Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நதிகளுக்கும் புனிதம் தரும் புண்ணிய தீர்த்தம்!

பிரம்மன் பூஜித்து வந்த அமிர்தக் குடம் சிவனாரின் கணையால் உடைபட்டு அதிலிருந்த அமிர்தம் வழிந்தோடி தேங்கிய இடங்கள் இரண்டு. ஒன்று கும்பேஸ்வரர் கோயிலின் பொற்றாமரைக் குளம். மற்றொன்று மகாமக தீர்த்தக்குளம்.

‘மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது’ எனும் சொல்வழக்கு உண்டு. அதற்கேற்ப மகாமக திருக்குளம் அளவில் சிறியதுதான் என்றாலும் அதன் சாந்நித்தியம் அளவிலாதது. மகாமகக் குளத்தின் பரப்பளவு சுமார் 10 முதல் 15 ஏக்கர் இருக்கலாம். எனினும் தனது பெருமையால், தான் சார்ந்த தலத்துக்கும் பெருமை சேர்க்கும் இந்த திருக்குளத்தின் நான்கு புறங்களிலுமாக (16 கால் பெரிய மண்டபத்திலிருந்து வலமாக...) 16 சிவ மூர்த்திகள் சந்நிதி கொண்டிருக்கிறார்கள்.

பதினாறு பேறுகளும் அருளும் பதினாறு மூர்த்திகள்...

பிரம்மதீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தனேஸ்வரர்,  விருஷபேஸ்வரர், பரணேஸ்வரர், கோனேஸ்வரர், பக்திகேஸ்வரர்,  பைரவேஸ்வரர், அகஸ்தியேஸ்வரர்,  வ்யாஸேஸ்வரர்,  உமை பாகேஸ்வரர், நைருதீஸ்வரர், பிரம்மேஸ்வரர், கங்காதேஸ்வரர், முக்ததீர்த் தேஸ்வரர், க்ஷேத்ரபாலேஸ்வரர்.

இந்த சந்நிதிகளை அமைத்தது மகான் கோவிந்த தீட்சிதர். 1515-ஆம் ஆண்டு, மைசூரில் கன்னட ஸ்மார்த்த வகுப்பில், ஸ்ரீதசரதராம தீட்சிதர் எனும் நித்ய அக்னி ஹோத்ரிக்கு மகனாகப் பிறந்தவர், பலராம கோவிந்தர். இவரே பின்னாளில், ஸ்ரீகோவிந்த தீட்சிதராகப் புகழ் பெற்றார். மகாமக குளத்தின் படித்துறையை அமைத்துக் கொடுத் ததுடன், திருக்குளத்தைச் சுற்றிலும் 16 தானங்களை நினைவுபடுத்தும் வகையில் 16 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்தாராம் இவர்.

20 தீர்த்தங்களும் 9 கிணறுகளையும் கொண்ட இந்த தீர்த்தம், புண்ணிய நதிகளுக்கே புண்ணியம்தரும் மகிமை கொண்டது!

கங்கா, யமுனா, நர்மதா, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, துங்கபத்திரா, கிருஷ்ணா, சரயு ஆகிய நதிகளில், அனைவரும் நீராடி பாவங்களைத் தொலைத்ததால், அந்தப் பாவங்கள் அனைத்தும் நதிகளில் கலந்துவிட்டன. இதனால் கயிலை நாதனிடம் நதிகள் முறையிட, ‘கவலை வேண்டாம். மகாமகக் குளத்தில் நீராடி, புத்துணர்வு பெறுங்கள்’ என்று அருளினாராம் ஈசன். அதையடுத்து, நதிக்கன்னியருக்குத் தெற்கு நோக்கிய சந்நிதிகளும் அமைத்துக் கொடுத்தாராம். மகாமக தினத்தில், ஒன்பது நதிகளும் வந்து நீராடி மீண்டும் புண்ணிய நதிகளாகப் பொலிவு பெறுவதாகப் புராணம் கூறும்.

இவ்வாறு தீர்த்த வடிவில் புண்ணிய நதிகளும், தேவ வடிவில் தேவர்கள் யாவரும், திக்பாலகர்களும், நவ கன்னியரும் ஒருங்கே சங்கமிக்கும் மகிமை வாய்ந்தது இந்தத் தீர்த்தக்குளம். எனவேதான், நம் தேசத்தின் பிற தலங்களில் நடக்கும் மற்ற தீர்த்தத் திருவிழாக்கள் யாவற்றையும்விட சிறந்தது மகாமகம் என்பது பெரியோர் வாக்கு.