Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லக்கி லக்னம் மிதுனம்

எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் நீங்கள் பிறருக்கு உதவும் நற்குணம் பெற்றவர்கள். புதனின் ஆதிக்கத்தில் பிறந்த தர்மவான்களான நீங்கள் இனிமை யாகப் பேசி, அந்தப் பேச்சுத் திறமையால் எவரையும் வெல்லும் சூட்சுமம் தெரிந்தவர்களும்கூட! பக்தி மார்க்கத் திலும் சிறந்து நிற்பீர்கள்.

உங்களின் பிற இயல்புகள்:
 
* கலையார்வம் அதிகம் உண்டு. எல்லாத் துறைகளிலும் பரிச்சயம் இருக்கும். எதையும் தெரிந்துகொள்வதில் ஆர்வம் உடையவர். பல மொழிகளில் பேசும் திறமையும் கைவரப் பெற்றிருப்பீர்கள். எவரையும் பார்த்த மாத்திரத்தில் எடைபோடும் ஆற்றல் உண்டு. நடனம், கலை, எழுத்துத் துறையில் மேன்மை கிட்டும்.

* ஜோதிடம், மருத்துவம், கணினித் துறையில் வல்லுநர்களாகத் திகழ்வீர்கள். கல்வித் திறமை காரணமாக எங்கு சென்றாலும் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும். சபைகளில் சளைக்காமல் பேசுவீர்கள். நிறைய நண்பர்கள் அமைவர். நகைச்சுவை நாயகனாக இருப்பீர்கள். போஜனப் பிரியமற்ற நீங்கள், உணவில் கட்டுப்பாடுடன் வாழ்வீர்கள்.

* விருந்து, உபசாரம் செய்வது மிகவும் பிடிக்கும். வாசனைத் திரவியங்களில் அதிக மோகம் கொண்டிருப்பீர்கள். பெற்றோரை போஷிப்பீர்கள். தான, தருமம் செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே! பரந்த மனம் உடையவர் நீங்கள். வசீகரமும் அழகும் மிக்கவர்.

* இருப்பினும், சுயநலக்காரியவாதிகளான நீங்கள் சிரித்துப் பேசிக் காரியத்தை முடிப்பதில் வல்லவர்கள். தந்திரமும் சூட்சுமமும் அறிந்தவர்கள். சுய உழைப்பினால் உயர்ந்து நிற்பவர்கள். அழுத்தமான மனம் பெற்ற நீங்கள் பிறரிடம் ரகசியம் வெளியிட விரும்பமாட்டீர்கள். 30 வயதுக்குப் பிறகு ராஜயோகம் படிப்படியாய் மலரும்.

லக்னாதிபதி: புதன்
தெய்வம்: மகாவிஷ்ணு
தேவதை: பிரம்மா, துர்கை
வஸ்திரம்: பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23, 32

வழிபாடு: ஸ்ரீமகாவிஷ்ணுவின் பூரண அனுகிரகத்தைப் பெற, நீங்கள் தினமும் ஸ்ரீவிஷ்ணுவின் ஆலயம் சென்று வழிபடுங்கள்; அனைத்தும் நலமாகும்.
உங்கள் லக்னத்தை அறிவது எப்படி?

பொதுவாக, சூரியன் ஒருநாளில் காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை 12 லக்னங்களுக்கு மாறுவார். ஜாதகத்தின் ராசிக் கட்டத்தில் 'ல’ என்ற குறிப்பை வைத்து உங்கள் லக்னத்தை நீங்களே அறியலாம்.