Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குடந்தையில் துறவியர் மாநாடு

கும்பகோணத்தில் மகாமகத் திருவிழாவின்போது அகில பாரத துறவியர் மாநாடு நடைபெற இருப்பதை அறிந்து, அந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கும் சுவாமி ராமானந்தரை சந்தித்தோம். 
ஸ்ரீராமகிருஷ்ண ஆஸ்ரமத்தில் சுவாமி ஆத்மானந்தரின் சீடராக துறவறம் மேற்கொண்டு துறவியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராக தொண்டாற்றுகிறார் இவர். துறவியர் இயக்கம் குறித்தும், அந்த மாநாடு குறித்தும் அவரிடம் பேசினோம்.

துறவியர் சங்கம் என்ற உங்கள் அமைப்பின் நோக்கம் என்ன? 

“துறவியர் சங்கம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சைவ மற்றும் வைஷ்ணவ மடங்கள், ஆதீனங்கள் ஆகியோரின் ஆதரவுடன் இயங்குகிறது. எங்களுடைய பிரதான நோக்கமே அகில இந்திய அளவில் துறவிகள் அனைவரையும் ஒன்றிணைப்பதுதான். இதன் சார்பில், தலைக்காவிரி முதல் பூம்புகார் வரை உள்ள முக்கிய நீராடல் கட்டங் களையும், புண்ணிய தலங்களையும் புனரமைத்துப் பாதுகாக்க காவிரி பாதுகாப்பு யாத்திரை ஒன்றையும் மேற்கொண்டோம்.

பாரதத்தில் உள்ள அனைத்து புண்ணிய நதிகள், தீர்த்தங்களின் பாதுகாப்பை முன்னிறுத்தியும், பல்வேறு மடங்கள், ஆதீனங்கள், துறவியர் அமைப்புகளை ஒன்றிணைக்கும் விதமாகவும் குமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொள்ள இருக்கிறோம்.”

இந்த அகில பாரத துறவியர் மாநாடு எதற்காக? மகாமகமத்தை தேசிய கும்பமேளா வாகக் கொண்டாட வேண்டும் என்பது ஏன்?

“துறவிகள் தங்கள் சுக துக்கங்களை விட்டு, சமய - சமுதாய மேம்பாட்டுக்காக தங்களை அர்ப்பணித்து பிறப்பற்ற நிலையை எட்ட பித்தராய் உலா வருபவர்கள் என்பதை  ‘துறவி நெஞ்சினர் ஆயின தொண்டர்காள்; பிறவி நீங்க பிதற்றுமின் பித்தராய் மறவனாய்ப் பார்த்தன்மேல் கணைதொட்ட எம் குறவனார் உறையும் குடமூக்கிலே’ என திருநாவுக்கரசரின் தேவாரம் துறவிகளின் நிலையைப் பற்றித் தெளிவாகக் கூறுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மேளா என்பது, வட தேசங்களில் நதியையோ அல்லது தொடர் நதிகளையோ சார்ந்திருக்கும் நீராடல் பெரு விழாவாகும். இங்கேயோ, சிவபெருமானால் உருவாக்கப்பட்டு அமிர்தம் தங்கிய இந்த மகாமகக் குளத்தில் மாசி மகத்தன்று நீராடி, ஜீவ நதிகள் தங்களிடம் இறக்கப்பட்ட பாவங்களைப் போக்குகின்றன என்கிறது பவிஷ்யோத்ர புராணம்.

இவ்வளவு சிறப்பு மிகுந்த திருக்குளத்தில் நடைபெறும் திருவிழாவை, தென்னிந்திய கும்பமேளாவாகக் கொண்டாடுவதில் என்ன தவறு உள்ளது? அதன் ஓர் அங்கமாகத்தான் இந்த அகில பாரத துறவியர் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். வட தேசங்களிலிருந்தும், தமிழ்நாட்டிலிருந்தும் முக்கியமான துறவியர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். ஆகவே, 18-2-16 அன்று மகாமகக் குளத்தைச் சுற்றி துறவியர்களின் அணிவகுப்பு நடைபெறும். எங்களுடைய அனைத்து முயற்சிகளிலும் தமிழர்கள் மட்டுமல்லாமல் இந்தியர்கள் அனைவருமே பங்கேற்று, ஒத்துழைப்பு தரவேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.”

படங்கள்: க.சதீஷ்குமார்