Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜோதிட புராணம் - 8

ஆரூடம் அறிவோம் - 8
'சேவாரத்னா’ டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பான வாரம் அல்லது கிழமை பற்றிச் சென்ற இதழில் பார்த்தோம். அதன் இரண்டாவது உறுப்பான திதிகள் பற்றி இந்த இதழில் தெரிந்து கொள்வோம்.

திதி என்பது பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையின் 30 சம கோணப் பிரிவுகள் ஒவ்வொன்றையும் சந்திரன் கடக்க எடுக்கும் காலத்தைக் குறிக்கும். அமாவாசையில் இருந்து பௌர்ணமி வரையிலான வளர்பிறைக் காலத்தில் 14 திதிகளும், பௌர்ணமியில் இருந்து அமாவாசை வரையிலான தேய்பிறைக் காலத்தில் 14 திதிகளும் வருகின்றன. வளர்பிறையில் வரும் திதிகள் சுக்லபக்ஷ திதிகள் எனவும், தேய்பிறையில் வரும் திதிகள் கிருஷ்ணபக்ஷ திதிகள் எனவும் குறிப்பிடப்படுகின்றன.

இந்த இரு தொகுதிகளில் வரும் திதிகளும் ஒரே பெயர்களையே கொண்டிருக்கின்றன. அந்தத் திதிகள்: 1. அமாவாசை 2. பிரதமை 3. துவிதியை 4. திருதியை 5. சதுர்த்தி 6. பஞ்சமி 7. சஷ்டி 8. சப்தமி 9. அஷ்டமி 10. நவமி 11. தசமி 12. ஏகாதசி 13. துவாதசி 14. திரயோதசி 15. சதுர்த்தசி 16. பௌர்ணமி 17. பிரதமை 18. துவிதியை 19. திருதியை 20. சதுர்த்தி 21. பஞ்சமி 22. சஷ்டி 23. சப்தமி 24. அஷ்டமி 25. நவமி 26. தசமி 27. ஏகாதசி 28. துவாதசி 29. திரயோதசி 30. சதுர்த்தசி.

இந்தத் திதிகளின் பெயர்கள் சம்ஸ்கிருதத்தில் ஒன்று, இரண்டு என எண்களுக்குரிய பெயர்களை ஒட்டியே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சாஸ்திர சம்பிரதாயங்களின்படி இந்தத் திதிகளுக்குச் சிறப்பு அல்லது குறைபாடுகள் உண்டு. பொதுவாக, அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை திதிகளில் சில திருமணம், கிரஹப்பிரவேசம், சீமந்தம், புதுத்தொழில் ஆரம்பம் ஆகியவற்றுக்கு மிகவும் உகந்தது என்பது சாஸ்திரக் கோட்பாடு. ஆனால், அமாவாசைக்குப் பிறகு வரும் திதிகளில் பஞ்சமி அல்லது சஷ்டிக்கு பிறகே வளர்பிறையின் பலன் வரும் என்பது ஜோதிட சாஸ்திர நடைமுறை விதி. அதாவது, அமாவாசை கழித்து வானில் சந்திரன் நன்றாகத் தெரியும் நாளான பஞ்சமி முதலே வளர்பிறையின் அனுகூலங்கள் உண்டாகும் என்பது தத்துவம்.

அதுபோலவே, தேய்பிறையில் பௌர்ணமியில் இருந்து பஞ்சமி வரை வளர்பிறையாகவே எடுத்துக்கொள்வது ஜோதிட விதி. வானில் சந்திரனின் பிம்பம் நன்கு தெரிவதால் இந்தப் பலன் சொல்லப்படுகிறது. பஞ்சாங்கங்களில் முகூர்த்த நாட்கள் என்று குறிப்பிடப்படும் அட்டவணைகளில் இதனை ஒரு குறியீட்டில் விளக்கியிருப்பார்கள்.

'அமாவாசை என்பது நிறைந்த நாள்; எல்லா புதுக் காரியங்களையும் தொடங்க அது நல்ல நாள்தான்’ என்ற நம்பிக்கை ஒன்று உண்டு. இது சாஸ்திரப்படி சரியாகாது. அமாவாசையில் வானில் சந்திரன் முற்றிலும் தென்படாது. அது இருண்ட நாள். அதை வளர்பிறையிலோ, தேய்பிறையிலோ கணக்கிட முடியாது. அது, மூதாதையர்களை நினைவுகூர்ந்து தர்ப்பணம் முதலிய பித்ரு காரியங்கள் செய்யத்தான் உகந்தது.

அமாவாசைக்கு மறு நாளான பிரதமையை 'பாட்டிமை’ என்று குறிப்பிடுவார்கள். அன்று புதிய காரியங்கள், சுபகாரியங்கள் செய்தால் தடைகளும் தாமதமும், எதிர்ப்பும் ஏமாற்றமும் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, அந்த நாளைத் தவிர்க்கலாம். அதுவே பௌர்ணமிக்கு மறு நாளான பிரதமைக்கு இந்தத் தோஷம் கிடையாது.

திதிகளில் ஒவ்வொரு திதிக்கும் ஒரு சிறப்பு அம்சம் உண்டு. அமாவாசை அல்லது பௌர்ணமிக்கு நான்காவது நாளன்று வரும் சதுர்த்தி ஸ்ரீமஹா கணபதி அவதரித்த திதியானபடியால் சிறப்பு மிக்கது. அதனால்தான் சதுர்த்தியன்று விநாயகர் ஆலயங்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அதுபோலவே முருகனுக்கு உகந்த திதி சஷ்டி.

அஷ்டமி, நவமி திதிகள் தோஷமுள்ள திதிகளாகக் கருதப்படுகின்றன. 'அஷ்டமி நவமி தொட்டது நாசம்’ என்னும் பழமொழி உலக வழக்கில் பேசப்படுகிறது. இதன் அடிப்படையில் சுபகாரியங்கள் செய்யவும், புதிய காரியங்கள் தொடங்கவும் அஷ்டமி, நவமி திதிகள் தவிர்க்கப்படுகின்றன. இந்த இரண்டில்கூட நவமி திதிக்கு ஒரு சலுகை வழங்கப்பட்டுள்ளது. நவமி, நவ நாழிகை மட்டும் தவிர்த்தால் போதும் என்ற விதிவிலக்குத் தரப்படுகிறது. ஆனால், அஷ்டமி என்றாலே பலருக்கு புதுக்காரியங்கள் செய்ய பயம் ஏற்பட்டுவிடுகிறது.

இந்த சாஸ்திரக் கோட்பாட்டால் பாதிக்கப்பட்ட அஷ்டமி, நவமி தேவதைகள் பற்றிய ஒரு புராணக் கதை உண்டு.

ராகு, கேதுக்கள் தவம் செய்து ஒவ்வொரு நாளிலும் ஒன்றரை மணி நேரத்தை ராகு காலம், எமகண்டம் என்று பிடித்துக்கொண்டதை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். அவர்களைப் போலவே அஷ்டமி, நவமி தேவதைகளும் ஒருமுறை மகாவிஷ்ணுவை நோக்கிக் கடும் தவம் செய்தனர். மகாவிஷ்ணு பிரத்யக்ஷமானார். அப்போது அஷ்டமி, நவமி தேவதைகள் அவரிடம் முறையிட்டன. ''திதிகளில் எங்களை மட்டும் நல்ல காரியங்களில் ஏன் ஒதுக்கி வைக்கிறார்கள்? நாங்கள் என்ன பாவம் செய்தோம்? இதற்கு விமோசனமே இல்லையா?' என்று கேட்டனர்.

அதற்கு மகாவிஷ்ணு, ''கவலைப்படாதீர்கள்! உங்களைப் பெருமைப்படுத்தி அனைவரும் கொண்டாட, நான் வழிசெய்கிறேன். தீமைகளை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நான் எடுக்கப்போகும் இரண்டு சிறப்பான அவதாரங்களை உங்கள் திதிகளில் எடுக்கிறேன். என் அவதாரம் நிகழ்ந்த திதிகளை உலகோர் மிகச் சிறப்பாக கொண்டாடுவார்கள்!'' என்று வரம் அருளினார்.

அதன்படி, ஸ்ரீராமனாக நவமி திதியிலும், ஸ்ரீகிருஷ்ணனாக அஷ்டமி திதியிலும் பகவான் விஷ்ணு அவதரித்தார். அவற்றை முறையே ராமநவமி என்றும், கோகுலாஷ்டமி (கிருஷ்ண ஜென்மாஷ்டமி) என்றும் காலம் காலமாகக் கொண்டாடுகிறோம். இந்த அஷ்டமி, நவமிகளுக்கு எந்தத் தோஷமும் கிடையாது. பொதுவாக, பிறந்த நாளை நக்ஷத்திரத்தில்தான் கொண்டாடுவோம். ராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் மட்டும் பிறந்த நாள் திதிகளில் கொண்டாடப்படுகிறது.

அமாவாசை, பௌர்ணமி கழிந்து வரும் 11-ஆம் நாள் ஏகாதசி என்கிறோம். வைஷ்ணவ சம்பிரதாயப்படி இது உபவாஸத்துக்கு உரிய நாள். ஏகாதசி உபவாசம் இருப்பதற்கும், துவாதசி அதிதிகளை உபசரித்து உணவளிப்பதற்கும் உகந்த திதிகள். வாழ்நாள் முழுவதும் ஏகாதசி விரதமிருப்போர் மோக்ஷ பதவியை அடைவர் என்பது வைஷ்ணவ தர்மத்தின் கோட்பாடு. ஏகாதசியும் துவாதசியும் விஷ்ணுவுக்கு உகந்த திதிகள் என்றால்... அமாவாசை, பௌர்ணமிக்கு 13-ஆம் நாளான திரயோதசி சிவனுக்கு உகந்த பிரதோஷ நாளாகும். பிரதோஷ காலத்தில் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் புரிகிறார் என்பது ஐதீகம். பிரதோஷ காலத்தில் சிவபெருமானைத் தொடர்ந்து தரிசித்தால், பாவங்கள் நீங்கி கயிலாய பதவியை அடையலாம் என்பது சைவர்கள் நம்பிக்கை. திதிகளில் மிகவும் சிரேஷ்டமானது பௌர்ணமி. சத்யநாராயண பூஜை செய்வதற்கும், தேவியின் நவாவர்ண பூஜை செய்வதற்கும் மிகவும் உகந்த நாள் இது. 

''நாளும் கிழமையும் நன்றாக அமைந்தால் நல்லதெல்லாம் தானே நடக்கும்'' என்பது சான்றோர்கள் கூற்று. ''திதிப்படியே விதி அமையும்'' என்பார்கள். அதனால்தான் ஒருவரின் மரணத்தை திதியை வைத்தே நினைவுகூர்கிறோம். மறைந்த முன்னோர்களை வழிபடுவதை 'திதி கொடுப்பது’ என்று சொல்கிறோம். ஒருவர் பிறந்தவுடன் எழுதப்படும் ஜாதகக் குறிப்பில் வருடம், மாதம், நாள், நக்ஷத்திரம், பிறந்த லக்னம் ஆகியவை முக்கியமாகக் குறிப்பிடப்படுகின்றன. அதுபோல, குடும்பத்தில் மறைந்த பெரியவர்களின் நினைவைக் கொண்டாட அவர்கள் இறந்த வருடம், மாதம், வளர்பிறை அல்லது தேய்பிறைத் திதிகள் குறித்து வைக்கப்படுகின்றன.

ஒரு திதியின் முற்காலம், பிற்காலம் ஆகியவை கரணம் எனப்படும். பஞ்சாங்கத்தின் மூன்றாவது அம்சமான கரணம் பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் அடுத்த இதழில் பார்ப்போம்.

- தொடரும்..