Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2014 ஆங்கிலப் புத்தாண்டு இலவச ராசிபலன்கள்

வாசக நேயர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ப்புத்தாண்டு புதன்கிழமை, அமாவாசை, மூல நட்சத்திரம், அமிர்தயோகம், விருத்தி யோகம், சதுஷ்பாதம் கரணம், கன்னியா லக்னத்தில் பிறக்கிறது.

லக்னத்தில் செவ்வாய்; 2-ஆமிடத்தில் சனி உச்ச ராசியில் இருப்பது விசேடமாகும். சனியுடன் ராகு சேர்ந்திருக்கிறார். 4-ல் சூரியன், சந்திரன், புதன்;  5-ல் வக்கிர சுக்கிரன்; 8-ல் கேது; 10-ல் வக்கிர குரு அமர்ந்திருக்க, இப்புத்தாண்டு உதயமாகிறது.

குருவும் புதனும் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள். 4, 10-ஆம் வீட்டுக்குரியவர்களின் பரிவர்த்தனை ஆகும் இது. விசேடமானது. குரு வீட்டில் புதனும் புதன் வீட்டில் குருவும் அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது சிறப்பாகும்.

சனியும் சுக்கிரனும் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள். 2, 5-ஆம் வீட்டுக்குரியவர்களின் பரிவர்த்தனை ஆகும் இது. இந்தப் பரிவர்த்தனை ஓரளவு சிறப்பானது.
 
சனி பலத்தால் நாடு நல்ல முன்னேற்றத்தை அடையும். தொழில் வளம் பெருகும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள், கறுப்பு நிறப்பொருட்கள், கச்சாப் பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல வளர்ச்சி காணலாம். தொழிலாளர்களின் திறமை வெளிப்படும். விளைபொருட்கள் லாபம் தரும். விவசாயம் பெருகும்.
 
சனி ராகுவுடன் சேர்ந்ததாலும், 8-ல் கேது இருப்பதாலும் உள்நாட்டு குழப்பம் ஏற்படும். அயல்நாட்டவர்களால் பிரச்னைகள் சூழும்.  சனியும் ராகுவும் காற்று ராசியில் இருப்பதால் ஆகாயம், காற்று, மழை, இடி, மின்னல் போன்றவற்றால் சங்கடங்கள் ஏற்படும். வான் வழிப்பயணம் செய்பவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும். காற்றின் மூலம் பரவக்கூடிய தொற்றுநொடிகள் அதிகமாகும்.

இயல், இசை, நாடகம் போன்ற கலைத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வெற்றிகள் குவியும்.

4-ல் சூரியனும் சந்திரனும் புதனும் இருப்பதால் எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட துறைகள் வளர்ச்சி பெறும். வியாபாரம் பெருகும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் தகவல் தொடர்பு இனங்களைச் சார்ந்தவர்கள் ஆகியோருக்கெல்லாம் விசேடமான நன்மைகள் இந்த ஆண்டில் உண்டாகும்.

செவ்வாய் லக்னத்தில் இருப்பதால் கலவரங்கள், சண்டை, சச்சரவுகள், விபத்துக்கள் ஆகியவை அதிகரிக்கும்.

குரு வலுத்திருப்பதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். ஆன்மிக நாட்டம் கூடும்.
தெய்வ காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

எண் கணிதப்படி

2014. 2+0+1+4=7.  இந்த ஆண்டின் நாயகன் கேது ஆவார்.

கேது மேஷத்தில் இருக்கிறார். செவ்வாயின் வீடு. ஆண் ராசி. நெருப்பு ராசி. சர ராசி. ஒற்றை ராசி.

இந்த ஆண்டு பிறப்பதும் கேதுவின் நட்சத்திரமான மூலத்தில் தான்.

இதனால் கேதுவின் ஆதிக்கம் மேலும் கூடும்.

கேது செவ்வாயைப் போல் பலன் தருபவர் ஆவார். அவர் செவ்வாயின் வீட்டிலேயே இருப்பதால் பலம் கூடப் பெறுவார்.

கேது மோட்ச காரகராகி, மோட்சத் திரிகோணத்தில், செவ்வாயின் வீட்டில் அமர்ந்திருப்பதால் தெய்வப்பணிகளில் ஈடுபாடு அதிகமாகும். இக லோக சுகங்களில் ஈடுபாடு குறையும். எல்லோரும் மோட்சம் பெறுவதற்கான ஞான மார்க்கத்திலும் பக்தி மார்க்கத்திலும் ஈடுபடுவார்கள்.

த்யானம், யோகா, மற்றும் மன வளக்கலைகள் பெருகும்.

சித்தர்கள், ஞானிகள், யோகிகள், தவச் சிரேஷ்டர்கள் ஆகியோர் நாட்டையும், நாட்டு மக்களையும் நல்வழிப்படுத்துவார்கள். தெய்வ காரியங்களில் மக்கள் முழு நம்பிக்கையுடன் ஈடுபடும் ஆண்டு இது.

ஜோதிடம், கணிதம், ஆன்மிகம், அறநிலையம், எழுத்து, பத்திரிகை, இசை, நாடகம், மருத்துவம், சட்டம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும் ஆண்டு இது.

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கும், ஜூலை மாதம் பிறந்தவர்களுக்கும், கேதுவின் நட்சத்திரங்களான அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும், மேஷ, விருச்சிக ராசிகளில் பிறந்தவர்களுக்கும், ஜாதகத்தில் கேது வலுத்து,  தற்சமயம் கேது தசையோ, கேது புக்தியோ நடப்பவர்களுக்கும் இந்த ஆண்டில் விசேடமான நன்மைகள் உண்டாகும்.

பொதுவாக இந்தப் புத்தாண்டில் ரிஷப, சிம்ம, துலா, தனுசு, கும்ப ராசிக்காரர்களுக்கு 19-6-2014 வரையிலும், அதன்பிறகு மிதுன, கன்னி, விருச்சிக, மகர, மீன ராசிக்காரர்களுக்கும் நற்பலன்கள் உண்டாகும்.

ஒவ்வொருவருக்கும் ஜனன கால ஜாதகம் என்று ஒன்று உண்டு. ஜாதகப்படி சுப யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடப்பவர்களுக்கு இப்புத்தாண்டில் நற்பலன்கள் அதிகரிக்கும்.

கோசாரமும், தசா புக்தியும் சாதகமாக உள்ளவர்களுக்கு சுப பலன்கள் இரட்டிப்பாகும்.

கோசாரப்படியும், தசாபுக்திப்படியும் கிரகநிலை சிறப்பாக இல்லாதவர்களுக்குக் கெடுபலன்கள் உண்டாகும்.  அப்படிப்பட்டவர்களும் தெய்வப்பணிகளில் முழு நம்பிக்கையுடன் ஈடுபட்டால் கெடுபலன்களைக் குறைத்துக் கொள்ளமுடியும். பரிகார சாஸ்திரப்படி ஜாதகப்படி பலவீனமாக உள்ள கிரகங்களைக் கண்டறிந்து கிரகப் பிரீதி செய்து கொள்ளலாம்.

செவ்வாய்க்கிழமைகளில் விநாயகப் பெருமானை வழிபடுபவர்களுக்கு நல்லதே நடக்கும். கணபதி ஜபம், ஹோமம் செய்வது சிறப்பாகும். கூட்டு வழிபாட்டிலும் கலந்து கொள்ளலாம். கணபதி ஹோமம் நடக்கும் இடம் சென்று அதில் கலந்து கொள்வதன் மூலமாகவும் நலம் உண்டாகும்.

இனி ஒவ்வொரு ராசிக்காரருக்கும் இந்தப் புத்தாண்டில் விளையக்கூடிய பொதுப்பலன்களைப் பார்ப்போம்.

 

மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம்
தனுசு மகரம் கும்பம் மீனம்