Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிறந்த நாளைக் கொண்டாடலாமா? இதில் ஏதும் ஐதீகம் உள்ளதா?

த. சத்தியநாராயணன், அயன்புரம்

பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும்! இந்தப் பிறப்புதான் இறப்பையும் சுட்டிக்காட்ட வல்லது. மேலும், மறுபிறவியை அறுத்தெறியும் வாய்ப்பைத் தருவதும் பிறந்த நாளே! ஆண்டு நிறைவு, அறுபதாம் கல்யாணம் முதலான கொண்டாட்டங்களை நடைமுறைப்படுத்த வலியுறுத்துகிறது தர்மசாஸ்திரம். ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியும் ஸ்ரீராம நவமியும் பகவான் அவதரித்த நாட்கள்தானே?

மகான்களது பிறந்த தினத்தை, ஜயந்தி தினமாகக் கொண்டாடும் அடியவர்களும் உண்டு. கிருஷ்ண ஜயந்தி நாளில் பிறந்தால் கிருஷ்ணன்; ராம நவமியில் பிறந்தால் ஸ்ரீராமச்சந்திரன் என்றெல்லாம் பெயர் வைத்து மகிழ்கிறோம். அப்படியிருக்க, பிறந்த நாள் கொண்டாடுவதில் தவறேதும் இல்லை!



 

பிறந்த தினத்தைக் கொண்டுதான் ஒருவரது வாழ்க்கையையே வரையறுத்து கணிக்கிறது ஜோதிடம். முற்பிறவியின் நன்மை- தீமைகளை அனுபவிக்கத் தோன்றும் பிறந்த நாளை கொண்டாடாமல் இருப்பதுதான் தவறு. மகன் அல்லது மகள் பிறந்ததும் பெற்றோரின் மதிப்பும் சந்தோஷமும் கூடுகிறது; கணவன் - மனைவியாக இருப்பவர்கள், தாய்-தந்தையாக அடுத்தக் கட்டத்துக்கு உயருகின்றனர். ஆக, தாராளமாகக் கொண்டாடுங்கள்... பிறந்த நாளை!