Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜோதிட புராணம் - 6

ஆரூடம் அறிவோம்- 6

சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி
 

உலகில் தோன்றிய நூல்களில் மிகவும் தொன்மையானது இந்து தர்மத்தின் ஆதார நூல்களான வேதங்களும் வேத ஆகமங்களுமாகும். இந்த சாஸ்திரங்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி ஜோதிட சாஸ்திரம். குருமுகமாக தலைமுறை தலைமுறையாகக் கற்பிக்கப்பட்டு வளர்ந்தது இந்த சாஸ்திரம்.

ஜீவராசிகள் தோன்றிய விதத்தையும், அவற்றில் சிரேஷ்டமான மனித இனம் குறித்த பிறப்பு, கால நேரம் சார்ந்து அவர்களுக்கு அமையும் லட்சணங்கள், வாழ்க்கைச் சம்பவங்கள் ஆகியவை பற்றி பார்வதிதேவிக்கு சிவனார் விளக்கியதாக சிவபுராணம் சொல்கிறது. அவர்களை பூஜித்து பெருமை பெற்ற ரிஷி பரம்பரை மூலம் இந்த விவரங்கள் உலகுக்குத் தெரிவிக்கப்பட்டன. இதுவே ஜோதிட சாஸ்திரத்தின் வரலாறு. நாரதர், ஸென்னகர், வசிஷ்டர், அத்ரி, பிருகு, மனு, புலஸ்தியர், ஆங்கீரஸர், வியாசர், வாமதேவர், ரோமர், மரிசி, ஸ்யவனர், யவனர், கஸ்யபர், பராசரர் ஆகிய மகரிஷிகள் மூலம் இந்த ஞானம் உலகுக்குத் தரப்பட்டது.

இவர்களைத் தொடர்ந்து, தற்போது நாம் அறிந்துகொண்டுள்ள ஜோதிட சாஸ்திரம், வராஹமிஹிரர் மூலம் அனுபவபூர்வமான சாஸ்திரமாகி, நமக்குப் பயன்பட்டு வருகிறது. வராஹமிஹிரர் பிருஹத் ஸம்ஹிதை, யாத்ரா, ஹோரா ரத்னம் போன்ற ஜோதிட சாஸ்திர நூல்களை எழுதி உலகுக்கு அளித்தவர்.

இவர்களுக்குப் பின்னால் வந்த ஜோதிட நிபுணர்கள் பலர், உலகுக்குத் தந்துள்ள ஆதார நூல்கள் எண்ணற்றவை. அவற்றுள் முக்கியமானவை:

ஜாதக பாரிஜாதம் - வைத்யநாத தீக்ஷிதர் பலதீபிகா - மந்திரேஸ்வரர்

ஸாராவளி - கல்யாணவர்மன்

ஸர்வார்த்த சிந்தாமணி - வெங்கடேச தெய்வக்ஞர் ஜாதக தத்துவம் - மகாதேவன்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றிய காளிதாஸர் எழுதிய சாகுந்தலத்தில் ஜோதிட சாஸ்திரத்தின் பெருமையும் பயனும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆண்டாள் சரித்திரம், போஜராஜன் சரித்திரம், விக்ரமாதித்தன் கதை போன்ற நூல்களிலும் ஜோதிடம் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சூரிய- சந்திரர்களை ஆதாரமாகக் கொண்டு கணிக்கப்படும் இந்த சாஸ்திரம், சூர்ய சந்திரர்கள் தோன்றிய காலத்திலிருந்தே இருந்து வருகிறது என்று நம்பப்படுகிறது. சூர்ய சித்தாந்தம், ஸ்ரீபதிபத்ததி போன்ற ஜோதிட நூல்களில் ஜோதிடத்துக்கும், வானசாஸ்திரத்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு விளக்கப்படுகிறது.

நம் முன்னோர் ஜோதிடம் கற்கவும், கற்பிக்கவும், அந்த சாஸ்திர பலன்களைச் சொல்லவும் சில நியமங்களை வைத்திருந்தார்கள். ஜோதிடத்தை குருமுகமாகவே கற்பது நல்லது; அல்லது ஒரு குருவின் ஆசியுடன் சுயமாகக் கற்கலாம். ஆதார நூல்களில் சொல்லப்பட்ட விதிமுறைகள்படியே ஜாதக பலன், நட்சத்திர பலன், லக்ன பலன், தசா புக்தி பலன் போன்றவற்றைச் சொல்ல வேண்டும். சுயமாக சிந்தித்து, கற்பனை செய்து சாஸ்திர விரோதமாகச் சொல்லக் கூடாது. ஜோதிடம் சொல்பவர் நியம நிஷ்டையாக இருந்து, ஒழுக்கத்துடன் சத்தியத்தைக் கடைப்பிடித்து வாழ்வது அவசியம். நல்லொழுக்கமும் உண்மை நெறியும் இல்லாத ஜோதிடர் சொல்லும் வாசகங்களால் அவருக்கே மன அமைதி இல்லாமல் போகும்.

நல்ல பலன்களை விஸ்தாரமாக விளக்கமாகச் சொல்லலாம். கெடுதலான பலன்களை கேட்பவர் பயப்படாத வண்ணம் சுருக்கமாகச் சொல்ல வேண்டும். 'அப்படியும் நிகழலாம், இப்படியும் நிகழலாம். நிகழாமலே போகலாம்’ என்பது போல் சொல்வது, அந்த ஜோதிடருக்கே அவர் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்பதையே குறிக்கும். சாஸ்திர விதிகளை சரியாகப் பயன்படுத்தினால் தெளிவாக பலன் சொல்லமுடியும். ஜாதகப்படி ஒருவருக்கு கஷ்டமான காலம் நடப்பது அவரது கர்ம பலனாக இருக்கலாம். அதனை எடுத்துக் கூறி, மன வலிமையுடன் கஷ்டங்களை சமாளிக்கும் மார்க்கங்களையும் எடுத்துக் கூற வேண்டும்.

ஜோதிடத்தில் பரிகாரம் என்று சொல்லப்படுவது கடவுளிடம் பிரார்த்தனை செய்வதையே குறிப்பிடுகிறது. ஜாதகத்தில் கிரகங்களின் வலிமை, அல்லது பலவீனத்தைக் கண்டறிந்து, அந்தந்த கிரகங்களின் அதிதேவதை அல்லது பிரத்யதி தேவதையை வீட்டிலோ, ஆலயத்துக்குச் சென்றோ ஆராதிப்பது பரிகாரமாகும். இதைத்தான் ஜோதிடர் ஜாதகனிடம் சொல்ல வேண்டும்.
பூர்வ ஜென்ம பாவ புண்ணியப்படி அமையும் நிகழ்வுகள் எல்லாம் விதிப்படிதான் நடக்குமென்றால் அதை முன்கூட்டியே தெரிந்துகொள்வதால் என்ன லாபம் என்று சிலர் கேட்கலாம்.
உலகில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் இறைவனின் சங்கல்பப்படியே நிகழ்கின்றன. அவன் நினைத்தால் எதையும் எப்போது வேண்டுமானாலும் சாதகமாகவோ, பாதகமாகவோ மாற்றலாம். அதனால் ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் மாறலாம். 16 வயதுதான் என நிர்ணயிக்கப்பட்ட மார்க்கண்டேயனை எமனிடமிருந்து காப்பாற்றி, அவனுக்கு 'என்றும் பதினாறு வயது’ என்று சிவபெருமான் வரமளித்துக் காத்த சம்பவமே இதற்கு எடுத்துக்காட்டு.

‘If your future is known to you, It becomes your past’ என்று ஒரு ஆங்கிலப் பேரறிஞன் கூறினான். உன் எதிர்காலம் உனக்குத் தெரிந்துவிட்டால், அது உனது கடந்த காலமாகிவிடும். அதனால்தான் இறைவன் பூர்வஜென்ம பற்றிய விபரங்களையும், எதிர்கால நிகழ்வுகளையும் நம்மிடமிருந்து மறைத்து வைத்திருக்கிறான். ஏற்கெனவே தெரிந்தது இறந்த காலம்; தெரிந்து கொண்டிருப்பது நிகழ்காலம்; நமக்குத் தெரியாமல் இருப்பது எதிர்காலம் என்பது இறைவன் வகுத்த நியதி.

மற்றொரு பரிமாணத்தில் ஆராய்ந்தால், இறைவன் மனிதனிட மிருந்து எதையும் மறைக்கவில்லை. கடந்த காலமும், நிகழ்காலமுமே நமது எதிர்காலத்துக்கு அஸ்திவாரமாக அமைகிறது. நமது முந்தைய ஜென்மம் அல்லது பிறப்பும், அப்போது நாம் செய்த நன்மை, தீமைகளும், அதனால் நாம் பெற்ற புண்ணிய பாவங்களும் கடந்த காலத்தின் முந்தைய பகுதிதான். அதன் விளைவுகளே நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் பிரதிபலிக்கின்றன.

இந்தக் கடந்த காலத்தைப் பற்றி நமக்கு நினைவில்லை. தெளிவும் இல்லை. ஆனால், இதனை ஆதாரமாகக் கொண்டு, நாம் இப்பிறப்பில் பெற்று வரும் நன்மை- தீமைகளைப் பற்றிய விவரங்களை விளைக்குவதே ஜோதிட சாஸ்திரம், கைரேகை சாஸ்திரம், ஆருடம் போன்றவை.

ஒவ்வொரு மனிதன் வாழ்விலும் எதிர்பாராமல் நடக்கும் விபத்துகள், இறைவனின் ஏட்டில் குறிக்கப்பட்டதுதான். இவ்வாறு நிகழும் எதிர்பாராத தோல்விகள், ஏமாற்றங்கள், விபத்துகள் பற்றிய விபரங்களையும் முன்கூட்டியே சூசகமாக அறிந்து அதனைத் தவிர்க்க உதவும் சாஸ்திரம்தான் ஜோதிடம். இரவில் ஒரு காரில் செல்லும்போது ஹெட்லைட் வெளிச்சம் ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு விழுகிறது. அதனால் பாதை தெளிவாகத் தெரிகிறது. பாதையிலுள்ள மேடு பள்ளங்களைப் பார்த்து கவனமாக காரை ஓட்ட ஹெட்லைட் உதவுகிறது. ஆனால் பிரயாணம் செய்யும் பாதை முழுவதுமோ, அல்லது போய்ச் சேரும் இடமோ ஹெட்லைட் வெளிச்சத்தால் தெரியாது.

கார் முன்னேறிச் செல்லச் செல்ல ஹெட்லைட்டின் ஒளியும் தொடர்ந்து செல்ல வேண்டிய பாதையைக் காட்டிக் கொண்டே போகும். ஓடிக்கொண்டிருக்கும் கார் நின்றுவிட்டால் இந்த ஹெட்லைட் வெறும் ஸ்பாட்லைட்தான். ஜோதிட சாஸ்திரமும், காரின் ஹெட்லைட் போல முதலில் சிறிது தூரத்தை தெளிவாகக் காட்டுகிறது. வாழ்க்கை நகர நகர இந்த சாஸ்திரம் தொடர்ந்து நமது வாழ்க்கைச் சம்பவங்கள் பற்றிய விபரங்களைக் காட்டுகிறது.

ஒருவர் பிறக்கும்போது வானில் இந்த கிரகங்கள் எந்தெந்த ராசியில் சஞ்சரிக்கிறது என்பதை ஒரு கட்டத்தில் குறிப்பிட்டு அவன் ஜாதகம் கணிக்கப் படுகிறது. அதன் பின்பு விண்வெளியில் சஞ்சரிக்கும் கிரகங்களின் நிலையையும் ஜாதகனின் ஜாதகக் கட்டத்தில் உள்ள கிரகங்களின் நிலையையும் குறிப்பிட்டுத்தான் ஜாதகப் பலன் சொல்லப்படுகிறது. இதை கோசாரப்பலன் என்று சொல்வார்கள். அதனால் ஜோதிடர்களுக்கு வான சாஸ்திரம் பற்றிய அறிவும், ஜோதிடம் பற்றிய அறிவும் அவசியமாகிறது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஜோதிட சாஸ்திர அறிவைப் பெற முதலில் வருடங்கள், மாதங்கள், நாள், நட்சத்திரம், திதி, ராசி, ராசியில் நவக்கிரகங்களின் நிலைகள் ஆகியவை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இவற்றை அடுத்த அத்தியாயம் முதல் பார்ப்போம்.

- தொடரும்.

(நன்றி :  சக்தி விகடனில் இருந்து...)