தில் நுரைப்பிள்ளையாரை வைத்துவிட்டு, சிவபூஜை செய்தான். பிறகு, அவன் மீண்டும் விநாயகரை எடுக்க முயன்றபோது, அவரை அசைக்கக்கூட முடியவில்லை. ஆகவே, இந்தப் பிள்ளையாரை இங்கேயே பிரதிஷ்டை செய்து, பிள்ளையாருக்கு நிறைமணித் திருவிழா முதலான வைபவங் களை நிகழ்த்தி வழிபட்டு, தேவலோகம் திரும்பினானாம். இன்றும் இங்கு, ஆவணி 9-ஆம் நாளன்று இந்திர பூஜை வெகு விசேஷமாக நடைபெறுகிறது.

சுவாமிமலையில் இருந்து தெற்கே 1 கி.மீ. பயணித்தால்  இத்தலத்தை அடையலாம்.

தாராசுரம்

சோழப் பேரரசர்களின் கோநகரமான பழையாறை என்ற தலைநகரத்தின் ஒரு பகுதியாக ராசராசபுரம் விளங்கியது. இந்த ராசராசபுரம் நாளடைவில் ராராபுரமாக மருவி, பின்பு தாராசுரம் என அழைக்கப்படலாயிற்று.

இங்குள்ள ஐராவதீஸ்வரர் கோயிலின் முக மண்டபத்தை, தேர் வடிவில் ‘ராஜ கம்பீரன் திருமண்டபம்’ என்ற பெயரில் சிற்பக் களஞ்சியமாகப் படைத்திருக்கின்றனர் சோழர்கள். 
இந்த மண்டபத்தின் தென் பகுதியில் உள்ள நான்கு தூண்க ளிலும் 48 சிற்பக் காட்சிகள் உள்ளன. இந்தக் கோயிலின் கோஷ்ட உள்ள சிற்பங்கள், உலகின் கலை வல்லுநர்களால் இன்றைக்கும் பிரமிப்போடு போற்றப்படுகின்றன!

பகவத் விநாயகர்

கும்பகோணம் மடத்துத் தெருவில், கிழக்கு நோக்கி கோயில் கொண்டிருக்கிறார் இந்த விநாயகர். இவ்வூருக்கு வரும் போதெல்லாம் தவறாமல் வணங்கிச் செல்வாராம் காஞ்சி மகா பெரியவர்.
1952-ஆம் வருடம், காஞ்சி சங்கர மடத்துக்குச் சொந்தமான சந்திர மௌலீஸ்வரன் எனும் யானை திருவிச நல்லூரில் இறந்தது. அப்போது காஞ்சி மகா பெரியவா, யானையின் இரண்டு தந்தங்களையும் பகவத் விநாயகருக்கு அளித்து வழிபட்டார். சங்கடஹர சதுர்த்தி, விநாயக சதுர்த்தி முதலான வைபவங்களில் ஸ்ரீபகவத் விநாயகருக்கு, அந்த தந்தங்களைக் கொண்டு அலங்கரித்து வழிபடுவது வழக்கமாம்!

உப்பிலியப்பன்

விண்ணகரங்கள் எனும் சிறப்புக்கு உரிய வைணவத் தலங்களில் ஒன்று உப்பிலியப்பன் திருக்கோயில். இங்கு அருளும் எம்பெருமானை துளசியால் பூஜிப்பவருக்கு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். நடைப்பயணமாக இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு  அடிக்கும் புண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம். இந்தத் தலம், கும்பகோணத்திலிருந்து தெற்கே 7 கி.மீ தொலைவில் உள்ளது.

பட்டீஸ்வரம் துர்கை

இந்த அம்பிகை வரப்பிரசாதியானவள். மகிஷனின் தலைமீது நின்ற கோலத்தில், சாந்த சொரூபினியாகக் காட்சி தருகிறாள். இக்கோயிலின் அர்த்த மண்டபத்தில் வடபுற கோஷ்டத்திலே ஆறு கரங்களை உடைய துர்கை காட்சி தருகிறாள். இது அபூர்வமான தரிசனமாகும். கும்பகோணத்துக்கு தென் மேற்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பட்டீஸ்வரம்.

108 சிவாலயம்!

கும்பகோணத்திலிருந்து தஞ்சை சாலையில் 14 கி.மீ தொலைவில் உள்ளது 108 சிவாலயம். ‘ராவணனுடன் போரிட்டதில் எத்தனையோ பேர் இறந்தனர். அவர்களைக் கொன்ற தோஷத்தை (ராமேஸ்வரத்தில்) நிவர்த்தி செய்தபோதும், கர - தூஷன் எனும் அரக்கர்களைக் கொன்ற பாவம் மட்டும் நம்மை விடாமல் துரத்தி வருகிறதே...’ என வருந்தினார் ராமன்.

மேலும், ‘காசியில் இருந்து சிவலிங்கம் எடுத்து வரும்படி அனுமனை அனுப்பினோம்; போனவனை இன்னும் காணோமே!’ என்ற கவலையும் அவருக்கு இருந்தது. இதையெல்லாம் அறிந்த ஸ்ரீசீதாதேவி, ஆற்று மணலை அள்ளி வரிசையாகக் குவித்து, விளையாடிக்கொண்டிருந்தாள். கிட்டத்தட்ட 107 மணல் குவியல்கள்; சீதைக்கு அருகில் வந்த ஸ்ரீராமர், அவற்றைப் பார்த்துவிட்டு வேடிக்கையாக, ‘இதென்ன சிவலிங்கம் செய்கிறாயா?’ என்று கேட்டதுதான் தாமதம், உடனே அந்த மணல் குவியல்கள் யாவும் சிவ லிங்கங்களாக உருவெடுத்தன.

அனுமன் கொண்டு வந்த லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்தார். 107-வது லிங்கம், ஸ்ரீராமலிங்க ஸ்வாமி என்றும், ஸ்ரீஅனுமன் கொண்டு வந்த லிங்கம் 108-வது மூர்த்தமாக, ஸ்ரீஅனுமந்த லிங்கம் என்றும் அழைக்கப்பட்டது. ஆக மொத்தம், 108 சிவலிங்கங்களும் அருள்பாலிக்கும் ஒப்பற்ற தலமாகத் திகழ்கிறது பாபநாசம் ஸ்ரீராமலிங்க ஸ்வாமி திருக்கோயில்.

இங்கே ஸ்ரீசூரியனார், ஸ்ரீசனீஸ்வரர் ஆகியோர் அருகருகே இருந்தபடி அருள்பாலிக்கின்றனர். அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி மற்றும் ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள், இங்கு வந்து பரிகாரங்கள் செய்தால், பலன்கள் நிச்சயம் என்பது ஐதீகம். காசி மற்றும் ராமேஸ்வரம் தலங்களுக்கு இணையான அற்புதத் தலம் இது.

தொகுப்பு, படங்கள்: இ.ராஜவிபீஷிகா