Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆரூடம் அறிவோம்:9

ஜோதிட புராணம்
சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

ஞ்சாங்கத்தின் ஐந்து உறுப்புகளில் முதல் இரண்டு: நாளும், திதியும். அடுத்ததாக வருவது கரணம். ஒரு திதியை இரண்டாகப் பிரித்து வரும் நாழிகைகளை, அந்தத் திதிக்கு உரிய இரண்டு கரணங்களாகக் குறிப்பிடுவர். மொத்தமுள்ள 30 திதிகளும் 60 கரணங்களாகப் பிரிக்கப்படுகின்றன.

இந்த 60 கரணங்களுக்கும்... சுழற்சி முறையில் ஏழு, சிறப்பான முறையில் நான்கு என்றவாறு பதினோரு பெயர்கள் சூட்டப் பட்டிருகின்றன. அவை: பவம், பாலவம், கௌலவம், தைதுளை, கரசை, வனசை, பத்திரை, சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிமிஸ்துக்கினம்.

திதி-கரணம் ஆகியவை முற்றிலும் அறிவியல்ரீதியாக வான சாஸ்திர முறைப்படி கணக்கிடப்படுவதாகும். சூரியனை (3651/4 நாட்களில்) சுற்றிவரும் பூமியானது, ஒவ்வொரு நாளும் எத்தனை டிகிரி கடந்துள்ளது என்பதையும், சந்திரன் பூமிக்கு எந்தப் பகுதியில் அமைந்துள்ளது என்பதையும் வைத்துக் கணக்கிடப்படும். திதிகளின் பகுதியாக அமைவது கரணம். அந்தந்த திதிக்கு உரிய சாதகமான மற்றும் பாதகமான நேரங்களைப் பகுத்தறிய கரணம் பயன்படுகிறது. பவம் முதல் பத்திரை வரையிலான கரணங்கள் சாதகமான நேரத்தையும், சகுனி முதல் கிமிஸ்துக்கினம் வரையிலான நான்கு கரணங்கள் பாதகமான நேரத்தையும் குறிக்கும். பஞ்சாங்கத்தில் கரணம் என்ற தலைப்பில், ஒவ்வொரு நாளுக்கு உரிய கரணங்கள், நாழிகை- விநாடியாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

நட்சத்திரங்கள்

பூமியைச் சுற்றி வரும் சந்திரன், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் இருக்கிறதோ, அந்தப் பிரிவுக்கு உரிய நட்சத்திரம் அந்த நேரத்தில் நடப்பதாகச் சொல்வர். இது, ராசிச் சக்கரத்தை ஒவ்வொன்றும் 13.33 பாகையாகப் பிரித்து கணக்கிடப்படும் 27 நட்சத்திரங்களைக் குறிக்கும்.  எளிதாகச் சொல்வதானால், குறிப் பிட்ட நாளில் சந்திரனுக்கு மிக அருகில் தெரியும் நட்சத்திரம்தான் அந்த நாளுக்கு உரிய நட்சத்திரம் என்கிறோம். ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் அன்றைய தினத்துக்குரிய நட்சத்திரமானது

பஞ்சாங்கத்தில் இருந்து குறிக்கப்பட்டு, அது அந்தக் குழந்தையின் நட்சத்திரமாக சொல்லப்படுகிறது.

27 நட்சத்திரங்களின் பெயர்கள்: அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி.

பஞ்சாங்கத்தைப் பார்க்க விரும்புகிறவர்களும், ஜோதிடம் கற்க விரும்புகிறவர்களும் இந்த 27 நட்சத்திரங்களின் பெயர்களையும், அவை அமைந்துள்ள ராசியின் பெயர்களையும் மனப்பாடமாகத் தெரிந்துகொள்வது நல்லது.

ராசிகள்

பூமி சூரியனைச் சுற்றி வரும் சுழற்சியையும், சந்திரன் பூமியைச் சுற்றிவரும் சுழற்சியையும் ஆதாரமாகக் கொண்டு 12 ராசிகள் வகுக்கப்பட்டுள்ளன. அவை: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

இந்த ராசிகளில் அமையும் நட்சத்திரக் கூட்டங்களின் வடிவமைப்பை வைத்து இவற்றுக்குப் பெயரிடப்பட்டுள்ளன. பன்னிரு ராசிகளின் சின்னங்களும் அருகில் படத்தில் உள்ளவாறு குறிப்பிடப்படுகின்றன.

27 நட்சத்திரங்களின் நேரமும் 12 ஆல் பிரிக்கப்பட்டு, ஒரு ராசிக்கு இரண்டேகால் நட்சத்திரமாக அமைகிறது. அதாவது, ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு ராசியிலும் கீழ்க்காணும்படி அமைகிறது.

மேஷம்: அஸ்வினி, பரணி, கார்த்திகை முதல் பாதம்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4-ஆம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1 மற்றும் 2-ஆம் பாதம்.

மிதுனம்: மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2 மற்றும் 3-ஆம் பாதம்.

கடகம்: புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம் மற்றும் ஆயில்யம்.

சிம்மம்: மகம், பூரம் மற்றும் உத்திரம் முதல் பாதம்.

கன்னி: உத்திரம் 2, 3, 4 -ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1 மற்றும் 2-ஆம் பாதம்.

துலாம்: சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, மற்றும் 3 பாதம்.

விருச்சிகம்: விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

தனுசு: மூலம், பூராடம் மற்றும் உத்திராடம் முதல் பாதம்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4 -ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1 மற்றும் 2 -ஆம் பாதம்.

கும்பம்: அவிட்டம் 3, 4 -ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2 மற்றும் 3-ஆம் பாதம்.

மீனம்: பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி மற்றும் ரேவதி.

இதில் கார்த்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் இரண்டு ராசிகளில் அமைந்துள்ளதைக் காணலாம். இந்த நட்சத்திரங்களுக்கு உரியவர்கள், தாங்கள் பிறந்த தேதியில் பஞ்சாங்கப்படி

அந்த நட்சத்திரத்துக்கு உரிய பாதங்களையும், அதற்கு உரிய ராசிகளையும் தெரிந்துகொள்வது அவசியம். ஜாதகக் குறிப்பு தரும் ஜோதிடர்கள் இதனைக் குறித்துத் தருவார்கள். இந்த நட்சத்திரங்களுக்கு உரியவர்கள் ஆலயங்களுக்குச் சென்று அர்ச்சனை செய்யும்போது, தமது ராசியையும் சேர்த்துச் சொல்வது நலம்.

அஸ்வினி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம், மகம், பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 18 நட்சத்திரங்களும் ஒரு ராசியில் மட்டுமே அமைவதால், இந்த நட்சத்திரங்களுக்கு உரியவர்கள் பெயரையும், நட்சத்திரத்தையும்  சொன்னதும், அர்ச்சகர்கள் அதற்குரிய ராசிகளைக் குறிப்பிட்டு அர்ச்சனை செய்வார்கள்.

நட்சத்திரங்கள் நமது வாழ்க்கையில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. பிறந்த நட்சத்திரத்தின்படி ஒருவரின் குணாதிசயங்கள், நடை- உடை- பாவனைகள், செய்யும் தொழில், வாழ்வில் ஏற்படும் உயர்வு-தாழ்வுகள் பற்றி ஜோதிட சாஸ்திரத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். நட்சத்திரங்கள் அனைத்தும் நல்ல நட்சத்திரங்கள்தான். ஆனால் சம்பிரதாயம், கலாசார அடிப்படையில் இது நல்ல நட்சத்திரம், இது யோகமானது, இது அசுபமானது என்றெல்லாம் நினைத்து நம்மில் பலரும் குழம்பிக் கொண்டிருக்கிறோம். இது தேவையில்லாதது.

ஒரே நட்சத்திரத்தில் பிறந்த இருவர் முற்றிலும் மாறுபட்டவர்களாக இருக்கலாம். ஒருவர் அதிர்ஷ்டசாலியாக இருக்கலாம். மற்றவர் துரதிர்ஷ்டசாலியாக இருக்கலாம். இதற்கெல்லாம் என்ன காரணங்கள்?

- தொடரும்...


ஆயுள்... உத்யோகம்... நல்ல வீடு!

ஆயுள் விருத்தி: லக்னாதிபதி, 8-ஆம் இட அதிபதி, ஆயுள்காரகனான சனி, உடல்காரகன் சந்திரன் ஆகியோர் வலுத்து, குருவின் பார்வையைப் பெறும் நிலை அமைந்தால் ஆயுள் விருத்தி ஆகும்.

அரசு உத்தியோகம்: ராஜக்கிரகங்களான சூரியனும் குருவும் ஒன்று சேர்ந்து வலுத்திருந்தாலும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் அரசு உத்தியோகம் கிடைக்கும்.

கோயில் திருப்பணி: 4-ஆம் வீட்டுக்கு அதிபதியும், 10-ஆம் வீட்டுக்கு அதிபதியும் ஒன்று கூடி வலுத்திருந்தால், அந்த ஜாதகர் கோயில் திருப்பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவார்.

பொன், பொருள் சேர்க்கை: 9-ஆம் வீட்டோன் 11-ல் அமர்ந்து, 11-ஆம் வீட்டோன்  தன் வீட்டில் உள்ள 9-ஆம் வீட்டோனைப் பார்க்கும் நிலை அமைந்த ஜாதகருக்கு ஏராளமான பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

1, 2, 4, 5, 7, 9, 10, 11-ஆம் அதிபர்கள் பரிவர்த்தனை அடைந்திருந்தால் சுகபோக இல்லம் அமையும். அதேபோன்று அசுப கிரகங்கள் கேந்திரங்களிலோ அல்லது 7, 8 ஆகிய ஸ்தானங்களிலோ இருந்தாலும் சுகபோகமுடைய வீடு அமைந்துவிடும்.

லக்னம், சூரியன், சந்திரன் ஆகியவை ஆண் ராசிகளில் இருக்க பகலில் பிறந்த ஆண் ஜாதகர் மகா பாக்கிய யோகத்தைப் பெறுகிறார். இரவில் பிறந்த பெண் ஜாதகர் அனைத்து பாக்கியங்களையும் பெறுகிறார்.

நான்காம் வீடு சுகஸ்தானம். நான்காம் வீட்டோனும் சுக்கிரனும் ஒன்றுகூடி குருவால் பார்க்கப்பட்டிருந்தாலும் நான்காம் வீட்டோன் சுக்கிரனாகி வலுப் பெற்றிருந்தாலும் சுகபோக இல்லம் அமையும்.

- கே.குமார், ஆர்.பாரதி